கிழக்கு கரோ ஹில்ஸ் – மனிதக்கறை படியாத மலை எழில் பிரதேசம்!

‘கிழக்கு கரோ ஹில்ஸ்’ மேகாலயா மாநிலத்தின் 11 மாவட்டங்களில் ஒன்றாகும். மேகாலயா மாநிலம் பிறந்து நான்கு ஆண்டுகள் கழித்து இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. இந்த மாவட்டத்தின் தலைநகரம் வில்லியம் நகர் என்று அழைக்கப்படுகிறது. இது திட்டமிட்டு நிர்மாணிக்கப்பட்ட நகரமாகும். இம்மாநிலத்தின் முதல் முதலமைச்சரான கேப்டன் வில்லியம்சன் சங்க்மா என்பவரது பெயர் இந்த நகரத்துக்கு வைக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டு அமைக்கப்பட்ட நகரம் என்பதால், எல்லா அடிப்படை வசதிகளையும் கொண்ட ஒரு வளர்ந்து வரும் நகரமாக இது தற்போது பிரசித்தி பெற்றுள்ளது.

கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டம் 2603 ச.கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது. தெற்கில் தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தையும், கிழக்கில் காஸி மலைகளையும், மேற்கில் மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தையும், வடக்கில் அஸ்ஸாம் மாநிலப்பகுதிகளையும்  இது எல்லைகளாக கொண்டுள்ளது.

கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் பெரும்பாலும் கரோ பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். மேகாலயா மாநிலத்தில் காஸிஸ் இனத்தாரை அடுத்து இந்த கரா இனத்தார் அதிக எண்ணிக்கையில வசிப்பது குறிப்பிடத்தக்கது. ஹஜோங், ரபாங், கோச், பனாய், டலு மற்றும் போரோ இன மக்களும் இந்த கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தில் வசிக்கின்றனர்.

கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்துக்கு எப்படி செல்வது?

கிழக்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைநகரமான வில்லியம்நகர் துரா நகரத்திலிருந்து 75 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. சுமார் ஒன்றரை மணி நேர பயணத்தில் துராவிலிருந்து வில்லியம்நகரை வந்தடையலாம். அரசு பேருந்துகள் மற்றும் தனியார் வாகனங்கள் மூலம் பயணிகள் இங்கு வரலாம்.  

Please Wait while comments are loading...