மார்ச் 14 தமிழக பட்ஜெட் வெளியிடப்பட்டதில் பல்வேறு நலத்திட்டங்கள் தமிழக நலனுக்காக காத்திருக்கிறது என்பதை நாம் அறிந்தோம்! அவற்றில் ஒன்று தான் நீண்ட காலமாக நாம் எதிர்பார்த்து கொண்டிருந்த பூந்தமல்லி - போரூர் மெட்ரோ! அதற்கான பதிலும் தற்போது கிடைத்துவிட்டது, இவ்வழித்தடங்களில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது!

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்ட விரிவாக்கம்
தற்போது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் திட்டங்களிலேயே மிகப்பெரிய திட்டமாக ரூ.63,246 கோடி மதிப்பீட்டில் 119 கி.மீ. தூரத்துக்கு மூன்று வழித்தடங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாம் கட்டப்பணிகள் மிகவும் வேகமாக நடைபெற்று வருகின்றன.இவ்வழித்தடங்களில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான உயர் வழித்தடம் இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
40 சதவீத பணிகள் நிறைவு
சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை மற்றும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு சென்னையின் புறநகர் பகுதிகளை இணைக்கும் வகையில் மெட்ரோ விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றது. இதுவரை 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் பூந்தமல்லி முதல் போரூர் வரையிலான ஒன்பது கிலோமீட்டர் வழித்தடம் வருகின்ற டிசம்பர் மாதம் திறக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையின் பல்வேறு மெட்ரோ வழிகள்
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தை சென்னை விமான நிலையத்திலிருந்து கிளாம்பாக்கத்திலுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் வரையிலான 15.46 கி.மீ. தூரத்துக்கு 9,335 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரையிலான 2176 கி.மீ. தூரத்துக்கு 9,744 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் பூந்தமல்லியிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரையிலான 27.9 கி.மீ. தூரத்துக்கு 8,779 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் நீட்டித்திடும் வகையில், விரிவான திட்ட அறிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
அனைத்து பகுதிகளும் இணைப்பு
சென்னை மெட்ரோ இப்போது 2 ரூட்களில் இயங்கி வரும் நிலையில், இதற்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு மாதமும் மெட்ரோ ரயிலை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதேநேரம் மறுபுறம் 2ம் கட்ட மெட்ரோ கட்டுமானமும் தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் மூன்று வழித்தடங்களில் மெட்ரோ 2 ஆம் கட்ட கட்டுமானம் நடந்து வருகிறது. இப்போது மாதவரம்- சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி- கலங்கரை விளக்கம், மாதவரம்- சோழிங்கநல்லூர் என 116.1 கிமீ தூரத்திற்கு மெட்ரோ 2 ஆம் கட்ட கட்டுமானம் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
கோவை, மதுரை மெட்ரோ பணிகள் விரைவில்
கோவை மாநகரில் அவினாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை வழித்தடங்களில் 10,740 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், மதுரை மாநகரில் திருமங்கலம் மற்றும் ஒத்தக்கடை பகுதிகளை இணைக்கும் விதமாக 11,368 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கென தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைகள் மத்திய அரசின் மூலதனப் பங்களிப்பு பெறுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் இந்த இரு நகரங்களிலும் மெட்ரோ ரயில் அமைக்கப்படுவதற்கான பணி தொடங்கப்படும்.
2025 இறுதியில் பூந்தமல்லி-போரூர் மெட்ரோ
இந்த இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் 118.9 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்படும் நிலையில் இதில் 50.5 கிலோமீட்டர் சுரங்கப்பாதை மெட்ரோவாக அமைக்கப்பட உள்ளது. இதில் தற்போது 19 கிலோமீட்டர் சுரங்கப்பாதை பணிகள் மட்டுமே தற்போது நிறைவடைந்துள்ளது. போரூர் கோடம்பாக்கம் இடையிலான வழித்தடத்தை விரைவில் திறக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது பூந்தமல்லி மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. எனவே 2025 இறுதியில் இந்த ரயில் நிலையம் திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கிறது.



Click it and Unblock the Notifications



