'மினி கோவா' என்றழைக்கப்படும் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமான புதுச்சேரியில் சூப்பர் ஸ்டாரின் 'பாண்டியன்' திரைப்படம் உட்பட கோ, நானும் ரவுடி தான், 96, அனேகன், காதலன், சமீபத்தில் வெளிவந்த பொன்னியின் செல்வன் 2 வரை ஏகப்பட்ட படங்கள் புதுச்சேரியில் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. பிரெஞ்சு சிட்டி, காலனித்துவ கட்டிடக்கலை, அழகிய கடற்கரைகள், உலகத்தர நகரமான ஆரோவில் என புதுச்சேரி எண்ணற்ற படப்பிடிப்பு தலங்கள் உள்ளன.
இருப்பினும் சென்னை, ஹைதராபாத் போன்ற பிற நகரங்களில் உள்ள பிரத்யேக ஃபிலிம் சிட்டி ஒன்று புதுச்சேரியில் இல்லை. ஆனால் புதுச்சேரியின் மணப்பட்டில் 100 ஏக்கர் பரப்பளவில் AVM ஸ்டுடியோ, ராமோஜி ஃபிலிம் சிட்டி போன்று உலகத்தரத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிலிம் சிட்டி ஒன்று விரைவில் உருவாகவிருக்கிறது. இதன் மூலம் புதுவையில் சுற்றுலா விரிவடைவதோடு வேலைவாய்ப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது!

புதுச்சேரி நோக்கி படையெடுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள்
குறைந்த கட்டணம், எளிதில் படப்பிடிப்புக்கான அனுமதி, இடையூறு இல்லாத சூழல் போன்ற காரணங்களால் கடற்கரை சாலை, ஒயிட் டவுன் உள்ளிட்ட பல இடங்களில் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. சென்னைக்கு மிக அருகில் இருப்பதால் படப்பிடிப்பு குழுவினருக்கு வசதியாகிப் போனதால் புதுச்சேரியில் படப்பிடிப்பு நடந்த பலரும் ஆர்வம் கொள்கின்றனர். செட் போடுவதற்கான செலவு குறைகிறது. நேரமும் மிச்சமாகிறது என்று தெரிவிக்கின்றனர். இந்த படப்பிடிப்புகள் மூலம் உள்ளூர் வர்த்தகம், வேலை வாய்ப்புகள் பெருகுகின்றன.

படப்பிடிப்பு தளமாக மாறிய புதுச்சேரி
நகரத்தின் மரங்களால் ஆன பவுல்வார்டுகள், கடற்கரை முன் மற்றும் தெருக் காட்சிகள் பழைய உலக அழகை வெளிப்படுத்தும் மற்றும் உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கின்றன. சென்னைக்கு அருகிலேயே இப்படியொரு அழகான இடமிருக்க திரைப்பட தயாரிப்பாளர்கள் கம்மி பட்ஜெட்டிலேயே ஷூட்டிங் செலவை முடிக்க பெரும்பாலான தயாரிப்பாளர்கள் புதுச்சேரியில் திரைப்படம் எடுக்கின்றனர். இதனால் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆஸ்கார் விருது பெற்ற 'லைஃப் ஆப் பை' உட்பட பல படங்கள் புதுவையில் திரைப்படமாக்கப்பட்டன.

ஃபிலிம் ஸ்டுடியோ அமைக்கக் கோரி விண்ணப்பம்
புதுச்சேரியில் ஒரு நிர்வகிக்கப்பட்ட ஃபிலிம் ஸ்டுடியோ இருந்தால் புதுவையின் சுற்றுலா பன்மடங்கு விரிவடையும். அதோடு வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். இது வணிகத்தில் உள்ளவர்களுக்கும், உள்ளூர் மக்களுக்கும் உதவியாக இருக்கும் என்பதால் கலைத் துறையினர் பலரும் ஃபிலிம் ஸ்டுடியோ அமைக்கக் கோரி அப்போதைய முதல்வரான ரங்கசாமியிடம் விண்ணப்பம் கொடுத்தனர்.
20 வருடங்களாக நடைபெறும் பணிகள்
கலைத்துறையினரின் கோரிக்கையை ஏற்று புதுச்சேரி அருகே மணப்பட்டில் புதுவை அரசு மாளிகை அருகே 100 ஏக்கர் பரப்பளவில் திரைப்பட நகரம் அமைக்கப்படும் என புதுச்சேரி அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. 2007-ம் ஆண்டு முதல் கட்டமாக 40 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு அங்கு திரைப்பட நகரம் அமைக்க முதல்வர் ரங்கசாமி பூமி பூஜை நடத்தி, பணிகளை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டது.

கூடிய விரைவில் ஃபிலிம் ஸ்டுடியோ துவக்கம்
பின்னர் ஆட்சி மாற்றம், நிதி பற்றாக்குறை, ஒப்புதல் போன்ற பல்வேறு காரணங்களால் ஃபிலிம் ஸ்டுடியோ அமைக்கும் பனி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இப்போது மீண்டும் ஃபிலிம் சிட்டி அமைப்பதற்கான பணிகள் முழு வீச்சில் துவங்கப்படவுள்ளன. அதன்படி மத்திய கலாச்சார அமைச்சக அதிகாரிகள் புதுவை வந்து ஆய்வு செய்தனர். திரைப்பட நகரம், பொழுதுபோக்கு மையத்தை வணிக ரீதியாக பயன்படுத்த திட்ட அறிக்கை தயாரிக்க குழு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதிகரிக்கும் சுற்றுலா மற்றும் வேலைவாய்ப்பு
இந்தப் பணிகள் முடிவடைந்ததும் திரைப்பட நகரத்தில் என்னென்ன இடம்பெற வேண்டும் என்பது குறித்து அந்தக் குழு முடிவு செய்யும். அதன் பின் மணப்பட்டு பகுதியில் நவீன திரைப்பட நகரம் மற்றும் பொழுதுபோக்கு மையம் அமைக்கும் பணிகள் தொடங்கும். கூடிய சீக்கிரத்தில் புதுவை நகரில் பிலிம் சிட்டி திறப்பு விழா நடைபெற்று சுற்றுலாவும் வேலை வாய்ப்பும் பன்மடங்கு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications





