மேற்கு கரோ ஹில்ஸ் – மேகாலயா மாநிலத்தின் பல்லுயிர்ப்பெருக்க இயற்கை சூழல் நிரம்பிய எழில் பிரதேசம்!

மேற்கு கரோ ஹில்ஸ் மேகாலயா மாநிலத்திலேயே மக்கள் தொகை அதிகமாக கொண்ட மாவட்டமாகும். இதன் தலைநகரம் துரா. இது இம்மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரம். ஒட்டுமொத்த மேற்கு கரோ மாவட்டமும் மலைப்பகுதியாகவே காட்சியளிக்கிறது. அவற்றின் விளிம்புப்பகுதிகளில் சிறிதளவே சமநிலப்பகுதிகள் அமைந்துள்ளன.

3714 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ள இந்த மேற்கு கரோ ஹில்ஸ் (மாவட்டம்) தனது எல்லைகளை வடக்கு மற்றும் வட மேற்கில் அஸ்ஸாம் மாநிலத்தின் கோவல்பாரா மாவட்டத்துடனும், தென்கிழக்கே தெற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்துடனும், தெற்கே பங்களாதேஷ் நாட்டுடனும் பகிர்ந்து கொள்கிறது.

கரோ ஹில்ஸ் மலை பிரதேச மாவட்டம் தனக்கேயான பிரத்யேக இயற்கைச்சூழலுடன் பல நீர்வீழ்ச்சிகள், ஏரிகள் மற்றும் மலைச்சிகரங்கள் போன்ற ரம்மியமான காட்சிகளுடன் வீற்றிருக்கிறது.

இங்கு ஏராளமான மலைகள் உள்ளதால் மலைஏற்றத்தில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஏற்ற பூமியாகும். பல ஆறுகளும் இப்பிரதேசத்தில் ஓடுகின்றன.

இங்குள்ள முக்கியமான இயற்கைச்சுற்றுலா அம்சங்களாக துரா சிகரம், நோக்ரக் பயோஸ்பியர், சிப்ராக்ரே, பெல்கா நீர்வீழ்ச்சி, ரோங்பாங் டரே போன்றவை மட்டுமல்லாமல் இன்னும் சில இதர அம்சங்களும் அமைந்துள்ளன.

சஸாட்கிரே எனும் கிராமம் ஆரஞ்சுப்பழங்கள் விளையும் அழகிய கிராமமாகவும், துரா நகரம் இயற்கைக்காட்சிகளை பார்த்து ரசிக்க உதவும் நகரமாகவும் அமைந்துள்ளன. ரங்கபாணி மற்றும் பைத்பரி போன்ற இடங்கள் தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் விரும்பும் ஸ்தலங்களாக பிரசித்தி பெற்றிருக்கின்றன.

‘கரோ ஹில்ஸ்’ மாவட்டத்தில் பெரும்பாலும் கரோ பழங்குடி இனத்தார் வசிக்கின்றனர். திபெத்திய-பர்மிய வழியில் வந்த போடோ இனத்தை சேர்ந்தவர்களே இந்த கரோ பழங்குடியினர் ஆவர். தாய்வழி சந்ததி மரபை பின்பற்றும் இந்த ஆதிகுடி இனத்தார் இந்தியாவின் ஒரு முக்கியமான பழங்குடி இன மக்களாக கருதப்படுகின்றனர்.

மேற்கு கரோ ஹில்ஸ் மாவட்டத்துக்கு எப்படி செல்வது?

கரோ ஹில்ஸ் மாவட்டத்தின் தலைநகரமான துரா இந்த சுற்றுலாப்பிரதேசத்துக்கான நுழைவாயிலாக உள்ளது. குவஹாட்டி நகரத்திலிருந்து 222 கி.மீ தூரத்திலிருந்தும், ஷில்லாங் நகரத்திலிருந்து 309 கி.மீ தூரத்திலும் இந்நகரம் அமைந்துள்ளது.

இந்நகரத்திற்கான சாலை வசதிகள் சிறப்பாக அமைந்திருப்பதால் பயணிகளுக்கான போக்குவரத்து வசதிகளுக்கு குறைவில்லை.

மேற்கு கரோ ஹில்ஸ் – பருவநிலை

மேகாலயா மாநிலத்தின் கீழ்ப்பகுதிகளில் இந்த கரோ ஹில்ஸ் (மாவட்டம்) அமைந்துள்ளதால் வருடம் முழுதும் வெப்பம் நிறைந்ததாக காட்சியளிக்கிறது. சராசரியாக 330 செ.மீ மழையை இப்பகுதி பெறுகிறது.தென்மேற்கு பருவக்காற்றுகளின் மூலம் இங்கு மழைப்பொழிவு கிடைக்கிறது.

குளிர்காலம் வறட்சியுடனும் கோடைக்காலம் மிகுந்த உஷ்ணத்துடனும் காணப்படுகின்றன. மழைக்காலம் முடிந்தபின்னர் துவங்கும் குளிர்காலம் இங்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது.

மழைக்காலம் முடியும்போது வெப்பநிலை குறைந்து ஈரப்பதமும் குறையத்துவங்குகிறது. இந்த பருவமே மலையேற்றம் மற்றும் இயற்கைக்காட்சிகளை ரசிப்பதற்கேற்றதாக விளங்குகிறது. மெலிதான உல்லன் உடைகள் மற்றும் மழைக்கான முன் தயாரிப்புகளுடன் இப்பகுதிக்கு சுற்றுலா மேற்கொள்வது சிறந்தது

Please Wait while comments are loading...