சிர்சி - கண் கவர் சுற்றுலாத் தளம்

பசுமையான காடுகளும், உயரமான நீர்வீழ்ச்சிகளும், தொன்மையான ஆலயங்களும் சேர்ந்து சிர்சி நகரத்தை உத்தர கன்னடா மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாக மாற்றி இருக்கிறது. பெங்களூரிலிருந்து 425 கிலோ மீட்டர் தொலைவில் காணப்படும் மேற்கு தொடர்ச்சி மலையில் சிர்சி அமைந்துள்ளது.

சிர்சி அருகில் உள்ள தோனிஹாலாவிலிருந்து தொடங்கும் அஹனாஷினி நதி, சிர்சியின் மலை குன்றுகளை கடந்து சிறப்பு வாய்ந்த பல அழகிய அருவிகளை உருவாக்குகிறது. சிர்சியில் தவறாமல் பெய்யும் பருவ மழையும், வளமையான வெப்பமண்டல காடுகளும் சுற்றுலா பயணிகளை ஆண்டு தவறாமல் இங்கு அழைத்து வருகிறது.

சிர்சியின் சிறப்பு வாய்ந்த கோயில்களில் ஒன்று 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மாரிகம்பா கோயில். இங்கு காணப்படும் கவி ஓவியங்களை ரசிக்கவும், ஏழு அடி நீள மாரிகம்பா மர விக்ரகத்தை காணவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆர்வத்தோடு வருவர்.

கி.பி.1611-இல் நகரத்துக்கு வெளியே ஒரு குளத்தில் கண்டெடுக்கப்பட்ட மாரிகம்பாவின் சிலைக்கு சதாசிவ ராவ் இரண்டாம் மன்னர் அதே ஆண்டில் கோயில் எடுப்பித்தார்.மாரிகம்பாவில் ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் பல்வேறு பகுதிகளிலிருந்து, அனைத்து மதத்தினவரும் பாரபட்சமின்றி கலந்து கொண்டு கடவுளை தரிசிப்பர்.

அதே போல் சிர்சியின் மகா கணபதி கோயிலும் மிகவும் பிரபலம். மக்கள் ஏதேனும் புதிய வேலையை தொடங்குவதற்கு முன் மகா கணபதியின் ஆசி பெற்று தொடங்கினால் தொழிலில் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பது ஆன்றோர்களின் வாக்கு.

அதோடு பனவாசியும், சஹஸ்ரலிங்கமும் சிர்சிக்கு வரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய இடங்கள். பனவாசி முன்பொரு காலத்தில் கர்நாடகாவின் தலை நகரமாக விளங்கியது.சஹஸ்ரலிங்கத்தில் உள்ள அடர்ந்த காடுகளில் இருக்கும் நதிகளில் ஆயிரக்கணக்கான சிவலிங்கங்கள் நீரில் அமிழ்ந்து காட்சியளிக்கின்றன.

Please Wait while comments are loading...