கார்வார் - கொங்கணக் கடற்கரையின் ராணி

கார்வார் நகரம் இந்திய தீபகற்பத்தின் மேற்குக் கடற்கரையில் கோவா மாவட்டத்திலிருந்து 15 கி.மீ தூரத்திலும் பெங்களூரிலிருந்து 520 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. உத்தர கன்னட மாவட்டத்துக்கு தலைநகரமாக இருக்கும் இந்த நகரம் 15ம் நூற்றாண்டு முதற்கொண்டே பரபரப்பாக இயங்கி வரும் ஒரு வியாபார கேந்திரமாக விளங்கி வந்துள்ளது.  

வாசனைப்பொருட்களை அதிக அளவில் விளைவிக்கும் கேரளாவிற்கு அருகிலுள்ள இது ஒரு இயற்கைத் துறைமுகம் என்பதால், வரலாற்றுக்காலத்தில் போர்த்துகீசியர்கள், ஆங்கிலேயர்கள், அரேபியர்கள் போன்ற கடலோடிகளுக்கும் தற்சயம் இந்திய அரசாங்கத்தின் கடற்படைக்கும் இந்த துறைமுகம் மிக முக்கிய இடமாக திகழ்கிறது.

கார்வாருக்கு மிக அருகில் காளி ஆறு அரபிக்கடலுடன் கலக்கிறது. இந்த ஆற்றின் பாலத்துக்கருகில் பிரசித்தி பெற்ற சதாசிவகுட் கோட்டை அமைந்துள்ளது.

இங்குள்ள ஆறும், அதன் பாலமும், அருகில் கோட்டையும் பின்னணியில் அசைந்தாடும் தென்னை மரங்களும் மறக்கவே முடியாத ஒரு அற்புத காட்சியை சுற்றுலாப்பயணிகள் மனதில் ஓவியமாக தீட்டுகின்றன.

கார்வார் பிரதேச கலாச்சாரமும் இதர அம்சங்களும்

திப்பு சுல்தானால் ஆளப்பட்ட வரலாற்று பின்னணி மற்றும் பிரிட்டிஷ், போர்த்துகீசிய மதப்பிரச்சாரகர்களால் விஜயம் செய்யப்பட்ட பகுதியாக இருப்பதாலும், கோவாவுக்கு மிக அருகில் இருப்பதாலும் இது கணிசமான முஸ்லிம் மற்றும் கிறித்துவ மக்கள்தொகையை கொண்டுள்ளது.

கார்வாரின் பூர்வகுடிகளாக அறியப்படும் ‘உத்தரகன்னட பழங்குடிகள்’  இந்த பிரதேசத்தின் மக்கள் தொகையில் 55 சதவிகிதம் அடங்கியுள்ளனர். இவர்கள் கன்னட மொழியை பேசுவதில்லை என்பதும் அவர்களின் பிரத்யேக தாய் மொழியான ‘கொங்கணி’யை பேசுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கொங்கணி மொழியை தாய் மொழியாகக் கொண்டு கோவாவுக்கு அருகில் இருக்கும் கொங்கணப்பிரதேசமான இந்த கார்வார் பகுதி கர்நாடக மாநிலத்தின் ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது.

பார்த்து மகிழவும், அனுபவிக்கவும் ஏராளம்

துறைமுகத்துக்கு அடுத்த படியாக இங்கு மீன் பிடிப்பும், சுற்றுலாவும் இரண்டு முக்கியமான பொருளாதாரமாக விளங்குகின்றன. தூய்மையுடன் தங்க நிறத்தில் ஜொலிக்கும் கடற்கரைகளும் அதைச் சுற்றிலும் தென்னை மரங்களும், தேக்கு மரங்களும் சூழ்ந்த  மாசுமருவில்லாத இயற்கை அழகும் பயணிகளுக்கு கிடைக்கும் ஒரு அரிதான சொர்க்கம் எனலாம்.

நீர் விளையாட்டுகளான ‘ஸ்நார்கெலிங்’, நீச்சல், அலைச்சறுக்கு விளையாட்டு, முக்குளிப்பு போன்றவற்றை இங்குள்ள தேவ் பாக், கூடி, காடி பாக் போன்ற கடற்கரைகளில் சாகசப்பயணிகள் அனுபவிக்கலாம்.

 இங்கு வரலாற்று புகழ் பெற்ற கோயில்களும், தேவாலயங்களும், மசூதிகளும், சமாதி மண்டபங்களும் சுற்றுப்பார்க்க ஏராளம் உள்ளன. புராதன கலைப்பொருட்களும் அற்புதமான கட்டிடக்கலை சின்ன ங்களும் இங்கு மிகுந்து காணப்படுகின்றன.

கடந்த பத்தாண்டுகளாக இந்தியக் கடற்படை தன் பிரதான கேந்திரமாக இங்குள்ள துறைமுகத்தை பயன்படுத்துவதால் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த துறைமுகப்பகுதி பொதுமக்கள் விஜயம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.

Please Wait while comments are loading...