கோகர்ணா - ஆலயங்களும், வெண்மணலும்

கர்நாடக மாநிலத்தின் உத்தரகன்னட மாவட்டத்தில் அமைந்திருக்கும் இந்த கோகர்ணா நகரம் ஒரு முக்கிய ஆன்மீக யாத்ரீக ஸ்தலமாகவும், இங்குள்ள அழகிய கடற்கரைகளுக்காக ஒரு உல்லாச சுற்றுலா மையமாகவும் பிரசித்தி பெற்றுள்ளது. இது அகனாஷினி மற்றும் கங்காவலி என்ற இரண்டு ஆறுகள் ஒன்று சேருமிடத்தில் அமைந்துள்ளது. இந்த ஆறுகள் சேருமிடம் ஒரு பசுவின் காதைப்போல் காணப்படுவதாலேயே இந்த நகருக்கு ‘கோகர்ணா’ என்ற பெயர் வந்துள்ளது. (கோ-பசு; கர்ணம் -காது).

இங்குள்ள மஹாபலேஷ்வரர் சிவன் கோயில் இந்தியாவிலுள்ள ஹிந்துக்களுக்கு குறிப்பாக சைவ மார்க்கத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு புனித ஸ்தலமாக விளங்குகிறது. சைவத் தமிழ்ப் புலவர்களான அப்பர் சம்பந்தர் போன்றோரின் பாடல்களில் இந்தக்கடவுள் துளு நாட்டு இறைவன் என்ற பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடம்ப வம்சத்தினரின் ஆளுகைக்குள் இருந்த இப்பகுதி பின்னாளில் விஜயநகர அரசர்களின் கீழ் இருந்து இறுதியாக போர்த்துகீசிய ஆக்கிரமிப்பிற்கு உட்பட்டுள்ளது.

ஒரு சிறு வரலாற்றுப்பின்னணி

கோகர்ணாவில் உள்ள மஹாபலேஷ்வரர் கோயிலில் உள்ள சிவலிங்கம் ராவணனால் கைலாசத்திலிருந்து கொண்டு வரப்பட்டதாக கருதப்படுகிறது.  தவத்தின் மூலமாக ராவணனுக்கு ஆத்மலிங்கம் எனப்படும் இந்த விசேஷ லிங்கம் சிவபெருமானால் அனுக்கிரகிக்கப்பட்டது.

வெல்லமுடியாத சக்தியை தரக்கூடிய இந்த லிங்கம் ராவணனிடம் இருந்தால் ஆபத்து என்று கருதிய தேவர்கள் கணேசக்கடவுள் உதவியுடன் தந்திரமாக ராவணனை இந்தக் கோயில் அமைந்துள்ள ஸ்தலத்தில் லிங்கத்தை விட்டுச்செல்லும்படி செய்ததாக புராண ஐதீகம் கூறுகிறது.  

மஹாபலேஷ்வரர் கோயிலைத்தவிர இங்கு இதர முக்கியமான கோயில்களாக மஹா கணபதி கோயில், பத்ரகாளி கோயில், வரதராஜா கோயில் மற்றும் வெங்கட்ரமணா கோயில் போன்றவையும் அமைந்துள்ளன.

கடற்கரைகளும் மணற்பரப்பும்

கோவை கடற்கரைகளோடு போட்டியிடும் அளவுக்கு அழகான கடற்கரைகளைப் பெற்றுள்ள கோகர்ணா கடற்கரை தற்சமயம் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்த்து வருகிறது. குட்லே பீச், கோகர்ணா பீச், ஹாஃப் மூன் பீச், பாரடைஸ் பீச் மற்றும் ஓம் பீச் போன்ற ஐந்து கடற்கரைகள் இங்குள்ள முக்கியமான கடற்கரை சுற்றுலா அம்சங்களாக விளங்குகின்றன.

இவற்றில் குட்லே பீச் என்பது இருப்பதிலேயே பெரிய கடற்கரையாக பிரசித்தி பெற்றிருப்பதுடன் முக்கிய சுற்றுலாப்பருவங்களில்(நவம்பர் – பிப்ரவரி) அதிக பயணிகள் குவியும் இடமாகவும் உள்ளது. இருப்பினும் இங்கு நீச்சலில் ஈடுபடுவது அபாயகரமானது என்பது குறிப்பிடத்தக்கது.

ஓம் பீச் என்பது ‘ஓம்’ எனும் குறியீட்டு வடிவத்தில் அமைந்துள்ள கடற்கரை ஆகும். அப்படி ‘ஓம்’ வடிவத்தில் காணப்படும் வளைவுப்பகுதியில் உருவாகியுள்ள குளம் போன்ற அமைப்பில் ஆழம் குறைவாக இருப்பதால் அதில் பயமின்றி பயணிகள் குளித்து மகிழலாம்.

ஹாஃப் மூன் பீச் என்று அழைக்கப்படும் கடற்கரை ஓம் கடற்கரையிலிருந்து 20 நிமிட நடைப்பயண தூரத்தில் உள்ளது. ஒரு மலையைச்சுற்றிக்கொண்டு இந்த கடற்கரைக்கு வர வேண்டியுள்ளது. அரை நிலாவைப்போன்றே வடிவம் கொண்டுள்ளதால் இது அரை நிலா கடற்கரை என்று அழைக்கப்படுகிறது.

பாரடைஸ் பீச் என்பது பாறைகள் நிறைந்த  ஒரு தனிமையான அழகான கடற்கரை என்பதால் இப்படி ஒரு ரசனையான பெயர் வைக்கப்பட்டுள்ளது.  பாறைகளில் ஆவேசமாக மோதும் அலைகளுடன் கூடிய இந்தக் கடற்கரையும் நீச்சலுக்கோ குளிப்பதற்கோ ஏற்றதல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

ஆன்மீக யாத்ரீக ஸ்தலம் மற்றும்  பொழுதுபோக்கு சுற்றுலாத்தலம் என்ற இரண்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதால் இந்த கோகர்ணா நகரம் விசேஷ சுற்றுலா நகரமாக அறியப்படுகிறது.

Please Wait while comments are loading...