முகப்பு » சேரும் இடங்கள் » சிரபுஞ்சி » ஈர்க்கும் இடங்கள்
 • 01டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி

  டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி

  டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சிக்கு அருகில் அமைந்துள்ள மற்றொரு சிறப்பு வாய்ந்த நீர்வீழ்ச்சியாகும். இது அதன் பெயரை “த்லென்” என்ற பெயரில் அழைக்கப்பட்டு, இப்பகுதியின் குகைகளில் வாழ்ந்து வந்த ஒரு ராட்சத பாம்பின் (மலைப்பாம்பு) பெயரிலிருந்தே பெற்றுள்ளது.

  புராணங்களின் படி, இந்த பாம்பைப் பிடித்த கிராம மக்கள் அதன் அழிச்சாட்டியத்தை நிறுத்தும் பொருட்டு அதனை கொன்றழித்திருக்கின்றனர். பின்னர் இதன் சதைப் பகுதியை விருந்தாகவும் உண்டு மகிழ்ந்திருக்கின்றனர்.

  இந்த பாம்பு கொல்லப்பட்ட இடத்திற்கு அருகில் உள்ளது டெயின்-த்லென் நீர்வீழ்ச்சி. இந்த நீர்வீழ்ச்சியின் புகழ் மென்மேலும் வளர இப்புராணமே முக்கிய காரணமாகத் திகழ்கிறது.

  உலகெங்கிலும் இருந்து சுற்றுலாப் பயணிகள் இந்த நீர்வீழ்ச்சியையும், சீர்கேடு, பேராசை மற்றும் தீமை ஆகியவற்றின் சின்னமாக விளங்கிய த்லென் என்ற பாம்பைக் கொல்ல நடந்த சண்டையை சித்தரிக்கும் இயற்கையான பாறை செதுக்கல்களையும் காண்பதற்காகவே இங்கு வருகின்றனர்.

  டெயின்-த்லென், சிரபுஞ்சி செல்லும் வழியில் சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு செல்வதற்கு ஏற்ற வழி, ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு சுற்றுலாப் பேருந்து அல்லது கார் மூலம் செல்வதே ஆகு

  + மேலும் படிக்க
 • 02ஸா-ஐ-மிகா பூங்கா

  ஸா-ஐ-மிகா பூங்கா

  சிரபுஞ்சியின் வியத்தகு பூங்காவான ஸா-ஐ-மிகா பூங்கா, பொழுதுபோக்கு அம்சங்களோடு கல்வி தொடர்பான ஆச்சரியங்களையும் இங்கு வருவோர்க்கு வாரி வழங்குகிறது.

  இங்கு, கைப்பந்து அரங்கம், கூடைப்பந்து அரங்கம், சறுக்கு வளையம், பேட்மிட்டன் அரங்கம் போன்ற ஏராளமான விளையாட்டு அரங்கங்களையும், குழந்தைகள் விளையாடுவதற்காக போடப்பட்டுள்ள சறுக்கு மரங்கள் மற்றும் ஊஞ்சல்களைக் கொண்டிருக்கும் மைதானத்தையும் காணலாம்.

  மேலும், இங்கு உள்ள குழந்தைகளுக்கான பிரத்யேக நீச்சல்குளத்தில் தகிக்கும் கோடைகாலங்களில் நீந்தி, குழந்தைகள் தம் உடல் வெப்பத்தைத் தணித்துக் கொள்ளலாம்.

  இப்பூங்காவில் தங்கும் வசதியும் செய்யப்பட்டுள்ளன. இங்கு உள்ள விடுதிகள், பாரம்பரியமான காஸி குடில்களைப் போன்றே வடிவமைக்கப்பட்டுள்ளன.

  இந்த பூங்காவெங்கிலும் காணப்படும் சுற்றுலா குடில்கள், தாங்களே சமைத்து தம் குடும்பத்தினரோடும், நண்பர்களோடும் அளவளாவி மகிழ விரும்புவோரை கருத்தில் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன.

  நகரின் பரபரப்புகளில் இருந்து விலகி அமைதியான, மனநிம்மதியளிக்கும் கூட்டங்களில் கலந்து கொள்ள விரும்புவோருக்கெனவே உருவாக்கப்பட்டுள்ள கருத்தரங்குக் கூடம் ஒன்றும் இங்கு காணப்படுகிறது.

  ஒருவர் ஸா-ஐ-மிகா பூங்காவை எளிதாக அடைய வேண்டுமெனில், ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு பேருந்து அல்லது கார் வசதியை உபயோகித்துக் கொள்ளலாம். மூர்ச்சையடைய வைக்கும் அழகு பொங்கும் பச்சை மலைகளின் ஊடாக பயணம் செய்து வரும்போது இயற்கை அழகில் மனம் கிறங்கிப் போகலாம்.

  + மேலும் படிக்க
 • 03நோகலிகை நீர்வீழ்ச்சி

  சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். ஒவ்வொரு வருடமும் பெய்யும் அபரிமிதமான மழைப்பொழிவுக்கு பெயர் போன சிரபுஞ்சியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, முக்கியமாக இந்த மழைகளிலிருந்தே அதன் நீர் வரத்தைப் பெறுகிறது.

  எனவே, டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது, இதுவும் குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். மிகச் சரியாக இந்த நீர்வீழ்ச்சியின் கீழ்ப்புறத்தில், நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பாரித்த நீர் நிறைந்த அழகிய முங்கு குளம் ஒன்று உருவாகியுள்ளது.

  நோகலிகை நீர்வீழ்ச்சிக்கு, கா லிகாய் என்ற பெயருடன் வாழ்ந்து, இந்த நீர்வீழ்ச்சிக்கு அடுத்தாற் போல் உள்ள செங்குத்தான மலையிலிருந்து கீழே விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய உள்ளூர் புராணத்திலிருந்தே இவ்வாறு பெயர் சூட்டப்பட்டுள்ளது.

  முன்பெல்லாம், இதிலிருந்து சற்று தொலைவில் உள்ள நோக்குமுனையிலிருந்து மட்டுமே பார்க்க்க்கூடியதாக இருந்தது நோகலிகை நீர்வீழ்ச்சி. ஆனால், சமீபத்தில் கட்டப்பட்ட படிகள் அதன் அடிப்புறத்திற்கு உங்களை அழைத்துச் சென்று இந்த நீர்வீழ்ச்சியை மிக அருகில் பார்க்கும் வாய்ப்பையும் வழங்குகிறது.

  கழுத்து வலி, ஆஸ்துமா போன்ற நோய்களினால் அவதிப்படுவோர் இறங்கி வர வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகின்றனர்; ஏனெனில், பல நூறு படிகளில் இறங்கி வருவது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாகும்.

  இப்பகுதியை சுற்றிலும் காணப்படும் ஏராளமான உணவு விடுதிகள் மற்றும் உணவுச் சாலைகளில் உள்ளூர் காஸி உணவு வகைகளிலிருந்து வடக்கு மற்றும் தெற்கு இந்திய உணவு வகைள் வரையிலான பல்வேறு உணவு பதார்த்தங்களும் கிடைக்கின்றன.

  ஏன், சீன நூடுல்ஸ் கூட கிடைக்கிறது. இப்பகுதியின் உள்ளூர் கைவினைப் பொருட்களை வாங்கக்கூடிய வகையில் ஏராளமான சிறு கடைகளும் இங்கு காணப்படுகின்றன.

  + மேலும் படிக்க
 • 04ஈகோ பூங்கா

  ஈகோ பூங்கா

  சிரபுஞ்சியின் சுற்றப்புறத்தில் சென்று பார்த்து வரக்கூடிய மிகச் சில அழகிய பூங்காக்களுள் ஈகோ பூங்காவும் ஒன்றாகும். மேகாலயா அரசால் உருவாக்கப்பட்டுள்ள இது, சுற்றிலும் உள்ள அழகிய பச்சை மலைகளையும், சோஹ்ராவின் பள்ளத்தாக்குகளையும், அவற்றிலிருந்து உருவாகும் நீர்வீழ்ச்சிகளையும் சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கும் வண்ணம், உயரமான மேட்டு நிலங்களுள் ஒன்றின் மீது அமைக்கப்பட்டுள்ளது.

  மேலும் இந்த பூங்காவில் பல்வகை ஆர்க்கிட்களையும் காண முடிகிறது. இதற்கான பெருமை ஷில்லாங் அக்ரி-ஹார்டிகல்ச்சுரல் சொஸைட்டியையே சேரும்.

  ஈகோ பூங்காவின் விளிம்பிலிருந்து நம் பார்வைக்குக் கிடைக்கும் இயற்கை அழகு, நம் கண்களை நிறைத்து நம்மை ஆனந்தத்தில் உறைய வைக்கக்கூடியதாகும். இந்த இடம், அருகாமையில் உள்ள வங்கதேசத்தின் சைலெட் சமவெளிகளைப் பார்ப்பதற்கு உகந்த நோக்குமுனையாகவும் திகழ்கிறது.

  ஆனால், வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் நாளில், வெளிச்சம் குறைவாக இருக்கும் காரணத்தினால் இப்பூங்கா வழங்கக்கூடிய கண்கவர் காட்சியை பூரணமாகக் கண்டு களிப்பது என்பது சற்று கடினமே.

  இந்த ஈகோ பூங்காவை சென்று அடைய மிகத் தோதான ஒரு வழி, ஷில்லாங்கிலிருந்து மேகாலயா சுற்றுலாத் துறையால் இயக்கப்படும் ஒரு கார் அல்லது பேருந்து மூலம் பயணம் மேற்கொள்வதேயாகும்

  + மேலும் படிக்க
 • 05மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி

  மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி

  மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, மேகாலயாவின் கண்கவர் நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். மௌஸ்மாய் கிராமத்துக்கு மிக அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது.

  நோஸ்ங்கிதியாங் நீர்வீழ்ச்சி என்று உள்ளூரில் அறியப்படும் மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, சுமார் 315 மீட்டர் உயரத்துடன், இந்தியாவின் நான்காவது உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக இருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது.

  இது, ஏழு சிறிய நீர்வீழ்ச்சிகளாகப் பிரிந்து, கடுமையான சுண்ணாம்புக் கல்லாலான செங்குத்தான  பாறைகளின் வழியே பொங்கிப் பிரவகித்து ஓடும் அமைப்பைக் கொண்டு “ஏழு சகோதரிகளின் நீர்வீழ்ச்சி” என்றும் வழங்கப்படுகிறது.

  வெளிச்சமான, சூரியன் தகிக்கும் ஒரு நாளில், இந்த நீர்வீழ்ச்சியின் நீரில் கதிரொளி பட்டுத் தெறித்து, பல்வேறு வண்ணச்சிதறல்களை திசையெங்கும் படரச் செய்யும் காட்சியைக் காண கண் கோடி வேண்டும்.

  அதுவே வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் ஒரு நாளில், சிறு மேகப் பொதிகள் உங்கள் கால்களின் கீழ் தவழ்ந்து, நீர்வீழ்ச்சியைச் சுற்றி படர்ந்து நிற்கும் காட்சி மற்றொரு அற்புதமாகும். இந்த ஸ்தலத்தை சென்றடைவதற்கான மிகச் சிறந்த வழி, ஷில்லாங்கிலிருந்து ஒரு சுற்றுலா கார் அல்லது பேருந்து மூலம் செல்வதே ஆகும்.

   

  + மேலும் படிக்க
 • 06மௌம்லூ குகை

  மௌம்லூ குகை

  க்ரெம் மௌம்லூ என்று பிரபலமாக வழங்கப்படும் மௌம்லூ குகை இந்தியத் துணைக் கண்டத்தின் நான்காவது நீளமான குகை ஆகும். சுமார் 4,503 மீட்டர் அளவிலான அசரடிக்கும் நீளத்துடன் காணப்படும் இது, இப்பகுதியின் முன்னணி சுற்றுலா ஈர்ப்புகளுள் ஒன்றாகும்.

  இந்த குகைக்கு ஒன்றுக்கு மேற்பட்ட நுழைவு வாயில்கள் உள்ளன. இவற்றுள் சில மிகவும் அபாயகரமானவையாகும். எனவே, பாதுகாப்பாக உள்ளே செல்ல, சற்று அதிகமான உயரத்தில் (நில மட்டத்திலிருந்து சுமார் 10 அடி உயரத்தில்), லும் லாபாவின் மேற்கு விளிம்பில் காணப்படும் நுழைவு வாயிலைத் தேர்ந்தெடுக்கலாம்.

  இந்த குகையின் உள்ளே தடம் பதித்துச் செல்லும் ஐந்து ஆறுகளினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு அழகிய குளத்தை இக்குகையின் உட்புறத்தில் காணலாம்.

  மௌஸ்மாய் குகை போலன்றி, மௌம்லூ குகை மிகவும் அபாயகரமானது என்பதை கவனத்தில் கொள்வது மிகவும் அவசியம். எனவே, இக்குகைக்குள் செல்வதற்கு முன் விசேஷ பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் தயாரிப்புகள் தேவைப்படும்.

  ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் சுற்றுலாக் கார் மூலம் செல்வதே, மௌம்லூ குகைக்கு செல்வதற்கான மிகவும் சிறந்த மற்றும் எளிதில் சாத்தியமாகக்கூடிய வழியாகும்.    

  + மேலும் படிக்க
 • 07மௌஸ்மாய் குகை

  மௌஸ்மாய் குகை

  சிரபுஞ்சியின் மௌஸ்மாய் குகை, பெரும்பாலான சாதாரண சுற்றுலாப் பயணிகள் எளிதாக சென்று வரக்கூடிய குகைகளுள் ஒன்றாகத் திகழ்கிறது. இதற்கு காரணம் என்னவெனில், எவ்வித சிறப்பு தயாரிப்புகளோ அல்லது வழிகாட்டிகளின் உதவியோ ஏதுமின்றி, சுற்றிப் பார்க்கக் கூடியதான அதன் எளிமையான அமைப்பே ஆகும்.

  இந்த 150 மீட்டர் குகை, உட்புறத்தில் பூரணமாக வெளிச்சமூட்டப்பட்டுள்ளதால், இங்கு செல்லும் யாரும் அவர்கள் செல்ல வேண்டிய வழியை எளிதாக கண்டு கொள்ள இயலும்.

  மிகப் பெரியதாகக் காணப்படும் இக்குகையின் நுழைவு வாயில் போகப் போக சிறிதாக ஆகிக்கொண்டே போய் விரைவில் மிகச் சிறியதாக ஆகிறது.

  ஏராளமான வளைவுகள் மற்றும் திருப்பங்களைக் கொண்டிருக்கும் இந்த குகையை சுற்றிப் பார்ப்பது மிக சுவாரஸ்யமானதொரு அனுபவத்தை வழங்க்க்கூடியதாகும். ஆனால், மிக அதிக மக்கள் கூட்டத்துடன் பயணிக்க நேர்ந்தால் லேசாக மூச்சு முட்டுவது போல் உணர்வீர்கள்.

  இக்குகையின் உட்புறம், பல்வேறு தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் உறைவிடமாகவும், வௌவ்வால்கள் மற்றும் பூச்சிகளின் வசிப்பிடமாகவும் விளங்குகிறது. சொட்டு சொட்டாக வடியும் நீரிலிருந்து உருவாகியுள்ள பாறைகளின் அழகிய உருவாக்கம் இயற்கையின் மற்றொரு அதிசயமாகும்.

  ஷில்லாங்கிலிருந்து ஒரு சுற்றுலா கார் அல்லது பேருந்து மூலம் மௌஸ்மாய் குகையை அடைவதே சாத்தியப்படக்கூடிய மிக எளிதான வழியாகும்.

  + மேலும் படிக்க
 • 08நோங்சாவ்லியா

  நோங்சாவ்லியா

  நோங்சாவ்லியா, சோஹ்ராவிற்கு (சிரபுஞ்சி) அருகில் அமைந்துள்ள ஒரு மிகப் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாகும். வருடந்தோறும் இது உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது.

  வடகிழக்கு இந்தியாவின் முதல் தேவாலயத்தைக் கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த இது, வெல்ஷ் மிஷனரிகளால் 1848 ஆம் ஆண்டில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் காலத்தின் போது விளங்கிய அழகிய கட்டுமான பாணியை, இந்த தேவாலயத்தின் வடிவில் தெளிவாகக் காணலாம்.    

  இதே இடத்தில் தான், தாமஸ் ஜோன்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த மற்றொரு மிஷனரி, பிற்காலத்தில் காஸி மற்றும் ஜெயின்டியா மலையின் இதர பகுதிகள் எங்கும் பரவி, காஸி இலக்கியம் வளர பெரும் தொண்டாற்றிய காஸி எழுத்துக்களை அறிமுகப்படுத்தியது.

  ஓரிரண்டு நாட்கள் இங்கு தங்கிச் செல்ல விரும்புவோர் சிரபுஞ்சி விடுமுறை உல்லாச விடுதி, கோனிஃபெரஸ் உல்லாச விடுதி போன்ற அழகிய ஹோட்டல்கள் மற்றும் உல்லாச விடுதிகள் மற்றும் அருகாமையில் உள்ள ஸா-ல்-மிகா பூங்கா போன்றவற்றில் தங்கிச் செல்லலாம்.

  சிரபுஞ்சியிலிருந்து சுமார் 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நோங்சாவ்லியாவிற்குச் செல்ல, சிரபுஞ்சி அல்லது ஷில்லாங்கிலிருந்து ஒரு டாக்ஸி ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

  + மேலும் படிக்க
 • 09கோ ரம்ஹா

  கோ ரம்ஹா

  “மோட்ரோப்” அல்லது “தூண் பாறை” என்றும் பிரபலமாக அறியப்படும் கோ ரம்ஹா, சிரபுஞ்சியில் உள்ள பிரசித்தி பெற்ற ஒரு சுற்றுலாத் தலமாகும். இப்பாறையின் வடிவம் மற்றும் அளவு ஆகியவை ஒரு ராட்சத கூம்பைப் போன்று அமைந்து காண்போரை வசீகரிக்கிறது.

  புராணங்களின் படி, கோ ரம்ஹா ஒரு தீய ஆவியின் கூம்பு வடிவ கூடையின் படிமம் என்று நம்பப்படுகிறது. எனினும், இது மட்டுமே இவ்விடத்தின் முக்கியத்துவம் அன்று.

  இந்த பாறைகளின் ஊடாக பாய்ந்து ஓடி அழகிய நீர்வீழ்ச்சியாக உருமாறும் நீரோடையின் காட்சியானது, அருகாமையில் உள்ள வங்கதேச சமவெளியின் காட்சியுடன் இணைந்து காணத் தெவிட்டாத காட்சியை நம் கண்களுக்கு விருந்தாக்குகிறது.

  சமவெளிகளில் இருந்து மேலெழும்பி இப்பாறைகளின் மேல் படர்ந்து செல்லும் மேகப் பொதிகள் இந்த இடத்தின் அழகுக்கு மேலும் மெருகூட்டுகின்றன.

  இவை அனைத்தும் பாறைக்கு அடுத்தாற் போல் உள்ள நோக்குமுனையில் இருந்து பார்த்தால் தெரியக்கூடிய காட்சிகளாகும். ஆனால் சிரபுஞ்சியின் சாலைகள் வழியாக பயணம் மேற்கொள்வோருக்கு இப்பாறையின் இதர பகுதிகளைக் காணும் வாய்ப்பு கிட்டும்.

  கோ ரம்ஹாவுக்குச் செல்ல உகந்த வழி ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு சுற்றுலா வாகனத்தில் பதிவு செய்து வருவதே ஆகும்.

  + மேலும் படிக்க
 • 10கைன்ரெம் நீர்வீழ்ச்சி

  கைன்ரெம் நீர்வீழ்ச்சி

  இந்தியாவின் ஏழாவது உயரமான நீர்வீழ்ச்சியான கைன்ரெம் நீர்வீழ்ச்சி, சோஹ்ராவின் மலைகளில் இருந்து மூன்று படிநிலைகளில் கீழ்நோக்கிப் பாய்கிறது. அருகருகாக பாயும் இதர சிறு அருவிகளை அருகாமையில் கொண்டுள்ள கைன்ரெம் நீர்வீழ்ச்சி, மழைக்காலத்தின் போது காணத் தெவிட்டாத ஒரு காட்சியாகும்.

  இந்த கம்பீரமான நீர்வீழ்ச்சியைக் கண்ணாறக் காண்பதற்கான உகந்த இடம் தங்க்கரங் பூங்காவின் உட்பகுதியே ஆகும். எனினும், சிரபுஞ்சியை வங்கதேசத்துடன் இணைக்கும் சாலையிலிருந்து பார்த்தால் இந்த நீர்வீழ்ச்சியை அதன் அடிப்புறத்திலிருந்து காணலாம்.

  சிரபுஞ்சி, அது ஒவ்வொரு வருடமும் பெறும் அதீத மழைப்பொழிவுக்கு மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது. அதனால் இங்குள்ள பெரும்பாலான நீர்வீழ்ச்சிகள் இந்த மழைகளிலிருந்தே தமக்கான நீர் வரத்தைப் பெறுகின்றன.

  எனவே, கைன்ரெம் நீர்வீழ்ச்சி செல்வதற்கான மிகச் சிறந்த காலம், அடைமழை பொழியும் காலமே ஆகும்; ஏனெனில் குளிர்காலத்தின் போது நீர்வீழ்ச்சிகள் சிறு தாரையாக வறண்டு போய் காணப்படும்.    

  தங்க்கரங் பூங்கவையோ அல்லது நேரிடையாக கைன்ரெம் பூங்காவையோ அடைய வேண்டுமெனில், மேகாலயா சுற்றுலாத் துறையினால் ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் சுற்றுலா கார் அல்லது பேருந்தில் பதிவு செய்து செல்லலாம்.

  + மேலும் படிக்க
 • 11தங்க்கரங் பூங்கா

  தங்க்கரங் பூங்கா

  அழகானதும், மிகவும் பிரபலமான நோக்குமுனையுமாகிய தங்க்கரங் பூங்காவிலும், பூங்காப் பகுதியில் அமைந்துள்ள பசுமை இல்லத்திலும் பல்வேறு வகை செடிகள் மற்றும் மரங்களைக் காணலாம்.

  இந்த குறிப்பிட்ட பூங்கா, இயற்கையைப் பற்றி பொருட்படுத்தாது, ஊஞ்சல் அல்லது ஸீ-ஸா, அல்லது ஒரு சறுக்கு மரம் போன்றவற்றில் விளையாடுவதையே தன் வாழ்நாளின் ஆகப்பெரும் இன்பமாகக் கருதும் குழந்தைகளின் தேவைகளை கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

  பூங்காவெங்கிலும் காணப்படும் உயரம் குறைந்த மரங்கள் மற்றும் பலகைகள் இங்கு வருவோர்க்கு ஓய்வு அளிக்கும் இடங்களாக விளங்குகின்றன. இப்பூங்கா வளாகத்தினுள், ஒரு அழகிய சிறு நீரூற்றும் கட்டப்பட்டுள்ளது.

  உல்லாசப் பயணத்துக்கான மிகச் சிறந்த இடமாக இருப்பதோடல்லாமல், தங்க்கரங் பூங்கா அருகில் உள்ள வங்கதேச சமவெளியின் முழுப்பரப்பையும், இம்மலையில் சுமார் மூன்று படிநிலைகளில் உருண்டு கீழ் நோக்கிப் பாயும் கைன்ரெம் நீர்வீழ்ச்சியையும் நம் கண்களுக்கு விருந்தாக்கி, அதிகபட்ச புகழுடன் விளங்குகிறது.

  தங்க்கரங் பூங்காவை அடைவதற்கான மிகச் சிறந்த வழி, ஷில்லாங்கிலிருந்து வரும் ஒரு சுற்றுலா வாகனத்தில் பதிவு செய்து வருவதேயாகும்.

  + மேலும் படிக்க
 • 12பச்சைப் பாறை கால்நடைப் பண்ணை

  பச்சைப் பாறை கால்நடைப் பண்ணை

  பச்சைப் பாறை கால்நடைப் பண்ணை, சிரபுஞ்சியின் சுற்றுலா ஈர்ப்புப் பட்டியலில் மிகச் சமீபத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. குதிரையேற்றம், பாரம்பரிய வில்வித்தை போன்றவற்றின் சுவாரஸ்யமான கதம்பமாகத் திகழும் இந்த இடம், பல ஏக்கர் பரப்பளவிலான பசுமையான புல்வெளிகளால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது.

  வெகு காலம் முன்பே இங்கு வந்து குடியேறி, சில பல தலைமுறைகளாக இங்கு வாழ்ந்து வந்த, ஆங்கிலேய வம்சாவளியினரான “ஷாட்வெல்ஸ்” குடும்பத்துக்குச் சொந்தமானது இந்த இடம். அவர்கள் இங்கு இருந்த காலத்தில் கட்டிய இந்த இடம் பழங்காலத்தைப் பற்றிய சிறு பார்வை நமக்குக் கிடைக்க வழி செய்கிறது.

  இன்று இந்த இடம், ஒரு தேநீர் விடுதி, பழங்கால சிதிலங்களுக்கிடையில் கட்டப்பட்டுள்ள ஒரு ஓய்விடம், ஒரு சோலை, மற்றும் ஒரு இயற்கை வழித்தடம் போன்றவற்றை உள்ளடக்கியுள்ளது.

  இந்த இடத்தை சூழ்ந்து நிற்கும், முடிவிலி போல் காட்சியளிக்கும் நீல மலைகள் மற்றும் ஆழமான பள்ளத்தாக்குகள் ஆகியவற்றின் பூரண பரப்பைக் கண்டு களிக்கும் வண்ணம் ஒரு நோக்குமனையும் இங்கு கட்டுப்பட்டுள்ளது.

  சுற்றுலாப் பயணிகள் ஷில்லாங்கிலிருந்து இயக்கப்படும் ஒரு சுற்றுலாக் காரில் பயணித்து, மிகச் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் இந்த இடத்தை எளிதாக அடையலாம்.  

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
20 Feb,Tue
Check Out
21 Feb,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
20 Feb,Tue
Return On
21 Feb,Wed