மால்பே - சூரியன், மணல் மற்றும் அலைகளின் எழில்கோலம்

கோயில் நகரமான உடுப்பியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஒரு அழகிய கடற்கரை நகரம் இந்த மால்பே ஆகும். இது கர்நாடகக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு இயற்கைத் துறைமுகம் மற்றும் முக்கியமான மீன்பிடி நகரம் ஆகும். உதயவரா ஆற்றின் முகத்துவார (உப்பங்கழி) பகுதியில் அமைந்திருப்பதால் இது பிரமிக்க வைக்கும் எழில் நிறைந்த சிற்றுலா (பிக்னிக்) ஸ்தலமாக காட்சியளிக்கின்றது.

மால்பேயில் முக்கிய சுற்றுலா அம்சங்கள்

மால்பேயில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களில் குறிப்பிடத்தக்கது இங்கு கடற்கரைக்கு அருகிலேயே காணப்படும் எரிமலைப்பாறைகளால் ஆன பாறைத்தீவுகளாகும். இவற்றில் வித்தியாசமான் வடிவ அமைப்பு மற்றும் தோற்றத்துடன் காட்சியளிக்கும் செயிண்ட் மேரி பாறைத்தீவு எரிமலை பாறைக்குழம்பு படிவங்களால் காணப்படுகிறது. பல யுகங்களுக்கும் முன்னால் நிகழ்ந்த எரிமலை வெடிப்பில் இவை உருவாகியுள்ளன என்பது பிரமிக்க வைக்கும் புவியியல் உண்மையாகும்.

இந்தியாவில் புவியியல் சார்ந்த சுற்றுலா அம்சங்களைக் கொண்ட ஸ்தலங்களில் இந்த மால்பே நகரம் முக்கியமான ஒன்று என்பதால் புவியியல் ஆராய்ச்சியாளர்களுக்கு இது ஒரு முக்கிய கவர்ச்சி நகரமாக விளங்குகிறது.

இதர சுற்றுலா அம்சங்களாக இங்குள்ள முக்கியமான கோயில்களான பலராமர் கோயில் மற்றும் அனந்தீஸ்வரர் கோயில் போன்றவற்றை குறிப்பிடலாம். பஸவப்ப நாயக்கரால் கட்டப்பட்டதாக கூறப்படும் கோட்டை ஒன்றும் இங்குள்ள பாறைத்தீவு ஒன்றில் அமைந்துள்ளது.

மால்பே நகருக்கு வருகை தரும் பயணிகள் இங்குள்ள முக்கியமான பாறைத்தீவான செயிண்ட் மேரி தீவுக்கு ஃபெர்ரி எனப்படும் சொகுசு மோட்டார் படகு அல்லது படகு மூலமாக செல்லலாம். இங்கு தங்க நிற மணற்பரப்புடன் மாசு மறுவற்று ஜொலிக்கும் கடற்கரையும், காற்றில் அசைந்தாடும் தென்னை மரங்களும், ஸ்படிகம் போன்று ஒளிரும் அமைதியான தண்ணீரும் உங்களை மெய் மறக்க செய்து விடும் காட்சியை அளிக்கின்றன. இந்த அமைதியான நீரில் ஆழம் பற்றிய கவலை இல்லாமல் சுற்றுலாப்பயணிகள் நீந்தி மகிழலாம். அலையேற்ற காலத்தின்போது இந்த கழிமுகப்பகுதியில் 10 கி.மீ தூரத்துக்கு படகில் பயணம் செய்தும் இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்.

உள்ளூர் சிறப்பம்சங்கள்

மீன்பிடி தொழில் தவிர்த்து தென்னை வளர்ப்பு மற்றும் ஓடு தயாரிப்பு போன்றவையும் இந்தப்பகுதியின் பிரதானமான தொழில்களாக விளங்குகின்றன. இங்குள்ள புவி அமைப்பு மற்றும் விசேஷ இயற்கை அம்சங்கள் போன்றவை ஏராளமான சுற்றுலாப்பயணிகளை கவர்வதால் இங்கு சுற்றுலா தொடர்பான தொழிலும் தீவிரமாக நடைபெறுகிறது.  துளு, கொங்கணி மற்றும் கன்னட மொழிகள் இப்பகுதியில் பேசப்படுகின்றன.

பயணிகளின் வசதிகளுக்கேற்ப பல ‘பீச் ரிசார்ட்டுகள்’ மால்பே’யைச் சுற்றிலும் அமைந்துள்ளன. முக்கிய நகரமான உடுப்பிக்கு அருகிலேயே மால்பே அமைந்துள்ளதால் இங்கு விஜயம் செய்யும்போது உங்களுக்கு சுற்றிப்பார்க்க ஏராளமான அம்சங்களும் காத்திருக்கின்றன. ‘தி பாரடைஸ் ஐல் பீச் ரிசார்ட்’ மற்றும் உடுப்பி பகுதியில் உள்ள  ‘தி பாம் க்ரோவ் பீச் ரிசார்ட்’ போன்றவை இங்கு அருகில் உள்ள முக்கியமான ‘ரிசார்ட்’ வகை விடுமுறை வாசஸ்தலங்களாகும்.

இந்த மால்பே கடற்கரைகள் உலகப்புகழ் பெற்றுள்ள கரீபியன் கடற்கரைகளுக்கு இணையான இயற்கை அழகு கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது. சலனமற்ற நீரும் தீட்டப்பட்ட ஓவியம் போன்றே காட்சியளிக்கும் நீல வானப் பின்னணியுடனும் காட்சியளிக்கும் இந்த கடற்கரைப்பகுதி இந்தியாவின் எழில் பிரதேசங்களில் ஒன்றாகும். செயிண்ட் மேரி தீவுக்கு படகில் பயணிக்கும்போது இந்த அழகை நீங்கள் கண்டு ரசிக்கலாம்.

புவியியல் ரீதியாகவும் சுற்றுப்புற சூழலியல் அம்சங்களுக்காகவும் இப்பிரதேசம் உள்ளூர் மக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்களால் பெரிதும் மதிக்கப்படுவதால் இதன் தூய்மை மற்றும் பரிசுத்தத்தை பேணுவதில் இவர்கள் அக்கறை காட்டுகின்றனர். எனவே நீங்கள் மால்பே’க்கு விஜயம் செய்யும்போது இந்த விஷயங்களில் ஒரு பொறுப்புள்ள பயணியாக விளங்குவது அவசியமாகும்.

Please Wait while comments are loading...