பாதாமி (வாதாபி) - சாளுக்கிய சாம்ராஜ்யத் தலைநகர்

கர்நாடக மாநிலத்தின் வடபகுதியில் பாகல்கோட் மாவட்டத்தில் சரித்திரப் பிரசித்தி பெற்ற இந்த பாதாமி நகரம் அமைந்துள்ளது. வாதாபி என்றும் அழைக்கப்படும் இந்த நகரம் 6ம் நூற்றாண்டிலிருந்து 8 நூற்றாண்டு வரை சாளுக்கிய வம்சத்தின் தலைநகரமாக விளங்கியிருக்கிறது. (பிரசித்தி பெற்ற தமிழ் எழுத்தாளர் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ என்ற பிரமாண்ட சரித்திர புதினத்தை நீங்கள் வாசித்திருக்கும் பட்சத்தில் – “அந்த வாதாபியா?” என்று உங்களால் வியக்காமல் இருக்க முடியாது. ஆம். மெய்சிலிர்க்க வைக்கும் பல சரித்திர நிகழ்வுகளுக்கான பின்னணிக்களமாக விளங்கிய அந்த ‘வாதாபி’ நகரம்தான் இது!)

பாதாமி என்கிற வாதாபி நகரின் வரலாற்றுப்பின்னணி

கீழைச்சாளுக்கிய வம்சம் அல்லது ஆதிச்சாளுக்கிய வம்சம் என்று அறியப்படும் ராஜவம்சத்துக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கும் மேலாக இந்த பாதாமி  (எ) வாதாபி தலைநகரமாக திகழ்ந்துள்ளது. 6 ம் நூற்றாண்டிலிருந்து 8 ம் நூற்றாண்டு வரை பெரும்பாலான (இன்றைய) ஆந்திர கர்நாடகப் பகுதிகளில் பரந்து விரிந்திருந்தது சாளுக்கிய சாம்ராஜ்யம்.

இரண்டாம் புலிகேசி மன்னரின் ஆட்சியின்போது சாளுக்கிய சாம்ராஜ்யம் உச்சத்திலிருந்தது. ஆனால் அந்த உச்சம் அவருடன் முடிந்துபோனது. பாதாமி என்ற வாதாபி நகரின் புகழும் அவருடன் மங்கிப்போனது.

மலைகளுக்கிடையே இயற்கையாய் அமைந்த ஒரு பள்ளத்தாக்குப்பகுதியில் உருவாக்கப்பட்டிருக்கிறது இந்த பாதாமி நகரம். தங்கநிற மணற்பாறைகளால் ஆன மலைகள் இந்த நகரைச்சுற்றி உயர்ந்தோங்கி நிற்கின்றன.

முதல் முறை விஜயம் செய்யும் எந்த ஒரு இந்தியப்பயணியும் இத்தனை நாள் இந்த அற்புத ஸ்தலத்தைப் பார்க்காமலா நாம் இந்தியாவில் இருந்தோம் என்று நாணாமல் இருக்க முடியாது. (அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் காணப்படும் கிராண்ட் கேன்யன் மலைகளைப்போன்று இந்த மலைகள் காட்சியளிப்பதை நேரில் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்).

வரலாற்றுக்கால இந்தியாவில் கோயிற்சிற்பக்கலை பிரதானமாக பரவி வளர்ந்த முக்கிய ஸ்தலங்களில் ஒன்றாக இந்த தென்னிந்திய நகரமான வாதாபி இருந்துள்ளதை நம்மால் கண்கூடாக காணமுடிகிறது. 

பாதாமி நகரம் இங்குள்ள குகைக்கோயில்களுக்கு புகழ் பெற்று அறியப்படுகிறது. பள்ளத்தாக்குப்பிரதேசத்தின் மையத்தில் அமைந்துள்ள ஏரிக்கு எதிரில் இந்த குகைக்கோயில்கள் காணப்படுகின்றன.

 பாதாமி குகைக்கோயில்கள்

பாதாமியில் ஐந்து குகைக்கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் நான்கு இந்துக் கோயில்களாகவும் ஒன்று ஜைனக் கோயிலாகவும் உள்ளது.

முதல் குகைக்கோயில்

சிவபெருமானுக்காக இந்த முதல் குகைக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக்கோயிலின் விசேஷம் இங்குள்ள ஐந்தடி உயரம் உள்ள நடராஜர் சிலையாகும். 18 கரங்களுடன் பல அபிநய முத்திரைகளுடன் இந்த சிற்பம் காட்சியளிக்கின்றது. ஒரு அற்புதமான மகிஷாசுரமர்த்தினி சிற்பமும் இந்தக்கோயிலில் காணப்படுகிறது.

இரண்டாவது குகைக்கோயில்

இந்த இரண்டாவது குகைக்கோயில் விஷ்ணுக்கடவுளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. பூவராக மற்றும் திரிவிக்கிரம அவதாரச் சிற்பங்கள் இந்த குகைக்கோயிலின் கிழக்கு மற்றும் மேற்குச்சுவரை அலங்கரிக்கின்றன. குகைக்கூரையில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அனந்தசயனம் மற்றும் அஷ்டதிக்பாலகர்களின் உருவச்சிற்பங்கள் நிறைந்துள்ளன.

மூன்றாவது குகைக்கோயில்

இந்த மூன்றாவது குகைக்கோயில் மிக அற்புதமான குகைக்கோயில் வடிவமைப்பு மற்றும் சிற்பக்கலை அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. இங்கு மிக அற்புதமாக வடிக்கப்பட்ட ஹிந்துக்கடவுளர் சிற்பங்கள் நிறைந்துள்ளன. 578ம் ஆண்டைச்சேர்ந்ததாக அறியப்படும் ஒரு கல்வெட்டு குறிப்பும் இந்தக்கோயிலில் காணப்படுகிறது.

நான்காவது குகைக்கோயில்

ஒரு ஜைனக்கோயிலாக இந்த நான்காவது குகைக்கோயில் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் உள்ளே மஹாவீரர் மற்றும் பர்ஷவநாதரின் சிற்பங்கள் காணப்படுகின்றன. இங்குள்ள கன்னட கல்வெட்டுக்குறிப்பின் மூலம் இது 12ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிய முடிகிறது.

இந்த குகைக்கோயில்கள் மட்டுமில்லாமல் மூன்று சிவன் கோயில்களும் வடக்கில் உள்ள மலைப்பகுதியில் காணப்படுகின்றன. அந்த மூன்று கோயில்களின் ஒன்றான மலேகட்டி சிவாலயா கோயில் பாதாமியின் பிரசித்தமான கோயில் என்றும் அறியப்பட்டுள்ளது.

ஏனைய முக்கிய கோயில்களாக பூதநாத கோயில், மல்லிகார்ஜுனா கோயில் மற்றும் தத்தாத்ரேயா கோயில் போன்றவையும் இங்குள்ளன. மேலும் பாதாமியில் ஒரு கோட்டை ஒன்றும் தன்னுள் பல கோயில்களைக்கொன்டு காணப்படுகிறது.

இவை மட்டுமில்லாமல் சாகச விரும்பிகளுக்கு பிடித்த மலையேற்ற (பாறையேற்றம்) பயிற்சிக்கான அற்புதமான வாய்ப்புகளை இந்த பாதாமி ஸ்தலம் வழங்குகிறது.  

பாதாமி நகரம் எல்லாவிதத்திலும் ஒரு வித்தியாசமான அற்புதமான நகரமாகும். மணற்பாறைகளால் சூழப்பட்ட பள்ளத்தாக்குப்பகுதியும், அற்புதமான குகைக்கோயில்களும் சேர்ந்து நம்மை ஒரு கிறக்கத்துக்கு ஆட்படுத்துகின்றன.

பாதாமியை ஒருமுறை விஜயம் செய்து சாளுக்கியர் காலத்திய சிற்பக்கலை மஹோன்னதத்தை கண்கொண்டு பாருங்கள். பின்னொரு நாளும் அந்த அனுபவத்தை உங்களால்  மறக்க முடியாது.

Please Wait while comments are loading...