சிக்கிம் -ஆசீர்வதிக்கப்பட்ட மலைகளும், நிறைவான சுற்றுலாத் தலங்களும்!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

புத்துணர்வு பெற விரும்புவோரை சுற்றுலாப் பயணங்கள் எப்போதுமே ஏமாற்றுவதில்லை. முன்னரே அறிந்த இடம் என்றாலும் அறியாத இடம் என்றாலும் பயண விரும்பிகளுகக்கு அற்புதமான அனுபவத்தை அளிக்கின்றன சுற்றுலாத் தலங்கள்.

அதிலும் உள்ளூர் மக்களால் 'சொர்கம்' என அழைக்கப்படும் அற்புதமான இயற்கை காட்சிகள் நிறைந்த, பனிகளால் சூழப்பட்ட சிகரங்களைக் கொண்ட, பூக்களால் நிறப்பப்பட்ட புல்வெளிகளுடன் காட்சியளிக்கும், பரிசுத்தமான நீரால் நிரப்பப்பட்ட நீர்நிலைகள் உள்ள இடத்திற்கு பயணித்தால் ஏற்படும் ஆனந்தத்தை அளவிடவா முடியும்?

இவ்வளவு சிறப்புகளைப் பெற்ற அழகான இடம் எதுவாக இருக்கும்? சில வார்த்தைகளில் வர்ணித்தாலே இவ்வளவு அற்புதமாகத் தெரியும் அந்த இடம் எதுவாக இருக்கும்? ஆம்! நாம் 'சிக்கிம்' என்ற இடத்தைப் பற்றிதான் பேசிக்கொண்டிருக்கிறோம்.

இமயமலைகளுக்கிடையே இயற்கையின் ஆசீர்வாதத்துடன் அமைந்திருக்கிறது சிக்கிம் மாநிலம். சிக்கிம் மாநிலத்தின் அனைத்து இடங்களும் வாழ்க்கையில் ஒருமுறையாவது பார்த்தே ஆகவேண்டிய அளவிற்கு அழகு நிறைந்தவை. சிக்கிம் மாநிலம் பெருமைப்படத்தக்க பல தனிச்சிறப்புகளை உடையதாகும்.

வாருங்கள், அதிகம் அறியப்படாத இந்த மலை மாநிலமான சிக்கிமைப் பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.

சிக்கிம் மாநிலத்தின் புவியியல் அமைப்பு

சிக்கிம் இமயமலைகளுக்கு நடுவே அமைந்துள்ள மலைசார்ந்த மாநிலமாகும். இம்மாநிலத்தின் பெரும்பாலான நகரங்கள் கடல் மட்டத்தில் இருந்து 280மீ முதல் 8585மீ உயரம் வரை அமைந்துள்ள மலைப்பகுதிகளாகவே இருக்கின்றன.

உலகின் 3-வது உயரமான சிகரமான கஞ்சஞ்ஜங்கா இங்கு அமைந்துள்ளது. கிழக்கில் பூட்டானையும், மேற்கில் நேபாளத்தையும், வடக்கே திபெத்தையும் தன் எல்லைகளாகக் கொண்டிருக்கிறது சிக்கிம்.

ஏறத்தாழ 28 மலைச் சிகரங்களும், 227 அதிக ஆழமாக ஏரிகளும், 80 பனி மலைகளும் சிக்கிமில் இருக்கின்றன. மேலும் தனிச்சிறப்பாக சிக்கிமில் 100 நதிகளும், சில சிறிய நதிகளும், சுடுநீர் ஊற்றுகளும் அமைந்துள்ளன. இயற்கையான 50 டிகிரி சூட்டில் இருக்கும் வெந்நீர் ஊற்றுகளுக்கு மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது.

சிக்கிமின் மூன்றில் ஒரு பகுதி அடர்ந்த காடுகளாக உள்ளது. மேலும் பனிகளால் நிரம்பிய பல ஓடைகள் சிக்கிமின் உயிர்நாடி என அழைக்கப்படும் தீஸ்தா நதியில் சங்கமிக்கின்றன.

வானிலை

சிக்கிமின் வானிலை அம்மாநிலத்தைப் போலவே அருமையாக விளங்குகிறது. வருடம் முழுவதும் சீரான பனிப்பொழிவு பெறும் இந்தியாவின் வெகு சில மாநிலங்களில் சிக்கிமும் ஒன்று என்றாலும், இம்மாநில மக்கள் வருடம் முழுவதும் மிதமான வானிலையையே அனுபவிக்கிறார்கள்.

வட பகுதி பனியுறைநிலமாக இருக்கும் அதே சமயம் தென்பகுதி மிதமான வானிலையுடன் விளங்குகிறது. தட்பவெட்ப நிலை 0 டிகிரி வரை செல்லும்போதெல்லாம் வடப் பகுதி உறைந்து உறைநிலமாக நான்கு மாதங்கள் வரை நீடிக்கிறது.

சிக்கிமில் நிலவும் மிதமான வானிலைக்கு முக்கியமான காரணம் கோடை காலங்களில் தட்பவப்பம் 28 டிகிரிக்கு மிகாமலும், குளிர்காலத்தில் 0 டிகிரிக்கு குறையாமலும் இருப்பதுதான். மழைக்காலங்கள் பலமான மழை பெய்வதால் அடிக்கடி ஆபத்தான மணற்சரிவுகள் ஏற்படுவதுண்டு.

சிக்கிமின் வேறு பெயர்கள், அதன் உபபிரிவுகள் மற்றும் மக்கள் தொகை பற்றி...

சிக்கிம் பல பெயர்களில் வழங்கப்படுகிறது. உள்ளூர் பழங்குடிகளான லெப்சா மக்கள் 'நெயி-மே-எல்', அதாவது சொர்கம் எனப் பொருள்படும்படியும், லிம்பு மக்கள் 'புதிய வீடு' என்ற பொருளில் 'சுகிம்' எனவும் அழைக்கிறார்கள். பூட்டியா மக்களோ 'அரிசி பள்ளத்தாக்கு' என்ற பொருளில் 'பெய்முல் டெமஜோங்' என வழங்குகிறார்கள்.

சிக்கிம் மாநிலம் கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நான்காகப் பிரிக்கப்பட்டு முறையே கேங்டாக், கேஜிங், மங்கன், நம்சி ஆகிய நகரங்கள் தலைநகரங்களாக விளங்குகின்றன. கோவாவுக்கு அடுத்த குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலமாக 6,07000 மக்கள் தொகை கொண்டு சிக்கிம் விளங்குகிறது.

சிக்கிம் மாநிலத்தில் பார்க்க வேண்டிய இடங்கள்...

சிக்கிம் மாநிலத்தின் மிக உயர்ந்த சிலையான குரு பத்மசம்பவா அவர்களின் சிலை நம்ச்சியில் அமைந்துள்ளது. பல அழகிய பூக்களின் புகழிடமாக விளங்கும் ரோடென்ரான் சரணாலயத்தையும் கண்டு களியுங்கள் அதுமட்டுமல்லாது உலகின் 3-வது உயரமான சிகரமான கங்ஜங்கா சிகரம், ஏராளமான புத்த கோவில்கள், பச்சைப் புல்வெளிகள் நிறைந்த பள்ளத்தாக்குகள். வெந்நீர் ஊற்றுகள், அதிகம் அறியப்படாத சுற்றுலாத் தலங்கள், சாகச விளையாட்டுகளுக்கு ஏற்ற மலைக்குன்றுகள் என ஏராளமான இடங்கள் உண்டு.

உணவு மற்றும் திருவிழாக்கள்..

சிக்கிம் மாநிலத்தின் முக்கிய அம்சமாக மக்களின் உணவுப்பழக்கமும், திருவிழாக்களும் கருதப்படுகின்றன. முக்கியமான உணவு அரிசிச் சோறு என்றாலும், மோமோ, செளமெய்ன், வான்டோன், ஃபக்து, க்யா துக், துக்பா என்ற நூடுல்ஸ் சூப், பக்‌ஷபா, நிங்க்ரோ ஆகிய உணவுகளும் சிக்கிம் மக்களின் முக்கிய உணவுகளாகும். மேலும் மது சார்ந்த பானங்களையும் சிக்கிம் மக்கள் விரும்பி அருந்துகிறார்கள்.

மாகெ, சங்கராந்தி, பீம்சென் பூஜா, த்ருப்கா தேஷி, லொசார், பும்ச்சு, சகா தவா, லூசாங் ஆகிய பண்டிகைகள் சிக்கிமின் பாரம்பரிய விழாக்களாகும். மேலும் சிக்கிமில் வாழும் நேபாள இந்து மக்கள் அனைத்து இந்துப் பண்டிகைகளையும் கொண்டாடுகிறார்கள்.

சுற்றுலாப் பயணிகளுக்கு இவ்வளவு பொழுதுபோக்கு அம்சங்களை அள்ளிவழங்கும் சிக்கிம் மாநிலம், இந்தியாவின் மிக முக்கியமான சுற்றுலாத் தலமாக வளர்ந்து வருவதில் வியப்பொன்றும் இல்லை.

கண்டிப்பாக இந்த ஆசீர்வர்வதிக்கப்பட்ட மாநிலத்திற்கு வருகை தந்து உங்கள் விடுமுறைக் காலத்தை ஈடு இணையில்லாத உற்சாகத்தோடு அட்டகாசமாகக் கழியுங்கள்!!!  

Please Wait while comments are loading...