மேகாலயா சுற்றுலா – மேகங்களில் நீந்தியபடி ஒரு பயணம்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

1972-ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த மேகாலயா மாநிலம் காஸி, ஜைன்டியா மற்றும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கும் பூமியாகும். மடிப்பு மடிப்புகளாய் புரண்டு கிடக்கும் மலைத்தொடர்களை கொண்டுள்ள இம்மாநிலத்தில் பழங்கள் மற்றும் பாக்கு போன்றவை அதிகம் பயிராகின்றன.

ஷில்லாங் நகரம் இதன் தலைநகரமாகும். மக்கள் தொகை அடிப்படையில் இந்தியாவில் ஷில்லாங் 23 வது இடத்தை வகிக்கிறது. மேகாலயா மாநிலம் அதன் வடக்கில் அஸ்ஸாம் மாநிலத்தையும் தெற்கில் பங்களாதேஷ் நாட்டையும் எல்லைகளாக கொண்டுள்ளது.

இந்த மாநிலத்தின் மூன்றில் ஒரு பங்கு நிலப்பகுதி வனப்பிரதேசமாக காட்சியளிக்கிறது. இங்குள்ள காடுகள் பல்லுயிர்ப்பெருக்க இயற்கைச்சூழல் அமைப்பை கொண்டுள்ளன.

பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் மற்றும் தாவரங்கள் இந்த காடுகளில் இடம்பெற்றுள்ளன. செழுமையான இந்த வனப்பிரதேசத்தின் தாவர மற்றும் உயிர் செழிப்பு பார்வையாளர்களை பிரமிக்க செய்கின்றன. 

மேகாலயா மாநிலத்தின் சுற்றுலா அம்சங்கள்

கலாச்சாரம், மக்கள், இயற்கை அழகு மற்றும் மொழி ஆகிய எல்லா அம்சங்கள் குறித்தும் ஒரு புதுமையான அனுபவத்தை சுற்றுலாப்பயணிகள் இந்த மேகாலயா மாநில சுற்றுலாவில் உணரலாம். ஷில்லாங், ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டம்,  கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் மற்றும் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் போன்றவை இங்குள்ள முக்கியமான சுற்றுலாத்தலங்களாகும்.

சமூகம் மற்றும் கலாச்சாரம்!

மேகாலயா மக்கள் எளிமையான உபசரிப்பு குணம் கொண்டவர்களாக உள்ளனர். இம்மாநிலத்தில் காஸி, கரோ மற்றும் ஜைந்தியா எனும் பழங்குடி இனத்தவர் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். இந்த மக்களிடையே தாய் வழி சமூக மரபு பின்பற்றப்படுவது ஒரு தனித்தன்மையான அம்சமாகும்.

கரோ இன மக்களின் மரபுப்படி ஒரு குடும்பத்தின் குடும்பச்சொத்து யாவும் கடைசி மகளுக்கு போய்ச்சேருகிறது. இவரே அந்த குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசாக கருதப்படுவார். இந்த மகளை ‘நோக்னா’ என்று அழைக்கின்றனர்.

கடைசி மகள் அல்லாமல் வேறு மகளையும் கூட பெற்றோர் தேர்வு செய்வதுண்டு. அதாவது, இதன் பொருள் ஒரு குடும்பத்தின் அடுத்த தலைமுறையாக கருதப்படுவது ‘ஆண்’ அல்ல என்பதுதான். இதுவே தாய்வழி சமூக மரபு எனப்படுகிறது.

மேகாலயா மாநிலத்தின் திருவிழாக்கொண்டாட்டங்கள்!

மேகாலயா மாநில பழங்குடி மக்கள் பல்வேறு வகையான திருவிழாக்களை கோலாகலமாக கொண்டாடி மகிழ்கின்றனர். தனித்தன்மையான அம்சங்களை கொண்ட நடனங்கள் இந்த திருவிழாக்களின் முக்கிய அங்கமாகும்.

மனித வாழ்க்கையின் முக்கிய பருவங்களை கொண்டாடும் சடங்கு நிகழ்ச்சிகளாகவும், இயற்கை சுழற்சிகளை குறிப்பிடும் சடங்குகளாகவும் இந்த கொண்டாட்டங்கள் இருக்கக்கூடும்.

நடன நிகழ்ச்சிகள் பெரும்பாலும் தனிப்பட்ட கிராம நிகழ்ச்சியாகவோ அல்லது பல கிராமங்கள் ஒன்று சேர்ந்து பங்கேற்கும் நிகழ்ச்சியாகவோ நடத்தப்படுகின்றனது. காஸி பழங்குடி இனத்தாரின் பாரம்பரிய கலையம்சங்களை இந்த நடன வடிவங்களில் பார்த்து ரசிக்கலாம்.

கா ஷாத் மின்சியம், கா போம் பிலாங் நோங்கிரம், கா ஷாத் ஷிங்வியாங் தங்கியப், கா ஷாத் கிய்ன்ஜோ கஸ்கய்ன், காம் பம் கானா ஷ்னாங், உம்சன் நோங்கராய், ஷாத் பெஹ் சியர் போன்ற இம்மாநிலத்தில் கொன்டாடப்படும் முக்கிய பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களாகும்.

மனிதர்கள் மற்றும் இயற்கைச்சூழலுக்கு இடையேயான சமநிலையை குறிப்பிடும் விதத்தில் ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.

மக்களிடையே ஒற்றுமையை நிலைநிறுத்தும் நோக்கத்துடனும் இந்த சடங்கு நிகழ்ச்சிகள் நிறைவேற்றப்படுகின்றன. பெஹ்டியன்கிலாம், லஹோ நடனம், சோவிங் சடங்கு போன்றவை ஜைன்டியா ஹில்ஸ் மாவட்டத்தில் கொண்டாடப்படுகின்றன.

கரோ இன மக்களிடையே டென் பில்சியா, வங்காலா, ரோங்ச்சு கலா, மீ அமுவா, மங்கோனா, கிரங்டிக் பவா, ஜமங் சியா, ஜா மெகபா, ஸா ஸத் ரா சக்கா, அஜெவார் அஹவ்யா, டோரே ரடா நடனம், சம்பில் மெசரா, டோ’க்ரு சுவா, சரம் சா, ஆ சே மனியா அல்லது டட்டா ஆகிய திருவிழா மற்றும் சடங்கு நிகழ்ச்சிகள் கொண்டாடப்படுகின்றன.

பருவநிலை

மேகாலயா மாநிலத்தின் பருவநிலை குறைந்த வெப்பத்துடன் ஆனால் ஈரப்பதம் நிரம்பியதாக காட்சியளிக்கிறது.  இந்த மாநிலத்தின் காஸி மலைப்பகுதியில் உள்ள சிரபுஞ்சி எனும் இடம் உலகிலேயே மிகக்கடுமையான மழைப்பொழிவை பெறும் இடமாக அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் முதல் ஜுலை மாதம் வரையிலான பருவம் மேகாலயா மாநிலத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொள்ள உகந்தாக உள்ளது 

Please Wait while comments are loading...