தாம்பரத்தில் கூடுதல் நடைமேடை பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தாம்பரம் ரயில் நிலையத்தில் புதிய பிளாட்பாரம் எப்பொழுது தயாராகும் எனும் முக்கியமான அறிவிப்பினை ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது. சென்னை மாநகரின் மூன்றாவது முக்கிய ரயில்வே ஜங்க்ஷனான தாம்பரம் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் துவுங்கப்பட்டுள்ளன.

ஜூலை 23 இல் தொடங்கிய ரயில்வே பராமரிப்பு பணிகளில் புதிய பிளாட்பாரம் அமைப்பு, முக்கியமான பொறியியல் மற்றும் சிக்னல் மேம்படுத்தல் பணிகள் மற்றும் தாம்பரம் யார்டை விரிவானதாக மற்றும் முக்கிய பணிகள் ஆகஸ்ட் 18 க்குள் முடிவடையும் என்று தெற்கு ரயில்வே கூறியுள்ளது!
சென்னையின் முக்கிய பகுதியாக மாறிய தாம்பரம்
ஒரு காலத்தில் சென்னையின் புறநகர் பகுதியாக இருந்த தாம்பரம், கடந்த 20 ஆண்டுகளில் சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு வளர்ந்துள்ளது. சென்னை தற்போது தெற்கே செங்கல்பட்டு வரையிலும், மேற்கே ஸ்ரீபெரும்புதூர் வரையிலும், வடக்கே பொன்னேரி வரையிலும் வளர்ந்துள்ளது. கிழக்கில் மகாபலிபுரம் வரையிலும் சென்னை வளர்ந்துவிட்டது. சுமார் 60 கிலோமீட்டர் சுற்றளவுக்கு வளர்ந்துள்ள சென்னையின் மையப்பகுதி என்று சொல்லும் அளவிற்கு தாம்பரம் உருவெடுத்துள்ளது.

பீக் ஹவர்ஸ் நேரத்தில் நெரிசலை தவிர்க்க புதிய பிளாட்பாரம்
மக்கள் நெரிசல் மிகுந்த காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்வோர், அலுவலகம் செல்வோர் பெரும்பாலும் நம்புவது சென்னை புறநகர் ரயில்களைத் தான். பீக் ஹவர் நேரத்தில் செங்கல்பட்டில் இருந்து தாம்பரம் வழியாக கடற்கரைக்கு இயக்கப்படும் ரயில்களுக்கு உரிய நேரத்தில் பிளாட்ஃபாரம் கிடைப்பதும் தாம்பரத்தில் சிக்கலாகிறது. இதன் காரணமாக புதிய தண்டவாளம் அமைக்க முடிவு செய்து, அதற்கான பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன.
தினமும் 2 லட்சம் பயணிகளை கையாளும் தாம்பரம் ரயில் நிலையம்
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களை விட அதிக பயணிகளை கையாளும் ரயில் நிலையமாக கருதப்படும் தாம்பரம் ரயில் நிலையம். சென்னை புறநகர் ரயில்கள் மட்டுமின்றி, பல எக்ஸ்பிரஸ் ரயில்களும் தாம்பரம் வழியாகவே பயணிக்கின்றன. இதன் காரணமாக தினசரி 2 லட்சம் பயணிகள் வரை தாம்பரம் ரயில் நிலையத்தை பயன்படுத்துகின்றனர். செங்கல்பட்டு செல்லும் பயணிகள் நலன் கருதி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டுக்கு புறநகர் மின்சார ரயில்கள் அதிகளவில் இயக்கப்படுகின்றன.
புறநகர் ரயில் சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம்
தாம்பரம் வழியாக செல்லும் ரயில்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு ஏற்ப நடைமேடைகளின் எண்ணிக்கையை உயர்த்தும் வகையில் 12வது தண்டவாள வழித்தடம் அமைக்கும் பணி துவங்கப்பட்டு மிகவும் துரிதமாக பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் மூலம் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே இயக்கப்படும் புறநகர் ரயில் சேவையின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் முடிவடையும் பராமரிப்பு பணிகள்
இந்தப் பணிகளை ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயித்த தெற்கு ரயில்வே, அதற்காக சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வரை இயக்கப்படும் 55 புறநகர் ரயில்களின் சேவையை நிறுத்த தெற்கு ரயில்வே முடிவு செய்தது. எனினும், பகல் நேரங்களில் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டால், பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகம் செல்வோர் பாதிக்கப்படுவார்கள் என்பதால், அந்த முடிவை திரும்பப் பெற்றது. இந்த முடிவுக்கு ரயில் பயணிகளும் வரவேற்பு தெரிவித்தனர்.
ரயில் பயணிகள் உற்சாகம்
இந்தப் பணிகள் முழுமையடையும் பட்சத்தில், தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயான மின்சார ரயில்கள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே தாம்பரத்தில் உள்ள 6 பிளாட்பாரங்கள், சென்னை புறநகர் மின்சார ரயில்கள் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல பயன்படுத்தப்படுகின்றன. வெளியேற்றப்பட்ட 5 பிளாட்பாரங்கள், பிற ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்களை கையாள பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் கூடுதலாக ஒரு பிளாட்பாரம் கிடைப்பது, தாம்பரம் ரயில் வந்து செல்லும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என ரயில்வே அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த அறிவிப்பை புறநகர் ரயில் பயணிகள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.



Click it and Unblock the Notifications





