பாட்னா – உல்லாசப் பயணத்தின் பேருவகை!

நவீன யுகத்தில் பாட்னா என்று அழைக்கப்பட்டு வரும் பாடலிபுத்ரா என்ற பழங்கால இந்திய நகரம், தற்போது பீஹாரின் பரபரப்பான தலைநகராகத் திகழ்கிறது. பாட்னா, பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று மகிமை மற்றும் அரசியல் ஆதாயங்களின் உச்சபட்ச கலவையாகக் காணப்படுகிறது.

இது உலகின் மிகப் பழமையான ஒரு நகரமாகத் திகழும் பெருமை வாய்ந்ததாக இருப்பதோடல்லாமல் வரலாறு முழுவதிலும் ஆதிக்கம் நிறைந்த இருப்புடன் விளங்கி வந்துள்ளதாகவும் காணப்படுகிறது. பாட்னா புனிதமான கங்கா நதியின் தெற்குக்கரையைச் சுற்றி வளமான செழிப்புடன் காணப்படுகிறது.

பாட்னா மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

சுற்றுலாப் பயணிகள் வைஷாலி, கேஸரியா மற்றும் புத்தகயா போன்ற இடங்களுக்குச் சென்று, மனதை வருடும் புத்த மதத்தின் சாரத்தில் மூழ்கித் திளைக்கலாம். மஹாவீரரின் பிறப்பிடமாகப் போற்றப்படும் வைஷாலி, புத்தபிரான் தன் கடைசி விளக்கவுரையை நிகழ்த்திய இடமாகவும் கொண்டாடப்படுகிறது.

வைஷாலி அமைதி தவழும் ஒரு அழகிய ஜப்பானிய புத்தவிகாரத்தைக் கொண்டிருக்கிறது. சுமார் 2300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருமையுடைய அசோகா ஸ்தூபியின் மேற்புறத்தில் கம்பீரமான தோற்றத்துடன் மேன்மை பொருந்தியதாகக் காணப்படும் சிங்கத்தின் அழகு வார்த்தைகளால் விளக்க முடியாதது.

கேஸரியா, புத்தர் தன் இறப்புக்கு முன் தான் பயன்படுத்திய திருவோடை தானமாக வழங்கியதாகக் கூறப்படும் மிக உயர்ந்த ஸ்தூபியை பெற்றிருக்கும் பெருமை வாய்ந்ததாகும்.

கௌதம புத்தர் ஒரு போதி மரத்தின் கீழ் ஞானம் பெற்றதாகக் கூறப்படும் ஸ்தலமான புத்தகயாவிற்கு உலகெங்கிலும் உள்ள புத்த மத யாத்ரீகர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் வந்து குழுமுகின்றனர்.

அத்தகைய போதி மரத்தின் வேர்கள் அமைதியாக தவழும் இடத்தில் அமர்ந்து தியானம் செய்வதை யாத்ரீகர்கள் பலர் மிகவும் விரும்புகின்றனர்.

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களில், சிவப்பு அங்கி அணிந்த யாத்ரீகர்கள் பலர் இந்த அமைதியான ஸ்தலத்திற்கு வந்து தங்கள் பிரார்த்தனைகளை சமர்ப்பிப்பதனால் இப்பகுதி சிவப்பான சமுத்திரம் போல் காணப்படுகிறது.

தலாய் லாமா அவர்களும் கூட புத்தகயா வந்து சில மாதங்கள் தங்கிச் செல்கிறார். புத்தகயாவிலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள துங்கேஷ்வரி குகைக் கோயில்கள், புத்த மதம் மற்றும் இந்து மதம் சார்ந்த பக்தர்களால் போற்றப்பட்டு வரும் அதே வேளையில், கலைநயமிக்க வேலைப்பாடுகளுக்கும் மிகவும் புகழ் பெற்று விளங்குகின்றன.

பாட்னாவின் வளமான மரபுரிமை!

கல்வி மற்றும் கலைகளின் சிறப்பான உறைவிடமாகத் திகழும் இந்த நகரம் பல அயல்நாட்டுப் பயணிகள் வந்து செல்லும் பெருமை கொண்டதாகவும் விளங்குகிறது.

அஜட்ஷத்ருவிலிருந்து ஆங்கிலேயப் பேரரசு வரையிலான பல்வேறு ஆட்சியாளர்களும் இந்த நகரின் போர்த்திறம் கொண்ட அமைப்பின் மூலம் தங்கள் இருப்பை திடப்படுத்திக் கொள்ள முயன்றிருக்கின்றனர்.

பாட்னாவின் சுற்றுலா, புத்தமத ஸ்தலங்களான ராஜ்கீர், வைஷாலி மற்றும் கேஸரியா, போதி மரம், காந்தி சேது, கோல்கார் மற்றும் தக்த் ஸ்ரீ பாட்னா சாஹிப் போன்ற ஆவலைத் தூண்டும் பல்வேறு சுற்றுலா ஈர்ப்புகளை உள்ளடக்கியுள்ளது.

முன்னர் பாட்னா புல்வெளிகள் என்று அழைக்கப்பட்டு வந்த காந்தி மைதானம், பாட்னாவின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மைதானம் ஆகும். தலை சிறந்த அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த இம்மைதானத்தைச் சுற்றிலும் மக்கள் அதிகமாகக் கூடும் மையங்கள் பலவற்றைக் காணலாம்.

பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த மரபுரிமை மற்றும் அறிவார்ந்த பாரம்பரியத்தை உடைய பாட்னா நகரம் இங்கு வருவோர் பார்த்து ரசிக்கத்தக்க ஏராளமான விஷயங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஒரு நகரமாக பாட்னா, மிக ஆழமான மற்றும் ஆத்மார்த்தமான உணர்வை விதைப்பனவாகிய இந்துமதம், புத்தமதம், ஜைன மதம் மற்றும் இஸ்லாம் போன்ற பல்வேறு மதங்களின் போதனைகளின் மகிமையில் முக்குளிக்கும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறது.

பாட்னா ஈரப்பதம் நிறைந்த அசலான துணை மண்டல வானிலையை கொண்டிருக்கும்; அதனால் கோடைகால மாதங்கள் மிக உயர்ந்த வெப்பநிலைகளுடன் காணப்படுகின்றன.

இந்நகரம் கடும் கோடைகளையும், உறைய வைக்கும் குளிர்காலங்களையும் கொண்டிருக்கும். அதனால் இங்கு செல்ல ஏதுவான காலம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்களே ஆகும். பாட்னா, முதுபானி ஓவியங்கள் என்றும் அழைக்கப்படும் மிதிலா ஓவியங்களுக்கு மிகவும் பெயர் பெற்றதாகும்.

உண்மையில் இந்த ஓவியங்கள் அனைத்தும் அடுப்புக்கரி, சமையலில் உபயோகிக்கப்படும் நறுமணப்பொருட்கள் மற்றும் காய்கறிகளிலிருந்து தயாரிக்கப்படும் இதரப் பொருட்களை நிறங்களாக உபயோகித்து பெண்களால் வரையப்படும் நாட்டுப்புற கலை வடிவங்களாகும்.

பாட்னா வரும் சுற்றுலாப் பயணிகள் இங்குள்ள பல்வேறு ஆன்மீக, சரித்திர மற்றும் கட்டுமான அற்புதங்களைக் கொண்ட ஏராளமான ஸ்தலங்கள் அனைத்துக்கும் செல்லும் வண்ணம் தங்கள் பயண நிரலை திட்டமிட்டுக் கொள்ளுதல் நலம்.

பாட்னாவின் கண்காட்சிகளும், திருவிழாக்களும்!       

பாட்னா சுற்றுலா அனைத்து விதமான ரசனைகள் மற்றும் விருப்பங்களுக்கு ஈடு கொடுத்து உவகை அளிக்கக்கூடிய ஒரு நகரமாகும். சோனேபூர் மேளா இந்நகரில் வாழும் மக்களால் மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.

மௌரியன் காலத்தில் உதயமான இந்த திருவிழாக் கொண்டாட்டங்கள் இன்றும் வருடம் தவறாமல் நவம்பர் மாதத்தில் நடத்தப்படுகின்றன.

சோனேபூர் மேளா என்பது ஆசியாவின் பல பகுதிகளிலும் இருந்து ஏராளமானோரை இங்கு ஈர்க்கும் ஒரு கால்நடை கண்காட்சியாகும். அனைத்து விதமான கால்நடைகளும், விலங்குகளும் இதில் காணப்பட்டாலும், விற்பனைக்குக் கொண்டு வரப்படும் யானைகள் தாம் இதன் சிறப்பம்சமாகும்.

பாட்னா சுற்றுலா, எந்த ஒரு சுற்றுலாப் பயணியும் ரசிக்கும் வண்ணம் மனித வாழ்வின் பல்வேறு பரிணாமங்களையும் உணர்த்தக்கூடியதாகத் திகழ்கிறது.

பாட்னா செல்வது எப்படி?

இந்நகரம் இரயில், சாலை மற்றும் விமானம் போன்ற அனைத்து விதமான போக்குவரத்து சேவைகளின் மூலம் நன்கு இணைக்கப்பட்டுள்ளதாக பாட்னா சுற்றுலாத்துறை உறுதியளித்துள்ளது.

Please Wait while comments are loading...