முகப்பு » சேரும் இடங்கள் » சர்குஜா » ஈர்க்கும் இடங்கள்
 • 01தீபாதிஹ்

  சட்டிஸ்கர் பிரதேசமானது புராதன காலத்தில் ‘தக்ஷிண் கோஷால் (கோசலம்)’ என்று அழைக்கப்பட்டு ராமாயணம் மஹாபாரதம் போன்ற இந்திய இதிகாசங்களிலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  வெவ்வேறு கால கட்டங்களில் பல்வேறு ஹிந்து வம்ச மன்னர்கள் இப்பகுதியை ஆண்டிருக்கின்றனர். எனவே அவர்கள் தங்களது ஆட்சிக்காலங்களில் எழுப்பிவிட்டுச்சென்ற பல்வேறு கோயில்களை இப்பிரதெசத்தில் பார்க்கலாம்.

  அவற்றில் சில முக்கியமான கோயில்களை இந்த சர்குஜா மாவட்டம் தன்னுள் கொண்டிருக்கிறது. மாவட்டத்தலைநகரான அம்பிகாபூரிலிருந்து 70 கி.மீ தூரத்த்தில் இந்த தீபாதிஹ் எனும் கோயில் ஸ்தலம் அமைந்திருக்கிறது. சம்ரி தாலுக்காவில் உள்ள இந்த ஸ்தலத்துக்கு சாதாரண மண் சாலையின் வழியாக செல்ல வேண்டியுள்ளது.

  இந்த ஸ்தலத்தில் ஷங்கர் கோயில் எனும் பிரதானக்கோயிலோடு இன்னும் நான்கு இதர தெய்வங்களுக்கான கோயில்களும் இடம்பெற்றிருக்கின்றன. விஷ்ணு பஹவான், கார்த்திகேயா, கணேஷா மற்றும் மஹா துர்க்கா ஆகியோருக்கான கோயில்கள் ஷங்கர் கோயிலை சுற்றி அமைந்துள்ளன.

  இந்த வளாகத்தை சுற்றி காணப்படும் கோயில் இடிபாடுகள் மற்றும் குள அமைப்புகள் போன்றவை இங்கு திராவிட மன்னர்களின் ஆட்சி நிகழ்ந்திருப்பதை குறிக்கும் விதத்தில் காணப்படுகின்றன.

  கலையம்சத்தோடு பொறிக்கப்பட்டிருக்கும் மஹிசுராமர்த்தினி சிற்பக்குடைவு ஒன்றை இந்த இடிபாடுகளில் காணமுடிகிறது. சுவர் போன்ற அமைப்புகளில் வடிக்கப்பட்டிருக்கும் பல்வேறு நுணுக்கமான சிற்ப வடிப்புகளை இந்த ஸ்தலத்தில் பார்த்து ரசிக்கலாம்.

  கடவுள்களின் உருவங்கள் மற்றும் சின்னங்கள் பொறிக்கப்பட்ட அற்புதமான தூண் வடிவங்களும் காலச்சான்றுகள் போன்று இங்கு வீற்றிருக்கின்றன.

  கோயில் வளாகத்திற்கு கிழக்கே ஒரு நந்தி சிலை ஒன்று அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. பும்ரா பாணி கலையம்சங்கள் காணப்படும் சிற்பக்கல் அமைப்புகளும் இங்கு கிடைத்திருக்கின்றன.

  + மேலும் படிக்க
 • 02தேவ்கர்

  தேவ்கர்

  தேவ்கர் எனும் இந்த முக்கியமான ஆன்மீக யாத்திரை ஸ்தலம் அம்பிகாபூரிலிருந்து 51 கி.மீ தூரத்திலும், சூரஜ்பூரிலிருந்து 93 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது. ரிஹாந்த் ஆற்றின் கரையில் உள்ள இந்த ஆன்மிகஸ்தலத்தில் பாபா போலேநாத் என்று அழைக்கப்படும் சிவபெருமானுக்கான கோயில் உள்ளது.

  இது இந்தியாவில் உள்ள ஜோதிர்லிங்க கோயில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிவராத்திரி திருநாள் இங்கு பிரம்மாண்டமான திருவிழாவாக கோலாகலத்துடன் கொண்டாடப்படுகிறது.

  முக்கியமான மங்கல நாளாக கருதப்படும் இந்நாளில் ஏராளமான பக்தர்கள் சிவபெருமான வழிபடுவதற்கு பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வருகை தருகின்றனர்.

  மத்தியப்பிரதேஷ், பீஹார், உத்தரப்பிரதேஷ், ஜார்கண்ட், ஒரிஸா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் ரிஹாந்த ஆற்றின் கரையில் உள்ள காயத்ரி மந்திர் எனும் கோயிலிலிருந்து தங்கள் பயணத்தை துவக்குகின்றனர்.

  அங்கிருந்து கொண்டு வரும் புனித நீரை போலேநாத் கோயிலில் உள்ள லிங்கத்து அபஷேகம் செய்து வழிபடுகின்றனர். சிவராத்திரிக்கு முதல் நாளில் இருந்தே மந்திர கோஷங்கள் மற்றும் பஜனைகள் போன்றவையும் இந்த கோயிலில் தொடர்ந்து நடத்தப்படுகின்றன.

  ஒரு ஆன்மீகஸ்தலமாக மட்டுமல்லாமல் ரம்மியமான இயற்கை காட்சிகள் நிரம்பிய ஒரு  அற்புத பூமியாகவும் இந்த தேவ்கர் வீற்றிருக்கிறது. அமைதியாக ஓடும் ரிஹாந்த் ஆற்றுக்கு அருகில் அமைந்திருப்பதால் இப்பகுதி தனித்தன்மையான அழகோடு காட்சியளிக்கிறது.

  தேவ்ரியா என்ற பெயரிலும் அழைக்கப்படும் தேவ்கர் ஸ்தலத்தில் பல்வேறு சிறு கோயில்களும் அதிக எண்ணிக்கையில் அமைந்திருக்கின்றன. இங்கு காணப்படும் ஒவ்வொரு இடிபாடுகளிலும் ஒரு கோயில் இடம்பெற்றுள்ளதை பார்க்கமுடிகிறது.

  மேலும், கௌரி ஷங்கர் கோயில் ஸ்தலத்தில் சில சரித்திரச்சான்றுகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு குறிப்பிட்ட காலத்தை சேர்ந்த ராஜ வம்சம் பற்றிய குறிப்புகள் அவற்றில் காணப்படுகின்றன.  

  + மேலும் படிக்க
 • 03மஹாமயா மந்திர்

  மஹாமயா மந்திர்

  சர்குஜா மாவட்டத்திலுள்ள ஒரு முக்கியமான யாத்திரை ஸ்தலமாக இந்த மஹாமயா மந்திர் அமைந்திருக்கிறது. இது சூரஜ்பூரிலிருந்து 4 கி.மீ தூரத்திலுள்ள தேவிபூர் எனும் இடத்தில் உள்ளது.

  நாட்டில் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் இந்த கோயிலுக்கு விஜயம் செய்து வழிபடுகின்றனர். சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள மிக முக்கியமான ஒரு கோயிலாக இந்த மஹாமயா மந்திர் புகழ் பெற்றுள்ளது.

  நவராத்திரி திருநாள் இப்பகுதியின் உள்ளூர் மக்களால் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. மஹாமயா தேவியை முக்கியமான தெய்வமாக வழிபடும் இப்பகுதி மக்கள் இந்த திருவிழாவை அபரிமிதமான பக்தி மற்றும் ஈடுபாட்டுடன் நடத்துகின்றனர்.

  அண்டை மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தருகின்றனர். சூரஜ்பூர் பக்த மண்டலி எனும் அமைப்பு தேவிபூர் வரையில் பக்தர்களுக்கான இலவச பேருந்து சேவையையும் வழங்குகிறது.

  அது மட்டுமல்லாமல் உள்ளூர் நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஆகிய இரு தரப்பினரும் இந்த திருவிழா கோலாகலமாக நடப்பதற்கு உதவுகின்றனர்.

  சூரஜ்பூரில் உள்ள ஷியாம் பாபா கோயில் எனும் மற்றொரு வழிபாட்டுத்தலத்தில் ஷியாமாவின் பிறந்த நாள் அன்று கோலாகலமான திருவிழா ஒன்று நடத்தப்படுகிறது. சர்குஜா மாவட்டத்தை சேர்ந்த மக்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொள்கின்றனர்.

  + மேலும் படிக்க
 • 04சேமர்சோத் காட்டுயிர் சரணாலயம்

  சேமர்சோத் காட்டுயிர் சரணாலயம்

  சேமர்சோத் காட்டுயிர் சரணாலயம் சர்குஜா மாவட்டத்தின் தலைநகரான அம்பிகாபூரிலிருந்து 50 கி.மீ தூரத்தில் அமைந்திருக்கிறது. அம்பிகாபூர்-தல்டோன்குஞ்ச் சாலையில் அமைந்திருக்கும் இது 430.36 ச.கி.மீ பரப்பளவில் பரந்துள்ளது.

  இந்த சரணாலயத்திற்கு அருகில் ஜய்நகர் ரயில் நிலையம் மற்றும் 31 கி.மீ தூரத்தில் வாரணாசி விமான நிலையம் போன்றவை அமைந்திருக்கின்றன. ராம்கர் மலைகளை ஒட்டியதாக இந்த சரணாலயம் அமைந்திருக்கிறது.

  பீஹார் மாநிலத்துடனும் இது தனது எல்லையை பகிர்ந்துகொள்கிறது. கடக ரேகை எனப்படும் வட அட்சக்கோடு இந்த சரணாலயத்தின் வழியே செல்வது குறிப்பிடத்தக்கது.

  சால் மரங்கள் அதிகமாக வளர்ந்துள்ள கலவையான இலையுதிர் காடுகளை இந்த சரணாலயம் நிரம்பப்பெற்றுள்ளது. ரிவரைன் எனப்படும் ஆற்றுச்சதுப்புநில காடுகளும் இங்கு காணப்படுகின்றன.

  நில்கை மான், சிதல் மான், சம்பார் மான், புள்ளி மான், காட்டுப்பன்றி, நரி, காட்டுப்பூனை போன்ற விலங்கினங்கள் இந்த சரணாலயத்தில் வசிக்கின்றன.

  ஜனவரி முதல் மே வரையிலான பருவம் இந்த சரணாலயத்துக்கு விஜயம் செய்ய ஏற்றதாக உள்ளது. இந்த சரணாலயத்திற்கு அருகில் சேமர்சோத் எனும் சிறு நகரம் உள்ளது. இருப்பினும் பயணிகள் தங்குவதற்கான வசதிகள் 50 கி.மீ தூரத்தில் உள்ள அம்பிகாபூரில் கிடைக்கின்றன.     

  + மேலும் படிக்க
 • 05அம்பிகாபூர்

  தற்போது சர்குஜா மாவட்டத்தின் தலைநகரமாக விளங்கும் அம்பிகாபூர் நகரம் ஆங்கிலேயர் ஆட்சியின்போது குஜராத்தை சேர்ந்த சமஸ்தானத்தின் அங்கமாக இருந்திருக்கிறது.

  அம்பிகை அல்லது மகாமயாதேவி என்று அழைக்கப்படும் தெய்வம் மற்றும் கோயிலின் பெயரே இந்நகரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அம்பிகா கோயில் ஒரு மலைக்கு அருகே மிக அழகாக நிர்மாணிக்கப்பட்டு காட்சியளிக்கிறது.

  அம்பிகாபூர் நகரத்திலிருந்து சுமார் 45கி.மீ தூரத்தில் மைன்பட் மலைவாசஸ்தலமும் உள்ளது. இந்த மலைவாசஸ்தலம் ‘ஷிம்லா ஆஃப் சட்டிஸ்கர்’ எனும் சிறப்புப்பெயரால் அறியப்படுவது குறிப்பிடத்தக்கது.

  மைன்பட் மலைவாசஸ்தலத்தில் ‘டைகர் பாயிண்ட்’ எனும் நீர்வீழ்ச்சி ஒன்றும் அமைந்திருக்கிறது. இது தவிர, இங்குள்ள புத்தா கோயில் ஒன்று இப்பகுதியில் வசிக்கும் திபெத்திய மக்களுக்கான ஆன்மீகத்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.

  தரைவிரிப்பு மற்றும் உல்லன் உடைத்தயாரிப்பு போன்ற குடிசைத்தொழில்களில் இந்த திபெத்திய மக்கள் ஈடுபட்டுள்ளனர். தலாய் லாமாவை பின்பற்றும் இந்த திபெத்திய சமூகம் மைன்பட் பகுதியில் தங்கள் வாழ்க்கை முறை மூலம் அமைதியான சூழலை ஏற்படுத்திக்கொண்டு வாழ்ந்துவருகின்றனர். தேவ்கர் எனும் மற்றொரு யாத்திரை ஸ்தலமும் அம்பிகாபூர் தாலுக்காவில் அமைந்திருக்கிறது.

  அம்பிகாபூரை ஒட்டியே 49 கி.மீ தூரத்தில் ஷிவ்பூர் ஷிவ் கோயில் அமைந்திருக்கிறது. இது மஹா சிவராத்திரி மற்றும் பசந்த் பஞ்சமி நாட்களில் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி காணப்படுகிறது.

  மற்றும் ஒரு ஆன்மீக ஸ்தலமான ‘கைலாஷ் குகைகள்’ அம்பிகாபூரிலிருந்து 60 கி.மீ தூரத்தில் உள்ளது. ராமேஷ்வர் கஹிரா குருஜி எனும் யோகி இந்த குகைகளை உருவாக்கியதாக சொல்லப்படுகிறது.

  சிவன் – பார்வதிக்கான கோயிலும் மற்றும் ஏனைய தெய்வங்களுக்கான சன்னதிகளும் இந்த ஸ்தலத்தில் இடம்பெற்றுள்ளன. யாக மண்டபம், சம்ஸ்கிருத பள்ளி, கஹிரா குரு ஆஷ்ரம் போன்ற பிரிவுகள் இந்த கைலாஷ் குகைக்கோயில் வளாகத்தில் இடம்பெற்றிருக்கின்றன.

  ‘ராம்கர்’ எனும் மற்றொரு முக்கியமான ஆன்மீகஸ்தலம் அம்பிகாபூர் பகுதியில் உள்ள ஒரு மலையுச்சியில் அமைந்திருக்கிறது. அலாஹாபாத் (காசி)  தொடங்கி ராமேஷ்வரம் வரை செல்லும் பாதைக்கு கிழக்கே இந்த கோயில் அமைந்திருப்பதாக சொல்லப்படுகிறது.

  அம்பிகாபூர் பகுதி பாக்சைட் கனிமத்தாது மற்றும் நெல் விளைச்சலுக்கும் பிரசித்தமாக விளங்குகிறது. இதர காட்டு விளைச்சல் பொருட்களும் இப்பகுதியில் கிடைக்கின்றன.

  ரயில் மற்றும் சாலை மார்க்கமாக இது மாநிலத்தின் எல்லா பகுதிகளுடனும் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. பிலாஸ்பூரிலிருந்து அம்பிகாபூர் வருவதற்கு அடிக்கடி பேருந்துகள் கிடைக்கின்றன.

  அம்பிகாபூரில் விமான நிலையம் இல்லை. இருப்பினும் இங்கிருந்து 12 கி.மீ தூரத்தில் தரிமா எனும் இடத்தில் விமான ஓடுதளம் ஒன்று உள்ளது.

  + மேலும் படிக்க
 • 06குடர்கர்

  குடர்கர்

  சர்குஜா மாவட்டத்தின்  மற்றொரு  முக்கியமான ஆன்மிக யாத்திரை ஸ்தலமான இந்த ‘குடர்கர்’ அம்பிகாபூரிலிருந்து 82 கி.மீ தூரத்தில் உள்ளது. ஏப்ரல் மாததில் சைத்ரா நவரத்னா எனும் திருவிழா இங்கு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

  இந்த திருவிழாக்காலத்தில் குடர்கர் ஸ்தலத்திற்கு விஜயம் செய்ய முடிந்தால் நல்லது. பக்தர்களின் வேண்டுதல்களை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் கடவுளாக இங்குள்ள குடஹர்ஹி எனும் தெய்வம் பிரசித்தமடைந்துள்ளது.

  அப்படி வேண்டுதல்கள் நிறைவேறியபின் பக்தர்கள் இக்கோயிலில் ஆடுகளை காணிக்கையாக பலிகொடுக்கும் சடங்கும் வழக்கத்தில் உள்ளது.

  மா பாஹேஷ்வரி என்றும் அழைக்கப்படும் இந்த கோயில் ஸ்தலத்தில் உள்ள 6 அங்குல விட்டம் கொண்ட துளை ஒன்றில் 1000 ஆடுகளை பலிகொடுத்த ரத்தத்தை ஊற்றிய பின்னும் நிரம்பி வழியாமல் காணப்படுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

  ஒரு மலையின் உச்சியில் வீற்றிருக்கும் இந்த கோயிலை தரிசிக்க நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் வருகை தருகின்றனர். 17ம் நூற்றாண்டில் கோரியா பகுதியை ஆண்டு வந்த பலாந்த் வம்ச மன்னர்கள் இந்த கோயிலை கட்டியதாக சொல்லப்படுகிறது.

  + மேலும் படிக்க
 • 07தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம்

  தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம்

  சர்குஜா மாவட்டத்தில் உத்தரப்பிரதேச மாநில எல்லையை ஒட்டியவாறு இந்த தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம் அமைந்திருக்கிறது. தமோர் மலை மற்றும் பிங்கல நல்லா என்று அழைக்கப்படும் மலைகளின் பெயர்களால் இந்த சரணாலயம் அழைக்கப்படுகிறது.

  இந்த சரணாலயம் வழியே பாயும் மோரன் ஆறு பின்னர் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோவிந்த் பல்லப் பந்த் சாஹர் நீர்த்தேக்கத்தில் சேர்கிறது.

  அம்பிகாபூரிலிருந்து 100 கி.மீ தூரத்திலும் சூரஜ்பூருக்கு வடக்கே 35 கி.மீ தூரத்திலும் இந்த தமோர் பிங்க்லா காட்டுயிர் சரணாலயம் அமைந்திருக்கிறது. இங்கு பலவகையான மரங்கள் மற்றும் காட்டுயிர் அம்சங்கள் நிரம்பியுள்ளன.

  இந்த சரணாலயத்திற்கு அருகில் பிம்ப்ரி ரயில் நிலையம் உள்ளது. இருப்பினும் தகுந்த தகவல் தொடர்பு வசதிகள் இல்லாத ஒரு பிரதேசமாக இந்த வனப்பகுதி அமைந்திருக்கிறது. குய் மற்றும் பிஹார்பூர் மலைத்தொடர்கள் இந்த தெற்கு சர்குஜா வனப்பகுதி வழியே நீண்டுள்ளன.

  கலவையான இலையுதிர்காடுகளை இந்த சரணாலயம் உள்ளடக்கியிருக்கிறது. சால் மற்றும் மூங்கில் மரங்கள் இந்த காட்டுப்பகுதி முழுதும் வளர்ந்து காணப்படுகின்றன.

  புலிகள், சிறுத்தைகள், கரடி, சம்பார் மான், நீல எருது, சிதல் மான், காட்டெருமை போன்ற விலங்குகள் இங்கு வசிக்கின்றன. பல்வேறு பறவையினங்கள் மற்றும் ஊர்வன உயிரிகளும் இந்த சரணாலயத்தில் வாழ்கின்றன.

  நவம்பர் முதல் ஜூன் வரையிலான பருவம் இந்த சரணாலயத்தை சுற்றிப்பார்ப்பதற்கு உகந்ததாக உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி விமான நிலையம் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் உள்ள வாரணாசி விமான நிலையம் போன்றவை அருகிலுள்ள விமான நிலையங்களாகும்.

  சூரஜ்பூர் ரயில் நிலையமும் அருகில் உள்ளது. சுற்றுலாப்பயணிகள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் ராம்கோலா அல்லது அம்பிகாபூரில் தங்கிக்கொண்டு இந்த சரணாலயத்திற்கு வருகை தரலாம்.  

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
21 Feb,Wed
Return On
22 Feb,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
21 Feb,Wed
Check Out
22 Feb,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
21 Feb,Wed
Return On
22 Feb,Thu