Search
  • Follow NativePlanet
Share
» »சென்னையிலிருந்து ஒரு நாள் ட்ரிப் – அற்புதமான கோவில்கள், அட்டகாசமான ஷாப்பிங், சுவையான உணவு வகைகள்!

சென்னையிலிருந்து ஒரு நாள் ட்ரிப் – அற்புதமான கோவில்கள், அட்டகாசமான ஷாப்பிங், சுவையான உணவு வகைகள்!

சென்னையில் வசிப்பவரா நீங்கள்? அன்றாட பரபரப்பான வாழ்வில் இருந்து சற்று ஓய்வு எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்று தோன்றுகிறதா? கவலை வேண்டாம், இந்தப் பதிவு உங்களுக்கு மிக உதவியாக இருக்கும். சென்னையில் இருந்து காலையில் கிளம்பி அழகாக சுற்றி பார்த்து விட்டு இரவு வீட்டுக்கு வந்து விடக்கூடிய ஒரு அற்புதமான, வரலாற்று நிறைந்த இடத்தைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்!

ஆம்! நீங்களே யூகித்து விட்டீர்கள் அல்லவா? காஞ்சிபுரத்தைப் பற்றி தான் பார்க்க போகிறோம். பல நூற்றாண்டு வரலாறு நிறைந்த இந்த நகரம் நமக்கு அருகில் இருப்பது நம் அதிர்ஷ்டம் தான். பல்லவ மற்றும் சோழர் காலத்து கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் பல நூறு கோவில்கள், காஞ்சிக்கே உரித்தான பட்டாடைகள், விதவிதமான சுவையான உணவு வகைகள், வரலாற்று நினைவுச்சின்னங்கள் என காஞ்சியின் பெருமையை அடுக்கிக்கொண்டே போகலாம்.

சென்னையில் இருந்து ஒரு ஒரு நாள் ட்ரிப் ஆக காஞ்சிபுரத்திற்கு சென்றுவிட்டு வரலாம் வாருங்கள்! எப்படி போவது, என்ன செய்வது? என்னவெல்லாம் பார்ப்பது என்பதை பற்றி இங்கே காண்போம்!

ஆயிரம் கோவில்களின் பொன் நகரமாம் காஞ்சிபுரம்

ஆயிரம் கோவில்களின் பொன் நகரமாம் காஞ்சிபுரம்

"ஆயிரம் கோவில்களின் பொன் நகரம்" என்றழைக்கப்படும் காஞ்சியில் உள்ள அற்புதங்கள் யாவையும் ஒரே நாளில் பார்த்துவிட முடியாது. அது கனவிலும் கடினம் ஆயிற்றே! சென்னையில் இருந்து காலையில் கிளம்பி சில மனதைக் கொள்ளையடிக்கும் இடங்களை பார்த்துவிட்டு, சுவையான உணவு வகைகளை உண்டு மகிழ்ந்து, மனதிற்கு பிடித்த பட்டு மற்று பிற ஆடைகளை ஷாப்பிங் செய்து விட்டு நீங்கள் வீடு திரும்பலாம்.

பல்லவர் காலத்து தலைநகரமான காஞ்சியில் காஞ்சி காமாட்சி கோவில், ஏகாம்பரேஸ்வரர் கோவில், தேவராஜ சுவாமி கோவில், வரதராஜர் சுவாமி, உலகளந்த பெருமாள் சன்னதி, கச்சபேஸ்வரர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில், காஞ்சி காமகோடி பீடம் மடம், தென்னாங்கூர் பாண்டுரங்க கோவில், பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவில் மற்றும் பல ஆகியவை காஞ்சியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

முதலில் தேவராஜ சுவாமி திருக்கோவில்

முதலில் தேவராஜ சுவாமி திருக்கோவில்

காலை 10 மணிக்கு நீங்கள் காலை உணவை முடித்துக்கொண்டு வீட்டில் இருந்து கிளம்பினால் நீங்கள் 11.30 மணி அளவில் காஞ்சியை அடைந்து விடுவீர்கள். நீங்கள் பேருந்தில் சென்றால் இன்னும் சௌரியம், ஏனென்றால் அத்தி வரதர் குடி கொண்டிருக்கும் 108 திவ்ய தேசங்களில் ஒன்றான தேவராஜ சுவாமி கோவில் சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்து இருப்பதால் நீங்கள் வழியிலேயே இறங்கிக் கொள்ளலாம்.

பேருந்து உங்கள் கோவில் வாசலிலியே இறக்கி விடும், ஆகையால் அதிக சிரமின்றி நீங்கள் நடந்தே கோவிலுக்கு சென்று விடலாம். முதலில் அத்திவரதர் வீற்றிருக்கும் அனந்த சரசை தரிசித்துவிட்டு கோவிலுக்கு விஜயம் செய்யுங்கள். பின்னர், நரசிம்மர், தாயார் சன்னதி, மேலும் பல சன்னதிகளை தரிசித்துவிட்டு மூலவரான தேவராஜ சுவாமியை தரிசியுங்கள்.

திராவிட கட்டிடக்கலையைப் பிரதிபலிக்கும் தேவராஜசுவாமி கோவில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டது. கோயிலின் உள்ளே காணக்கூடிய அலங்கார வேலைப்பாடுகளும், நுணுக்கமான சிற்பக்கலைகளும் நம்மை வியப்பில் ஆழ்த்தும். இங்கே வண்ணமயமான தூண்கள், விஷ்ணுவுக்கும் லட்சுமி தேவிக்கும் இடையே நடந்த திருமணத்தை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட திருமண மண்டபம், ஒரே கல்லில் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய சங்கிலி ஆகியவற்றை பார்க்கலாம்.

மதிய உணவு மற்றும் ஷாப்பிங்

மதிய உணவு மற்றும் ஷாப்பிங்

நீங்கள் 23 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக அமைந்துள்ள தேவராஜ சுவாமி கோவிலை தரிசித்துவிட்டு வரவே நிச்சயம் மணி 1 ஐ கடந்து விடும். 12.30 மணி முதல் 4 மணி வரை அனைத்துக் கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் என்பது நாம் அறிந்த விஷயமே. ஆகையால் இந்த ஒரு கோவிலை மட்டும் பார்த்துவிட்டு நீங்கள் மதிய உணவு அருந்த செல்வதே சிறந்த யோசனை. இந்தக் கோவிலுக்கு பக்கத்திலும், நகருக்கு உள்ளேயும் பல உயர்தர மலிவு விலை சைவ உணவகங்கள் உள்ளன.

ஆரிய பவன், சரவண விலாஸ், அன்னப்பூர்ணா பவன், ஹோட்டல் சக்தி, ஆனந்த பவன், சரவண பவன் ஆகிய இடங்களில் ருசிகரமான சைவ உணவுகள் கிடைக்கின்றன. சிறிது ரெப்ஃரெஷ் செய்துவிட்டு மதிய உணவை அருந்திய பிறகு, கோவில் மூடப்பட்டு இருக்கும் இடைப்பட்ட நேரத்தில் நீங்கள் ஷாப்பிங்கிற்கு செல்லலாம்.

பச்சையப்பாஸ், முருகன், எஸ்.எம் சில்க்ஸ், பாபு ஷா, ஸ்ரீ சந்திரா, வெங்கடேஸ்வரா மற்றும் பல துணிக் கடைகள், (இல்லை கடல்கள் என்று தான் கூற வேண்டும்) காஞ்சி நகர் முழுக்க நிறைந்து இருக்கின்றன. ஆகையால் மலிவு விலையில் வீட்டிற்கு தேவையான பொருட்கள் முதல், வேட்டி, துண்டு, பட்டு புடவைகள் வரை நமக்கு தேவையானவற்றை வாங்கி மகிழுங்கள்.

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

நீங்கள் ஷாப்பிங் செய்து முடிப்பதற்கு எப்படியும் 4 மணி ஆகி விடும். அதற்குள் கோவில்களின் நடைகளும் திறக்கப்பட்டு விடும். ஷேர் ஆட்டோ அல்லது ஆட்டோ மூலம் நகரின் மையத்தில் இருக்கும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலை எளிதாக அணுகலாம். 1300 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை உடைய இக்கோவில் இரண்டாம் நரசிம்ம பல்லவனால் கட்டப்பட்டது என்று கூறப்படுகிறது.

விஜயநகர காலத்து ராஜ கோபுரம், 3000 வருட பழமையான ஸ்தல விருட்சமான மாமரம், பஞ்சபூத லிங்கங்களில் ஒருவரான மண்ணால் ஆன மூலவர் எம்பெருமான் சிவன், ஆயிராங்கால் மண்டபம், மண்டபத்தை ஒட்டி இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட லிங்கங்கள் ஆகியவற்றை நீங்கள் இங்கே தரிசிக்கலாம்.

காஞ்சி காமாட்சி கோவில்

காஞ்சி காமாட்சி கோவில்

தந்திர சூடாமணியின் படி 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும், ஆதி சங்கரரால் குறிப்பிட்டப்பட்ட மகா சக்தி பீடங்களில் ஒன்றாகவும் புகழ்பெற்ற இந்த காமாட்சி கோவிலுக்கு இந்தியா முழுவதிலுமிருந்தும், ஏன் வெளி நாட்டவரும் கூட வருகை தருகின்றனர்.

கோயிலின் உள்ளே பிரகாரங்களும், தெப்பக்குளமும், நூறுகால் மண்டபமும் அமைந்துள்ளன. 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்கோவிலின் தேவியான காமாட்சி கருவறையில் நான்கு கரங்களோடு பத்மாசன யோக நிலையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோரின் திரித்துவத்தால் சூழப்பட்டுள்ள கருவறையைச் சுற்றி பங்காரு காமாட்சி, ஆதிசங்கரர் மற்றும் மகா சரஸ்வதி ஆகியோரின் சிறிய ஆலயங்கள் உள்ளன. வெளிப்பிரகாரத்திலிருந்து தங்கம் வேய்ந்த கோபுர விமானத்தினையும் நாம் கண்டு களிக்கலாம்.

மேலும் காமாட்சி கோவிலில் காமாட்சி அம்மன் விளக்கு வாங்கி வீட்டில் வைத்து விளக்கேற்றுவதும், ஆதி சங்கரரால் பிரதிர்ஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரத்தின் மகா மேருவை வாங்கி வீட்டில் வைத்து பூஜிப்பதும் குடும்பத்திற்கு பல நன்மைகளை பயக்கின்றன.

காஞ்சிபுரத்திற்கு எப்படி செல்வது?

காஞ்சிபுரத்திற்கு எப்படி செல்வது?

சென்னையிலிருந்து 70 கிமீ தொலைவில் அமைந்துள்ள காஞ்சிபுரத்தை ரயில் வாயிலாகவும், பேருந்து வாயிலாகவும் எளிதில் அணுகலாம். சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து எண் 79 மற்றும் எண் 115 ஆகிய பேருந்துகள் வழக்கமான முறையில் இயக்கப்படுகின்றன. பேருந்து கட்டணம் ஒரு நபருக்கு 60 ரூபாய் ஆகும். மேலும் சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து திருமால்பூர் செல்லும் ரயிலும் தினமும் இயக்கப்படுகின்றன. ஒரு நபருக்கான ரயில் கட்டணம் 20 ரூபாய் ஆகும்.

காமாட்சியை தரிசித்துவிட்டு அந்த கோவிலுக்கு அருகில் நடந்து செல்லக்கூடிய தூரத்தில் இருக்கும் புகழ்பெற்ற காஞ்சி காமகோடி பீடம் மற்றும் உலகளந்த பெருமாளை தரிசித்துவிட்டு பேருந்திலோ அல்லது ரயிலிலோ நீங்கள் வீட்டுக்கு திரும்பலாம்.

ஒரு நாளில் இவ்வளவையும் செய்து விடலாம்! நீங்கள் சென்று பாருங்கள்!

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+