கோர்பா நகரம் சத்தீஸ்கர் மாநிலத்தின் மின்னுற்பத்தி கேந்திரமாக விளங்குகிறது. இது அஹிரன் மற்றும் ஹஸ்தேவ் எனும் ஆறுகள் கூடும் இடத்தில் பசுமையான வனப்பகுதிகள் சுற்றிலும் சூழ்ந்திருக்கும்படியாக அமைந்துள்ளது.
கடல் மட்டத்திலிருந்து 252 மீட்டர் உயரத்தில் உள்ள இந்த இடத்தில் சத்தீஸ்கர் மாநிலத்தின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் மின்னுற்பத்தி நிலையங்கள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன. நிலக்கரி சுரங்கங்களும் இப்பகுதியில் அதிகம் உள்ளன. இங்குள்ள மக்கள் சட்டிஸ்கர்ஹி மொழியை பேசுகின்றனர்.
இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் ஆதிவாசிகள் எனப்படும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்களாவர். கோண்டா, கவார், பிஞ்ச்வார், சத்னமி, ராஜ் கொண்ட் ஆகிய பழங்குடி இனப்பிரிவுகளை சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர்.
இந்தியாவின் முக்கிய பண்டிகைகள் மட்டுமல்லாமல் பல்வேறு பழங்குடி திருவிழாக்களும் இப்பகுதியில் கொண்டாடப்படுகின்றன. போலா, ஹரேலி, கர்மா, தேவ் உத்னி போன்றவை அவற்றில் குறிப்பிடத்தக்கவை.
போலா திருவிழா இம்மக்கள் வளர்க்கும் காளைகளை வழிபடுவதற்கான ஒரு சடங்குத்திருவிழாவாக நடத்தப்படுகிறது. ஹரேலி எனும் திருவிழா விவசாயிகளால் சிரவண மாதத்தில் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
விவசாயத்தை நம்பி வாழும் இப்பகுதி மக்கள் விவசாயத்தோடு தொடர்புடைய எல்லா அம்சங்களையும் தெய்வங்களுக்கு இணையாக வணங்கி மதிக்கின்றனர்.
பன்முகத்தன்மை கொண்ட கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய அம்சங்களை இந்த கோர்பா மாவட்டம் பெற்றிருக்கிறது. கோசா பட்டு எனும் ஒருவகை பட்டுத்துணி உற்பத்திக்காக இந்த மாவட்டம் பரவலாக பிரசித்தி பெற்றுள்ளது.
கோசா புடவைகளின் தரம் உலகம் முழுக்கவே தற்போது பிரபல்யமடைந்துள்ளது. இங்குள்ள சந்தைகள் மற்றும் உள்ளூர் மார்க்கெட் பகுதிகளில் இந்த கோசா புடவைகளை வாங்கலாம்.
கோர்பா – சுற்றுலா அம்சங்கள்!
மடவா ராணி, கன்கி, கொஸாகைகர், கெண்டாய் நீர்வீழ்ச்சி மற்றும் சைதுர்கர் போன்றவை கோர்பா மாவட்டத்தில் உள்ள முக்கியமான சுற்றுலா அம்சங்களாகும். இங்குள்ள கோயில்கள் மற்றும் கோட்டைகள் போன்றவையும் சுற்றுலாப்பயணிகள் அவசியம் காண வேண்டிய சுவாரசிய அம்சங்களாக அமைந்திருக்கின்றன.
இருப்பினும் இப்பகுதியில் பரவியிருக்கும் ரம்மியமான இயற்கை காட்சிகள் மற்ற யாவற்றையும் விட பயணிகளை வெகுவாக கவர்கின்றன. இங்குள்ள சைதுர்கர் கோட்டை ஒரு முக்கியமான வரலாற்று அம்சமாக அமைந்திருக்கிறது. நவராத்திரி திருநாளின்போது இங்கு யாத்ரீகர்கள் அதிகம் விஜயம் செய்கின்றனர்.
கோர்பா பருவநிலை
வறட்சியான பருவநிலையை கொண்டுள்ள கோர்பா பகுதி வெப்ப மண்டல புவியியல் அமைப்பில் அமைந்திருக்கிறது.
கோர்பாவுக்கு எப்படி செல்வது?
ரயில், சாலை மற்றும் விமான மார்க்கமாக நல்ல போக்குவரத்து இணைப்புகள் கோர்பாவுக்கு கிடைக்கின்றன.