கங்கை நதிக்கரையின் கரையில் அமைந்துள்ள இந்த ஆஹார் எனும் சிறுநகரம் புராதனமான அவந்திகா கோயில் மற்றும் சிவன் கோயில் ஆகியவற்றை கொண்டிருக்கிறது. வருடமுழுவதும் இந்த கோயில்கள் பக்தர்களை ஈர்க்கின்றன. சிவராத்திரி மற்றும் நவராத்திரி திருநாட்களின்போது ஏராளமான மக்கள் இந்த கோயிலில் திரள்கின்றனர்.
கங்கை நதிக்கரையில் வீற்றுள்ள இந்த தொன்மையான நகரம் மஹாபாரத காலத்திலிருந்தே தனது வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ளது.
இந்த இதிகாசத்தில் சொல்லப்பட்டிருக்கும் ஒரு சம்பவத்தின்படி, பீமனை கொல்ல திட்டமிட்ட துரியோதனன் அவனுக்கு விஷத்தை கொடுத்து கங்கையில் போட்டுவிட்டதாக சொல்லப்படுகிறது.
அப்படி கங்கையில் மிதந்து வந்த பீமனை இப்பகுதியை ஆண்டு வந்த நாகவன்ஷி அரசர்கள் மீட்டு குணப்படுத்தியதாகவும் பின்னர் பீமன் அஸ்தினாபுரம் திரும்பியதாகவும் அந்த கதை முடிகிறது. நாகவன்ஷி ராஜ வம்சத்துக்குரிய சில புராதன நாணயங்களும் இங்கு கிடைத்துள்ளன.