குஷிநகர் - புத்தர் இங்கே உறங்கிக் கொண்டிருக்கிறார்!

உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள குஷிநகர் ஒரு முக்கியமான பௌத்த மத புனிதத்தலமாகும். பௌத்த மத குறிப்புகளின் படி, இந்த நகரத்திற்கு அருகிலிருக்கும் ஹிரன்யாவதி ஆற்றினருகே தான், கௌதம புத்தர் தனது மரணத்திற்குப் பிறகு பரிநிர்வாணம் அடைந்தார். பழங்காலத்தில் குசாவதி என்று அழைக்கப்பட்ட இந்நகரம், இந்திய இதிகாசமான இராமாயணத்தில் இராமனின் மகனாக உள்ள குசனின் பெயரால் குசா என்றும் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது.

எனினும், இந்த இடம் புகழ் பெற்றிருப்பதற்கு பௌத்த மதத்துடன் இருக்கும் தொடர்புதான் முக்கிய காரணமாகும். இந்த நகரம் கி.மு. 3 மற்றும் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த ஸ்தூபிகள் மற்றும் புத்த விஹார்களைப் கொண்டிருக்கிறது.

இவற்றில் பெரும்பாலான நினைவுச்சின்னங்களை உருவாக்கியவர் மௌரியப் பேரரசர் அசோகராவார். 19-ம் நூற்றாண்டில் மீண்டும் கண்டு பிடிக்கப்படும் வரையிலும், தொடர்ச்சியாக நிகழ்ந்த படையெடுப்புகளால் சிதைவுற்ற நிலையிலேயே குசிநகரம் இருந்தது.

குஷிநகரைச் சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள்

குஷிநகரில் இருக்கும் பெரும்பாலான சுற்றுலா தலங்கள் புத்தருடன் தொடர்புடையவையாகும். இந்த தலங்களில் பல இடங்கள் புத்தர் தன்னுடைய கடைசி காலத்தை கழித்த இடங்களாகும்.

இங்கிருக்கும் மகாபரிநிர்வாணா கோவிலில் 6-அடி நீளத்தில் புத்தர் படுத்த நிலையில் இருக்கிறார். இந்த நிர்வாணா சிலை 1876-ம் ஆண்டு தோண்டியெடுக்கப் பட்டது. இங்கிருக்கும் ராமாபார் ஸ்தூபி கட்டப்பட்டுள்ள இடத்தில் தான் புத்தர் அடக்கம் செய்யப்பட்டார்.

இங்கிருக்கும் அழகிய, தியானத்திற்கேற்ற பூங்காவில் செயற்கையான நீரூற்றுகள் மற்றும் பிரமிக்கத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள தோட்டங்கள் உள்ளன. குஷிநகர் மியூசியத்தில் அகழ்வாராய்ச்சியில் கண்டு பிடிக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் வைக்கப்பட்டுள்ளன.

முக்கியமான பௌத்த மத புனிதத் தலமாக இருப்பதால், உலகம் முழுவதுமிருந்து இங்கு வரும் பக்தர்கள் இங்கே தங்கியிருந்து பௌத்த மத நம்பிக்கைகளைப் பற்றிய படிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர்.

அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களுடைய கோவில்களை கட்டியுள்ளனர், உதாரணமாக, புத்தருக்காக கட்டப்பட்டுள்ள வாட் தாய் கோவில் இந்தியக் கட்டிடக்கலையிலிருந்து மாறுபட்டு, தாய்லாந்து கட்டிடக்கலையில் உருவாக்கப் பட்டுள்ளது.

மேலும், புத்தருக்காக கட்டப்பட்டிருக்கும் சீனக் கோவில், பெயருக்கேற்ற வகையில் சீனக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளது. இங்கிருக்கும் இந்தோ-ஜப்பானிய கோவிலில் இந்திய மற்றும் ஜப்பானிய கட்டிடக்கலைகள் அழகுற கலந்திருப்பதைக் காண முடியும்.

பௌத்த மத கட்டிடங்கள் மட்டுமின்றி, குஷிநகரில் குப்தர்கள் காலத்தில் கட்டப்பட்ட சூரியனார் கோவிலும் உள்ளது. இந்த கோவில் பலமுறை புனரமைக்கப்பட்டுள்ளது, கடைசியாக 1981-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. ஜென்மாஷ்டமி நாளில் இந்த கோவிலுக்கு கணக்கிலடங்காத அளவிற்கு பக்தர்கள் வந்து செல்வார்கள்.

இவை மட்டுமல்லாமல், சிவ பெருமானுக்காக கட்டப்பட்டுள்ள குபேர் அஸ்தான், சமண தீர்த்தங்கரர்களின் சிலைகளை கொண்டிருக்கும் தேவ்ரஹா அஸ்தான் மற்றும் இந்து பெண் கடவுள்களுக்கான குருகுல்லா அஸ்தான் போன்ற புனிதத் தலங்களும் குசிநகரத்தில் உள்ளன.

குஷிநகரத்தை அடையும் வழிகள்

குஷிநகரத்தை விமானம், இரயில் மற்றும் சாலை வழிகளில் அடைந்திட முடியும்.

குஷிநகரத்திற்கு வருவதற்கு மிகவும் ஏற்ற பருவம்

குஷிநகரத்திற்கு வர சிறந்த காலமாக நவம்பர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் உள்ளன.

Please Wait while comments are loading...