» »லக்ஷ்வதீப்பின் டாப் 6 அழகிய தீவுகள்!

லக்ஷ்வதீப்பின் டாப் 6 அழகிய தீவுகள்!

Written By: Staff

லக்ஷ்வதீப் என்று கண்டறியப்பட்டதோ அன்றிலிருந்து இன்றுவரை புத்தம் புதிதாகவே காட்சியளித்துக்கொண்டிருக்கிறது. எனவே நீங்கள் முதன் முதலாக லக்ஷ்வதீப் வரும்போது இவ்வளவு நாள் இந்த அற்புத தீவை பார்க்காமல் நாட்களை வீணாக்கி விட்டோமே என்று கண்டிப்பாக வருத்தப்படுவீர்கள்.

லக்ஷ்வதீப்பில் மொத்தம் 36 அழகிய தீவுகள் இருந்தாலும் ஒரு சில தீவுகளின் அழகு உலகின் சிறந்த கடற்கரை மற்றும் தீவுகளோடு ஒப்பிடக்கூடியவை.

இந்தியாவில் நீங்கள் இந்த இடத்தை மட்டும் தவறவிடக்கூடாது ஏன் தெரியுமா?

இந்த தீவுகளில் ஸ்கூபா டைவிங், ஸ்நார்க்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம் என்பதுடன் பவளப்பாறைகளை கண்டு ரசிக்கலாம், மீன் பிடித்து அதை நீங்களே சமைத்தும் சாப்பிடலாம். லக்ஷ்வதீப்பில் கிடைக்கும் கடல் உணவுகளை போன்று நீங்கள் வேறெங்கும் ருசித்திருக்க வாய்ப்பில்லை.

லக்ஷ்வதீப்பின் ஒவ்வொரு தீவும் ஒவ்வொரு வகையில் உங்களை கிறங்கடிக்க போகிறது. இந்த தீவுகள் பெரும்பாலும் அளவில் சிறியதாக இருப்பதால் ஒரு சைக்கிளோ அல்லது ஒரு மோட்டார் பைக்கோ வாடகைக்கு எடுத்துக்கொண்டு தீவுகளை சுற்றிப்பார்த்துவிட முடியும். 

பங்காரம் தீவு

பங்காரம் தீவு

லக்ஷ்வதீப்பில் வேறெங்கும் இவ்வளவு ஹனிமூன் ஜோடிகளை பார்க்க முடியாது என்பதுபோல் பங்காரம் தீவு ஹனிமூன் ஜோடிகளால் எப்போதும் ஜேஜேவென்று இருக்கும். இந்த தீவில் கடற்கரைக்கு அருகிலேயே 60 காட்டேஜ்கள் அமைந்திருப்பதோடு, அவற்றுடன் பிரத்யேக உணவு விடுதியும் இணைக்கப்பட்டிருப்பதால் வேண்டிய உள்ளூர் உணவு வகைகளை வரவழைத்து ருசி பார்க்கவும் வசதியாக இருக்கிறது. இங்கு ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்நார்க்கெலிங் போன்ற கடல் மூழ்கு நீச்சலில் ஈடுபட்டு நீருக்கடியில் உள்ள பலவிதமான உயிரினங்கள் மற்றும் பவளப்பாறை அமைப்புகளை பார்த்து ரசிக்கலாம். மேலும் லக்ஷ்வதீப்பில் மதுவுக்கு அனுமதி வழங்கப்படும் ஒரே தீவு இந்த பங்காரம் தீவுதான்!

அகத்தி தீவு

அகத்தி தீவு

லக்ஷ்வதீப்பின் நுழைவாயிலாக அறியப்படும் அகத்தி தீவில்தான் சொகுசுப்படகுகளுக்கான துறைமுகமும், உள்நாட்டு விமான நிலையமும் அமைந்திருப்பதால் நீங்கள் இந்த தீவில் கால்பதிக்காமல் இருந்துவிட முடியாது. இந்த தீவு 4 ச.கி.மீ பரப்பளைவை மட்டுமே கொண்டிருப்பதால் ஒரு வாடகை சைக்கிளை எடுத்துக்கொண்டு தீவு முழுவதையும் சுற்றிப்பார்த்து விடலாம். இங்கு கண்ணாடி அடித்தளத்தை கொண்ட படகுகளில் பயணம் செய்து விதவிதமான பவளப்பாறை அமைப்புகளை கண்டு ரசிக்கலாம். மேலும் நீங்கள் இங்கு மீன் பிடித்து பொழுதை கழிக்கலாம் என்பதுடன் பிடித்த மீன்களை உடனே சமைத்து சாப்பிட ‘பார்பிக்யூ' வசதியும் இருக்கிறது.

கட்மத் தீவு

கட்மத் தீவு

லக்ஷ்வதீப்பின் அமிந்திவி தீவுக்கூட்டத்தை சேர்ந்த கட்மத் தீவு , ஏலக்காய் தீவு என்ற பெயரில் பிரபலமாக அறியப்படுகிறது. இந்த தீவில் கடல் ஆழம் குறைவாக காணப்படுவதுடன் ஏராளமான பவளப்பாறைகளும் அமைந்திருக்கின்றன. இங்கு ஸ்கூபா டைவிங்கில் ஈடுபட நபர் ஒருவருக்கு 2500 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. மேலும் கடல் நீச்சல், ஸ்நார்க்கெலிங் போன்ற நீர் விளையாட்டுகளிலும் நீங்கள் ஈடுபட்டு மகிழலாம். அதுமட்டுமல்லாமல் இங்கு வரும் பயணிகள் மண் கோட்டை கட்டுவதிலும், மீன் பிடிப்பதிலும் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கல்பேணி தீவு

கல்பேணி தீவு

கொச்சியிலிருந்து 150 மை தூரத்தில் அமைந்துள்ள கல்பேணி தீவு 2.8 கி.மீ நீள தரைக்கடல் பகுதிக்காக புகழ்பெற்றுள்ளது. அதாவது தரைக்கடல் என்றால் கடற்கரையை ஒட்டி ஆழம் குறைவான அலைகள் அற்ற ஸ்படிகம் போன்ற தூய நீருடன் காட்சியளிக்கும் கடல் நீர்ப்பரப்பாகும். எனவே இங்கு கடல் குளியல் மற்றும் ஸ்நார்க்கலிங் போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டு பொழுதை கழிக்கலாம். இந்த தீவில் 37 மீட்டர் உயரத்துடன் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட கலங்கரை விளக்கத்தின் உச்சிக்கு சென்றால் கல்பேணி தீவின் இயற்கை அழகை பரிபூரணமாக கண்டு ரசிக்க முடியும்.

காவரத்தி தீவு

காவரத்தி தீவு

லக்ஷ்வதீப்பின் தலைநகரமான காவரத்தி தீவிற்கு இந்திய கடற்கரையிலிருந்து நேரடி சொகுசுப்படகு போக்குவரத்து உள்ளது. லக்ஷ்வதீப்பின் உல்லாசப்பொழுதுபோக்கு மையமாக திகழும் இந்த தீவில் நீச்சல் தெரிந்த மற்றும் தெரியாதவர்களும் பல்வேறு நீர் விளையாட்டுகளை பயிற்சியாளர்களின் உதவியோடு விளையாடி மகிழலாம். மேலும் 'ஸ்கூபா டைவிங்' செய்ய அச்சப்படுபவர்கள் குறைந்த ஆழத்தில் மேற்கொள்ளப்படும் ‘ஸ்நார்க்கெலிங்'-கில் ஈடுபட்டு மகிழலாம்.

மாலிகு தீவு

மாலிகு தீவு

மாலத்தீவின் ஒரு அங்கமாக இருந்த மாலிகு தீவு 1976-ஆம் ஆண்டு இந்தியா மற்றும் மாலத்தீவு நாடுகள் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதோடு மாலிகு தீவு பல அம்சங்களில் மாலத்தீவை போன்றே தனித்துவமான அழகுடன் காட்சியளிக்கிறது. மேலும் எங்கு பார்த்தாலும் உயர உயரமான தென்னை மரங்களுடன், அதிகம் பரபரப்பில்லாத தனிமையுடன் காட்சியளிக்கும் மாலிகு தீவிற்கு நீங்கள் வாழ்வில் முறையாவது வந்து செல்ல வேண்டும்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்