இந்தியா முழுக்க முழுக்க வரலாற்று பின்னணி கொண்ட ஒரு அற்புத நாடாகும். நாட்டின் கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் அடையாளங்கள், பிரம்மாண்ட நினைவுச் சின்னங்கள், பழங்கால கட்டிடங்கள் வரை பல வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் இந்தியாவில் கம்பீரமான தோற்றத்துடன் உள்ளன. இந்தியாவில் சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மிக முக்கியமான வரலாற்று சிறப்பு மிக்க 10 சுற்றுலா தலங்களை தெரிந்து கொள்ளலாம்.

செங்கோட்டை
டில்லியில் உள்ள செங்கோட்டை சிவப்பு மணற் பாறைகளால் ஆன வரலாற்று சிறப்பு மிக்க கோட்டையாகும். முகலாய சாம்ராஜ்யத்தின் சின்னமாக விளங்கும் இந்த அழகிய கோட்டை, முகலாய கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சுதந்திர தினத்தன்று, செங்கோட்டையின் முதன்மை வாயிலில் நாட்டின் பிரதமர் இந்திய தேசியக் கொடியான மூவர்ணக் கொடியை ஏற்றி, நாட்டு மக்களுக்கு சுதந்திர தின உரையை ஆற்றுவார்.
தாஜ்மஹால்
யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹால், ஆக்ரா நகரின் யமுனை நதிக்கரையில் முகலாய பேரரசர் ஷாஜஹானால் அவரது மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவாக கட்டப்பட்ட தூய வெள்ளை நிற பளிங்குக் கல்லால் ஆன ஒரு கல்லறை. இது ஏழு உலக அதிசயங்களின் ஒன்றாகவும் திகழ்கிறது.
குதுப் மினார்
இந்தியாவின் முதல் இஸ்லாமிய அரசரான குத்புத்தீன் ஐபக் ஆணையின் படி, டில்லியில் 73 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ள குதுப் மினார், உலகிலேயே செங்கல்லால் கட்டப்பட்ட உயர்ந்த பள்ளிவாசல் ஸ்தூபி ஆகும். இது இந்தோ-இஸ்லாமிய ஆப்கான் கட்டிடக்கலைக்கு ஒரு சான்றாகும். மேலும் இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாகவும் விளங்குகிறது.
ஹம்பி
கர்நாடகா மாநிலத்தில் உள்ள ஹம்பி ஒரு பழங்கால கிராமமாகும். இங்கு விஜயநகரப் பேரரசின் மகத்துவத்தைப் பிரதிபலிக்கும் கற்கோயில்கள், கல்லாலான தேர், கல் தூண் மண்டபங்கள், அரண்மனை மற்றும் கோட்டைகள் என இடிபாடுகளுடன் காணப்படுகிறது.இது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலமாகவும் விளங்குகிறது.
ஃபதேபுரி சிக்ரி
ஆக்ராவில் உள்ள ஃபதேபுரி சிக்ரி, முகலாய பேரரசர் அக்பரால் உருவாக்கப்பட்டு அவரின் தலைநகரமாகவும் செயல்பட்டுள்ளது. பின்னர் கைவிடப்பட்ட இந்த நகரத்தில் உள்ள பல அரண்மனைகளும், மண்டபங்களும், புலந்த் தர்வாசா மற்றும் ஜமா மசூதி உள்ளிட்டவை அற்புதமான கட்டிடக்கலைக்கு சான்றாக உள்ளன.இது உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜுராஹோ கோயில்கள்
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள கஜுராஹோ கோயில்கள், இந்திய சிற்பக்கலை மற்றும் கட்டிடக்கலைக்கு பெயர் பெற்றதாகும். இந்தக் கோயில்களில் உள்ள சிற்பங்கள் காதல், ஆன்மீகம், சமூகவியல் மற்றும் அன்றாட வாழ்க்கையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, காமசூத்திர அடிப்படையிலான சிலைகள் உலகளவில் பிரசித்திப்பெற்றது. இது உலக பாரம்பரியக் களமாக யுனெஸ்கோவினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்லோரா குகைகள்
மகாராஷ்டிரா மாநிலத்தின் அவுரங்காபாத் அருகே அமைந்துள்ள எல்லோரா குகைகள், இந்தியாவின் முக்கியமான பாரம்பரியச் சின்னங்களுள் ஒன்று. இங்குள்ள 34 குகைளில் 17 ஹிந்து குகைகள், 12 புத்த குகைகள் மற்றும் 5 ஜெயின் குகைகளில் மத சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும், கட்டுமான நுணுக்கத்திற்கும், கலை ஆழத்திற்கும் எடுத்துக்காட்டாக முழுமையாக ஒரே பாறையில் செதுக்கி உருவாக்கப்பட்ட கைலாசநாதர் கோயில், உலகின் மிகப்பெரிய சிற்பக்கலையாக கருதப்படுகிறது. இந்த குகைகள் மற்றும் கற்கோயில் யுனெஸ்கோவால் உலகப் பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
மைசூரு அரண்மனை
கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள மைசூரு அரண்மனை, இந்தியாவின் மிக அழகிய மற்றும் வரலாற்று சிறப்புமிக்க அரண்மனைகளுள் ஒன்றாகும். இந்தோ-சரசெனிக் பாணியில் கட்டப்பட்டுள்ள இந்த அரண்மனையில் பிரம்மாண்டமான கோபுரங்கள்,அழகான தோட்டங்கள், வண்ணமயமான கண்ணாடி மற்றும் மரச்சிற்ப வேலைப்பாடுகள் என மிக அழகாக காட்சியளிக்கிறது. இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.
கேட் வே ஆஃப் இந்தியா
மும்பையில் அமைந்துள்ள கேட் வே ஆஃப் இந்தியா, 1911 ஆம் ஆண்டு ஐந்தாம் ஜார்ஜ் மற்றும் ராணி மேரி இந்திய வருகையை நினைவு கூறும் வகையில் கட்டப்பட்டது. இந்தோ-சரசெனிக் கட்டிட பாணியில் அரபிக்கடல் கரையில் 26 மீட்டர் உயரத்தில் காட்சியளிக்கும் இந்த நுழைவாயில் இந்திய விடுதலைக்கு பின்னர், பிரிட்டிஷ் ராணுவத்தினர் இந்தியாவை விட்டு வெளியேறிய கடைசி இடமாக திகழ்வதன் மூலம் முக்கிய வரலாற்றுச் சின்னமாக மாறியுள்ளது.



Click it and Unblock the Notifications



