சிக்மகளூர் – அமைதியற்ற மனங்களுக்கான சாந்தி ஸ்தலம்

கர்நாடக மாநிலத்தில் தன் பெயரையே மாவட்டமாக கொண்டு அமைந்துள்ளது இந்த சிக்மகளூர் நகரம். மிக அதிக எண்ணிக்கையில் சுற்றிலும் சுற்றுலாப்பகுதிகளை கொண்டுள்ள நகரமாக இது பிரசித்தி பெற்றுள்ளது. கர்நாடகத்தில் மலைசார்ந்த சதுப்பு நில பகுதியை அதிகமாக கொண்டுள்ள மலநாட் பகுதியை ஒட்டி அமைந்துள்ளது இந்த சிக்மகளூர் நகரம்.

சிக்மகளூர் என்ற பெயருக்கு சின்ன(இளைய) மகளின் ஊர் என்பது பொருள். ஒரு சரித்திர புகழ் பெற்ற குறுநில மன்னரின் இளைய மகளுக்கு கல்யாண சீராக கொடுக்கப்பட்ட ஊர் என்பதால் இந்த பெயர் வந்துள்ளது. இதே போன்று இன்னொரு ஊருக்கு ஹைரேமகளூர் (மூத்த மகளின் ஊர்) என்ற பெயரும் உள்ளது. அதுவும் தற்சமயம் சிக்மகளூர் மாவட்ட த்திலேயே அமைந்துள்ளது.

நகரமும் அதன் அழகும்

சிக்மகளூர் மிக பழமையான அழகுடன் விளங்கி இங்கு வருகை தரும் பயணிகளை சாந்தப்படுத்தும் இயல்புடன் விளங்கினாலும், அதைச்சூழ்ந்துள்ள பிரதேசம் பலதரப்பட்ட அம்சங்களுடன் கலந்து காணப்படுகிறது.

சமவெளிப்பகுதி மற்றும் மலைகள் நிறைந்த மலநாட் பகுதி இவற்றுடன் எண்ணற்ற காபி தோட்டங்களும் நிறைந்துள்ளதால் இது கர்நாடகாவின் காபி தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது.

சிக்மகளூர் நகரத்தில் முக்கிய சுற்றுலா அம்சமாக மஹாத்மா காந்தி பூங்காஅமைந்துள்ளது. பொதுவாக சுற்றுலா பயணிகள் தசரா திருவிழா மற்றும் அதையொட்டி வரும் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்களின் போது சிக்மகளூருக்கு வருகை தர விரும்புகின்றனர்.

அச்சமயம் இங்கு நடைபெறும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்  எந்த ஒரு பயணியையும் ஆச்சரியத்தில் மூச்சடைக்க வைக்கும் இயல்பு கொண்டவையாக உள்ளன.

ஷாப்பிங் பிரியர்களுக்கு ஏற்றவகையில் இங்கு எம். ஜி ரோடு மார்க்கெட் பகுதி அமைந்துள்ளது. சாகச பிரியர்களுக்கு ஏற்ற இதர அம்சங்களும் சிக்மகளூரைச் சுற்றிலும் நிறைந்துள்ளன.

கான்கிரீட் காட்டிலிருந்து ஒரு விடுதலை

புண்ணிய யாத்ரிக தலங்களிலிருந்து காபி தோட்டங்கள் வரை மற்றும் காட்டுயிர் பூங்கா, சாகச பொழுது போக்கு அம்சங்கள், மலை நகரங்கள், கோயில் நகரங்கள், நீர் வீழ்ச்சிகள் வனவிலங்கு சரணாலயங்கள் என்று அத்தனையையும் சிக்மகளூர் கொண்டுள்ளது.

சிக்மகளூருக்கு அருகிலுள்ள கெம்மங்குந்தி எனும் இடம் மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜா உடையாருக்கு மிகவும் பிடித்த மலை வாசஸ்தலமாகும். இங்கு ரோஜாத்தோட்டம் மற்றும் அழகிய நீர்வீழ்ச்சிகள் போன்றவை உள்ளன.

குத்ரேமூக் என்றைழக்கப்படும் மற்றொரு மலை வாசஸ்தலமும் சிக்மகளூருக்கு அருகில் அமைந்துள்ளது. பசுமையான புல்வெளிகளையும் அடர்ந்த காடுகளையும் கொண்ட இந்த இடம், ஒரு குதிரையின் முகம் போன்று தோற்றமளிக்கும் மலையை கொண்டுள்ளதால் குத்ரேமுக் என்று அழைக்கப்படுகிறது.

இப்பகுதியிலுள்ள பாபா புதான்கிரி மலைகளில் உள்ள முல்லயநகரி சிகரம் கர்நாடக மாநிலத்திலுள்ள மிக உயர்ந்த சிகரமாகும். 1930 மீட்டர் உயரமுள்ள இந்த சிகரம் மலையேற்றத்துக்கு மிக பொருத்தமான இடமாகும்.

சிகரத்திலிருந்து கீழே பார்த்தால் கீழே விரியும் கண்கவர் இயற்கை காட்சிக்காகவே, அந்த அற்புத அனுபவத்துக்காகவே இந்த சிகரத்தில் ஏறலாம். இந்த மலைப்பகுதியில் காளத்துகிரி நீர்வீழ்ச்சி அல்லது காளஹஸ்தி நீர்வீழ்ச்சி, இரண்டு பிரிவுகளாக பிரிந்துள்ள ஹெப்பே நீர்வீழ்ச்சி போன்றவை உள்ளன.

சிறு அருவிகளான மாணிக்யதாரா அருவி, ஷாந்தி அருவி, கடம்பி அருவி போன்றவையும் சிக்மகளூர் பகுதியில் காணப்படுகின்றன.

வனத்தையும் ஆன்மீகத்தையும் நோக்கிய ஒரு பயணம்

சிக்மகளூருக்கு அருகில் பல ஆன்மீக ஸ்தலங்களான சிருங்கேரி, ஹொரநாடு மற்றும் கலாசா போன்றவை உள்ளன. சிக்மகளூரிலிருந்து 38 கி.மீ அருகில் பத்ரா சரணாலயம் காட்டுயிர் சுற்றுலா விரும்பிகளின் அபிமான ஸ்தலம் ஆகும்.

இயற்கை அழகை அதன் முழு பிரம்மாண்டமத்தோடு ரசிக்க விரும்பும் இரும்பு மனம் கொண்டவர்கள் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்யலாம்.

மொத்தத்தில் சிக்மகளூர் நகரமும் அதன் மாவட்டமும் எல்லோருக்கும் பிடித்தமான ஏதோ ஒன்றை – அவர்களின் சொந்த ரசனைகளையெல்லாம் தாண்டிய ஏதோ ஒன்றை தன்னுள் கொண்டிருக்கிறது. அதை இங்கு வந்து அனுபவித்து பார்த்தால் மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.

Please Wait while comments are loading...