கோரியா – அதிகம் அறியப்படாத இயற்கை சொர்க்கம்

இந்தியாவின் மையப்பகுதியில் சட்டிஸ்கர் மாநிலத்தின் வடமேற்கு பகுதியில் இந்த கோரியா மாவட்டம் அமைந்திருக்கிறது. இதன் தலைநகர் பைகுந்த்பூர். கோரியா மாவட்டத்தின் வடக்கே மத்தியப்பிரதேச மாநிலத்தின் சிதி மாவட்டம், தெற்கே கோர்பா மாவட்டம்,  கிழக்கே சுர்குஜா மாவட்டம் மற்றும் மேற்கே மத்தியப்பிரதேச மாநிலத்தின் அனுப்பூர் மாவட்டம் போன்றவை எல்லை மாவட்டங்களாக அமைந்திருக்கின்றன.

வரலாற்று ரீதியாக 16ம் நூற்றாண்டுக்கு முந்தைய தகவல்கள் ஏதும் இந்த மாவட்டம் குறித்து கிடைக்கப்படவில்லை. இது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் ஒரு சமஸ்தான மாவட்டமாக இயங்கியிருக்கிறது.

இதற்கு அருகிலேயே சங் பக்கார் எனும் சமஸ்தானமும் இருந்திருக்கிறது. 1947ல் இந்தியா சுதந்திரமடைந்தபின் கோரியா மற்றும் சங் பக்கார் சமஸ்தான மன்னர்கள் இந்திய யூனியனுடன் தங்களை இணைத்துக்கொள்ள சம்மதித்தபின்பு இந்த இரண்டு சமஸ்தானங்களும் மத்தியப்பிரதேச மாநிலத்தின் சுர்குஜா மாவட்டத்துடன் இணைக்கப்பட்டன.

முக்கிய சுற்றுலா அம்சங்கள்

அமைதி தவழும் அழகுடன் கூடிய ஏரி நீர்ப்பரப்புகள், ஆறுகள் மற்றும் நீர்வீழ்ச்சிகள் போன்றவை நிறைந்துள்ள ஒரு இயற்கை எழிற்பிரதேசமாக இந்த கோரியா மாவட்டம் ஒளிர்கிறது. இயற்கை ரசிகர்களை வெகுவாக கவரும் அம்சங்கள் இந்த பூமியில் அதிகம் வெளி உலகில் அறியப்படாமல் ஒளிந்து கிடக்கின்றன.

அம்ரித் தாரா நீர்வீழ்ச்சி, ராம்தாகா நீர்வீழ்ச்சி மற்றும் கவர் காட் நீர்வீழ்ச்சி போன்றவை இம்மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சுற்றுலா கவர்ச்சி அம்சங்களாகும்.

கலாச்சாரம்

இப்பகுதியில் கொண்டாடப்படும் பல்வேறு திருவிழாக்கொண்டாட்டங்களின்போது கர்மா, சைலா மற்றும் சுகா போன்ற மூவகை நடன வடிவங்களின் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவை தவிர தீபாவளி, தசரா மற்றும் ஹோலி போன்ற முக்கிய இந்திய பண்டிகைகளூம் இங்கு விமரிசையாக கொண்டாடப்படுகின்றன. கங்கா தசரா, சர்தா, நவகாய் மற்றும் சுர்ஹுல் போன்ற திருவிழாக்களையும் கோரியா மக்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

கோரியா மாவட்டத்துக்கு?

கோரியா மாவட்டம் முக்கிய நகரங்களோடு ரயில் மற்றும் சாலைப்போக்குவரத்து வசதிகளால் நன்கு இணைக்கப்பட்டிருக்கிறது. தலைநகரான பைகுந்த்பூர் நகரத்துக்கு பேருந்து மற்றும் ரயில் வசதிகள் உள்ளன.

சுற்றுலாவுக்கு ஏற்ற பருவம்

குளிர்காலத்தில் கோரியா மாவட்டத்துக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது. இக்காலத்தில் குளுமையான இனிமையான சூழல் நிலவுவதால் வெளிப்புற இயற்கைக்காட்சிகளை சுற்றிப்பார்த்து ரசிக்க ஏற்றதாக உள்ளது.

Please Wait while comments are loading...