போச்சம்பல்லி - இந்தியாவின் பட்டு நகரம்

ஆந்திர மாநிலம் நல்கொண்டா மாவட்டத்தில் அமைந்திருக்கும் போச்சம்பல்லி நகரம், அங்கு தயார் செய்யப்படும் தரம் மிக்க பட்டுப் புடவைகளால் இந்தியாவின் பட்டு நகரம் என்ற சிறப்புப் பெயரை பெற்றுள்ளது. இந்த நகரம் புடவைகளுக்காக மட்டும் அல்லாமல் அதன் சுவை மிக்க கலாச்சாரத்துக்காகவும், பாரம்பரியத்துக்காகவும், புராதனத்துக்காகவும், வரலாற்று சிறப்புக்காகவும், எல்லாவற்றுக்கும் மேலாக இவை யாவையும் கிரகித்துக் கொண்டு தனித்துவமான நவீனப் பாதையில் பயணிக்கும் பாங்குக்காகவும்  மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

போச்சம்பல்லி நகரம் பசுமை போர்த்திய குன்றுகள் புடைசூழ நெடுதுயர்ந்த பனை மரங்கள், ஏரிகள், குளங்கள் மற்றும் கோயில்களுக்கு மத்தியில் எழில் கொஞ்சம் நகரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நகரத்தில் வாழும் மக்கள் தங்களின் அன்றாட பணிகளுக்கு நடுவிலும் விருந்தோம்பல் பண்பில் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை. இதன் காரணமாகவே போச்சம்பல்லி நகருக்கு வரும் வெளிநாட்டுப் பயணிகள் வாரக்கணக்கில் தங்கி பட்டுப் புடவைகள் நெய்யும் கலையை நகர மக்களிடமிருந்து ஆர்வத்துடன் பயின்று செல்கின்றனர்.

இந்திய வரலாற்றில் மிகப்பெரிய புரட்சிகளில் ஒன்றாக கருதப்படும் பூதான் இயக்கத்துக்காக போச்சம்பல்லி நகரம் சரித்திரங்களின் பக்கங்களில் முக்கிய இடம் வகிக்கிறது. அதாவது 1950-களில் ஏழை விவசாயிகளுக்கு நிலங்களை பெற்றுத் தர இந்தியா முழுவதும் நடையாய் நடந்து ஒவ்வொரு நில உரிமையாளர்களிடம் சென்று ஆச்சார்ய வினோபா பாவே கோரிக்கை விடுத்தார்.

அப்படி அவர் நடத்திய பூதான் இயக்கம் துவங்கிய இடமாக போச்சம்பல்லி நகரம் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த நகரத்தை சேர்ந்த நிலச்சுவாந்தாரான ராமச்சந்திர ரெட்டி என்பவர் பூதான் இயக்கத்திற்காக தன்னுடைய 250 ஏக்ரா நிலங்களை தானமாக அளித்தார்.

அதன் பிறகு வேறு பல நில உரிமையாளர்களும் தங்களுடைய நிலங்களை ஏழைகளுக்கு அளிக்க முன் வந்தனர். இதன் காரணமாக போச்சம்பல்லி நகரம் அன்றிலிருந்து பூதான் போச்சம்பல்லி என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வருகிறது.

போச்சம்பல்லி நகரின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக வினோபா மந்திர் மற்றும் 101 தர்வாஜா இல்லம் ஆகியவை அறியப்படுகின்றன. போச்சம்பல்லி நகரில் விமானம் மற்றும் ரயில் நிலையங்கள் இல்லாதபோதும், ஹைதராபாத் உள்ளிட்ட ஆந்திராவின் பிற நகரங்களிலிருந்து சாலை வழியாக போச்சம்பல்லி நகரை சுலபமாக அடைந்து விட முடியும்.

Please Wait while comments are loading...