சிரபுஞ்சி – அடைமழை கொட்டும் வாசஸ்தலம்!

ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி, மேகாலயா உலகம் முழுவதும் புகழ் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். பூமியின் ஈரப்பதமான பகுதியாக ஒரு காலத்தில் விளங்கிய சிரபுஞ்சி, மனம் மயக்கும் ஆற்றல் படைத்ததாகும்.

அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

சிராவின் ஈரநிலங்கள் – சிரபுஞ்சி மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

மொழிபெயர்த்தால், ஆரஞ்சுகளின் பூமி என்ற அர்த்தத்தில் வரக்கூடியதான சிரபுஞ்சி, வருடம் முழுவதும் கடும் மழைப் பொழிவைப் பெறுகிறது. அதன் நிலங்கள் அனைத்தும் தரிசாக இருப்பதினால் அவற்றில் விவசாயம் செய்வது என்பது இயலாத ஒன்று.

இதற்கு காரணம், தொடர்மழை மற்றும் பல வருடங்களாக காடுகள் அழிக்கப்பட்டு வருவது போன்றவை அதன் மேற்புற மண்ணை வலுவிழக்கச் செய்து, அடுத்தடுத்த மழைகளில் அதனை அடித்துச் சென்றதே ஆகும்.

ஆனால், இத்தொடர் மழை காரணமாக விளைந்துள்ள நன்மை யாதெனில், இப்பகுதியில் ஏராளமான மனம் மயக்கும் சுற்றுலாத் தலங்கள் அமையப்பெற்றுள்ளதே ஆகும்.

மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, நோகலிகை நீர்வீழ்ச்சி, டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி ஆகியவை மலைகளின் வழியே புகுந்து புறப்பட்டு, பள்ளங்களில் விழும் காட்சி நம் நினைவை விட்டு அகலாது நிலைத்திருக்கக்கூடியதாகும்.

நாட்டின் உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகிய அழகிய நோகலிகை நீர்வீழ்ச்சி, சிறப்பாகக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒரு ஸ்தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலாவை ஊக்குவிக்கும் வண்ணம், ஸா-ல்-மிகா பூங்கா மற்றும் உல்லாச விடுதிகளில் உள்ளத்தை மகிழ்விக்கும் ஏராளமான விளையாட்டு நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பெறுகின்றன.

சிரபுஞ்சி – கண்கவர் இயற்கைக் காட்சிக்கு மத்தியில்!

ஷில்லாங்கிலிருந்து வளைந்து நெளிந்து செல்லும் சாலைகளில், குறுகிய, ஆழமான பள்ளத்தாக்குகள் வழியாக, பனிப்படலத்தின் குறுக்காக, மேகங்கள் முகத்தில் மோத, பயணித்து வந்தால் அழகிய சிரபுஞ்சியை அடையலாம்.

இயற்கை அன்னையினால் அபரிமிதமாக ஆசீர்வதிக்கப்பட்டுள்ள சோஹ்ரா, புராதன பெருமை வாய்ந்த ஒரு சுற்றுலாத் தலமாகும். சிரபுஞ்சி சுற்றுலா என்பது இயற்கைக் காட்சிகளை ரசித்து வருவது போன்ற வழக்கமான சுற்றுலாவாக மட்டும் இல்லாமல் பல்வேறு சுவாரஸ்யங்கள் நிறைந்த ஒன்றாகவும் திகழ்கிறது.

சிரபுஞ்சி, வழக்கமான சுற்றுலாத் தலங்கள் முதல் சிறப்பம்சம் வாய்ந்த ஸ்தலங்கள் வரை அனைத்தையும் உள்ளடக்கியுள்ளது.                 

சிரபுஞ்சி, மேகாலயாவின் கிழக்கு காஸி மலை மாவட்டத்தில் உள்ள ஒரு உட்கோட்ட சிறு நகரமாகும். கடல் மட்டத்திலிருந்து சுமார் 1484 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள சோஹ்ரா, வங்கதேசத்தின் முடிவில்லா சமதளங்களை மேலிருந்து நோக்குவது போல் அமைந்துள்ள மேட்டு நிலத்தில் பொதிந்து காணப்படுகிறது.

சிரபுஞ்சி, ஆண்டிற்கு சுமார் 463.66 இன்ச் அளவிலான வருடாந்திர மழைப்பொழிவைப் பெற்று, பூமி கிரகத்தின் ஈரமான நிலங்களுள் ஒன்றாக விளங்குவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

சிரபுஞ்சியின் வரலாறு – ஆங்கிலேயரின் வருகை மற்றும் ஒரு சமூகவியல் மாற்றம்!

அமைதியான காஸி மலையில் நிகழ்ந்த ஆங்கிலேயரின் வருகை, இப்பகுதி தற்போது இயங்கி வரும் முறைக்கான மாற்றங்களை உருவாக்கியுள்ளது. கிழக்கிந்திய நிறுவனத்தின் அரசியல் ஏஜென்டாக விளங்கிய டேவிட் ஸ்காட், 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், கிழக்கு வங்கம் என்று முன்பு அழைக்கப்பட்டு வந்த பகுதியைச் சேர்ந்த சைலட் மாவட்டத்தின் வழியே பயணித்து சிரபுஞ்சியை வந்தடைந்திருக்கிறார்.

ஸ்காட் அவர்களின் தலைமையின் கீழ், “சிரா நிலையம்’ என்று அழைக்கப்பட்டு வந்த சிரபுஞ்சி, காஸி மற்றும் ஜெயின்டியா மலைகளின் அதிகாரப்பூர்வமான தலைமையகமாகவும் ஸ்காட் அவர்களினால் மாற்றப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, ஆங்கிலேயர்கள் அஸ்ஸாமின் தலைநகரத்தை ஷில்லாங்குக்கு மாற்றுவதற்கு முன்பாக இது அஸ்ஸாமின் தலைநகரமாகவும் இருந்துள்ளது. வெல்ஷ் மிஷன் இங்கே வந்த பின் சோஹ்ரா அதீத மாற்றங்களைக் கண்டிருக்கிறது.

வில்லியம் காரேய் அவர்களின் தளராத தலைமையின் கீழ் செயல்பட்டு வந்த வெல்ஷ் மிஷனின் ஆக்கப்பணிகள், சிரபுஞ்சி கிறித்துவ மதத்தைத் தழுவியதில் முக்கியப் பங்காற்றியுள்ளன.

தாமஸ் ஜோன்ஸ் என்ற மற்றொரு மிஷனரி, காஸி மற்றும் ஜெயின்டியா மலைகளில் இதற்கு சமமான பங்களிப்பை நல்கி, இங்கு வாழ்ந்து வரும் மலை ஜாதியினர் தங்களின் விவசாய முறைகளை நவீனப்படுத்திக் கொள்ள உதவி புரிந்துள்ளது. வட கிழக்கு இந்தியப் பகுதியின் முதல் தேவாலயம் சிரபுஞ்சியில் 1820 ஆம் ஆண்டு நிறுவப்பட்டுள்ளது.

இந்த மிஷனரிகள் மலைஜாதி சமூகத்தினரின் முன்னேற்றத்துக்கு அயராது பாடுபட்டுக் கொண்டிருந்த அதே வேளையில், ஆங்கிலேயர்கள் சிராவின் புவியியல் முக்கியத்துவத்தை வெகு சீக்கிரம் உணர்ந்து கொண்டனர்.

சைலட் சமவெளிகளின் அருகாமையை ஒரு புறமும், அஸ்ஸாம் மலைகளை மற்றொரு புறமும் கொண்டிருப்பதனால் சிரபுஞ்சி ஒரு சிறந்த நிர்வாக மையமாக விளங்கும் தகுதி பெற்றுள்ளது. இங்கு நிலவும் ரம்மியமான வானிலை இதற்கு மேலும் சிறப்பூட்டுவதாக உள்ளது.

சிரபுஞ்சியை அடைவது எப்படி?

ஷில்லாங்கிலிருந்து சுமார் 55 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள சுற்றுலாத் தலமான சிரபுஞ்சிக்குச் செல்ல சுமார் 2 மணி நேரம் ஆகிறது. எல்லா நேரமும் கிடைக்கக்கூடிய தனியார் மற்றும் அரசு போக்குவரத்து வாகனங்களினால் ஷில்லாங் மற்றும் சிரபுஞ்சிக்கு இடைப்பட்ட சாலைப் போக்குவரத்து மிகவும் சிறப்பாக உள்ளது.

சிரபுஞ்சி வானிலை

சிரபுஞ்சி சராசரியாக ஒவ்வொரு வருடமும் சுமார் 1193.7 மிமீ வரையிலான வருடாந்தர மழைப்பொழிவைப் பெறுகிறது. சுற்றுலாப் பயணிகள் சோஹ்ராவிலிருக்கும் காலத்தில், தொடர்ந்து பெய்துகொண்டிருக்கும் மழையை எதிர்கொள்ளலாம்.

அவ்வப்போது கன மழையும் பெய்யும். அவ்வளவாக மழைப்பொழிவு இல்லாத கோடைகளின் போது, சிரபுஞ்சி மிகவும் வெப்பமாகவும், புழுக்கமடைந்தும் காணப்படும்.

Please Wait while comments are loading...