India
Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ!

தமிழகத்தில் ஆகஸ்ட் மாதத்தில் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ!

கோடை வெப்பம் தணிந்து ஆடிக் காற்று வீசத் தொடங்கிவிட்டது! தமிழ்நாட்டில் கோடை வெயில் குறைந்து குளிர் காற்றும் மிதமான வானிலையும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர தூண்டுகிறது. இந்த மாதத்தில் தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்கள் மிகவும் அழகாகவும், பசுமையாகவும் காட்சி தரும்.

பசுமையான பள்ளத்தாக்குகள், உயரமான சிகரங்கள், அழகிய கடற்கரைகள், வனவிலங்குகள் நிறைந்த அடர்ந்த காடுகள், துடிப்பான கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை அனுபவிப்பதற்கு இதுவே சிறந்த நேரம். ஆகஸ்ட் மாதத்தில் தமிழ்நாட்டில் நீங்கள் பார்க்க வேண்டிய அழகான இடங்களின் லிஸ்ட் இதோ!

ஊட்டி

ஊட்டி

நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைகளின் ராணியான ஊட்டி மலைகள் மற்றும் பசுமையின் அழகிய பின்னணியைக் கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் முதன்மையான சுற்றுலாத் தலமான ஊட்டி தேயிலை தோட்டங்கள், அழகான நீர்வீழ்ச்சிகள், வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் மற்றும் வசீகரமான காலனித்துவ கட்டிடக்கலை ஆகியவற்றால் நிறைந்திருக்கிறது.

அனைத்து வயதினருக்கும் ஊட்டி ஒரு சரியான தேர்வாக இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ரோஜா தோட்டம், ஊட்டி ஏரிகள், தொட்டபெட்டா சிகரம், தேயிலை தொழிற்சாலை & தேயிலை அருங்காட்சியகம், செயின்ட் ஸ்டீபன் தேவாலயம், டைகர் ஹில் ஆகியவற்றை நீங்கள் கட்டாயம் பார்வையிட வேண்டும். நீலகிரி மலை ரயிலில் பயணம் செய்யத் தவறாதீர்கள்.

கொடைக்கானல்

கொடைக்கானல்

உயரமான கிரானைட் பாறைகள், பசுமையான பள்ளத்தாக்குகள், அமைதியான ஏரிகள் மற்றும் அருவிகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் கொடைக்கானல் நம் உணர்வுகளுக்கான விருந்து என்றே சொல்லலாம்.

2,000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அற்புதமான இடம், அதன் இனிய வானிலை மற்றும் கண்ணுக்கு இதமான சுற்றுப்புறங்கள் காரணமாக, தமிழ்நாட்டில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது.

கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா, சில்வர் கேஸ்கேட் நீர்வீழ்ச்சி, தூண் பாறைகள், கரடி ஷோலா நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக், குணா குகை, மோயர் பாயிண்ட், டால்பின் நோஸ், தலையார் நீர்வீழ்ச்சி, குறிஞ்சி ஆண்டவர் கோயில், கொடைக்கானல் சோலார் அப்சர்வேட்டரி ஆகியவை நீங்கள் இங்கு பார்க்க வேண்டிய இடங்களாகும்.

ஏற்காடு

ஏற்காடு

தமிழ்நாட்டின் சேலம் மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்துள்ள ஏற்காடு அதன் பரந்த பசுமையான காடுகள், வளமான காபி தோட்டங்கள், தனித்துவமான தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்காக பெயர் பெற்றது. 4970 அடி உயரத்தில் அமைந்துள்ள ஏற்காட்டின் வானிலை மிகவும் இதமாக இருப்பதால் எப்பொழுதும் சுற்றுலாப்பயணிகள் இங்கு வந்த வண்ணமே இருக்கின்றனர்.

எமரால்டு ஏரி, மான் பூங்கா, 32 கிமீ லூப் ரோடு, டிப்பரரி வியூ பாயின்ட், லேடி சீட், கிள்ளியூர் நீர்வீழ்ச்சி, ரோஸ் கார்டன், கோட்டச்சேடு தேக்கு காடு, தாவரவியல் பூங்கா, குரும்பப்பட்டி விலங்கியல் பூங்கா, பட்டுப் பண்ணை ஆகியவற்றை நீங்கள் இங்கு கட்டாயம் பார்வையிட வேண்டும்.

ஏலகிரி

ஏலகிரி

ட்ரெக்கிங் செய்பவர்களிடையேயும், இயற்கை ஆர்வலர்களின் மத்தியிலேயும் மிகவும் பிரபலமாக அறியப்பட்ட இடம் தான் இந்த ஏலகிரி. கடல் மட்டத்திலிருந்து 4600 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த அழகிய மலைவாசஸ்தலம் பல கண்கவர் சுற்றுலாத் தலங்களை உள்ளடக்கியது.

அவற்றில் ஜலகம்பாறை அருவி, புங்கனூர் ஏரி, தொலைநோக்கி கண்காணிப்பகம், சுவாமிமலை மலை, ஜலகண்டீஸ்வரர் கோவில், இயற்கை பூங்கா, அரசு மூலிகை பண்ணை, நிலாவூர் ஏரி, அமிர்தி விலங்கியல் நீர்வீழ்ச்சி ஆகியவை முதன்மையானவையாகும்.

வால்பாறை

வால்பாறை

கோயம்பத்தூர் மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர்களில் அமைந்துள்ள இந்த வால்பாறை அணைகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், குன்றுகள், காடுகள் மற்றும் பலவற்றை உள்ளடக்கி பார்வையாளர்களை தன்வசப்படுத்துகிறது.

சோலையார் அணை, தேயிலை தோட்டம், காட்டு மரக் குடிசைகள், நீரார் அணை, குரங்கு நீர்வீழ்ச்சி, வெள்ளமலை சுரங்கப்பாதை ஆறு, பிரலா நீர்வீழ்ச்சி, சின்ன கல்லார் நீர்வீழ்ச்சி, பாலாஜி கோயில், இந்திரா காந்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் தேசிய பூங்கா ஆகியவை நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

தேனி

தேனி

பசுமை மற்றும் அழகான நீர்வீழ்ச்சிகளால் சூழப்பட்ட தேனி மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள ஒரு அழகான சிறிய மாவட்டமாகும். ஏராளமான ஆறுகள் மற்றும் அணைகளைக் கொண்டுள்ள தேனி 27 காடுகளின் இருப்பிடமாக உள்ளதால் எங்கு பார்த்தாலும் பசுமை குடி கொண்டுள்ளது.

சுருளி நீர்வீழ்ச்சி, மேகமலை, கும்பக்கரை அருவி, போடிநாயக்கனூர், பல கோவில்கள் மற்றும் அணைகள் என தேனியில் எங்கு சென்றாலும் அது நமக்கு சுற்றுலாத் தலமே!

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

தமிழ்நாட்டின் தென்கோடி முனையில் அமைந்து இருக்கும் கன்னியாகுமரி வளமான கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகு நிறைந்த ஒரு மாவட்டமாகும். ஆகஸ்ட் மாதத்தில் இங்கு செல்லும் போது கோடை வெயில் தணிந்து இதமான வானிலை நிலவுகிறது.

திற்பரப்பு அருவி, விவேகானந்தர் பாறை நினைவுச்சின்னம், தாணுமாலயன் கோவில், திருவள்ளுவர் சிலை, பகவதி அம்மன் கோவில், பத்மநாபபுரம் அரண்மனை, கன்னியாகுமரி கடற்கரை, மெழுகு அருங்காட்சியகம், சங்குத்துறை கடற்கரை, ஒலகருவி அருவி ஆகியவை நீங்கள் கன்னியாகுமரியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

திருநெல்வேலி

திருநெல்வேலி

பல்வேறு புவியியல் அம்சங்களின் சங்கமமாக மலைகள், காடுகள், நெல் வயல்கள், கடல் மற்றும் வறண்ட நிலங்கள் ஆகிய அனைத்தையும் திருநெல்வேலி உள்ளடக்கி சுற்றுலாப் பயணிகளை கவர்கிறது. திருநெல்வேலி ஒரு பழங்கால குடியேற்றமாக கருதப்படுகிறது. முற்காலப் பாண்டியர்கள், இடைக்கால மற்றும் பிற்காலச் சோழர்கள், பிற்காலப் பாண்டியர்கள், மலபார் மற்றும் திருநெல்வேலி சுல்தான்கள், விஜயநகரப் பேரரசு என பல மன்னர்களின் ஆட்சி புரிந்ததற்கான சான்றுகளை நாம் இங்கே காணலாம்.

நெல்லையப்பர் கோவில், மணிமுத்தாறு அருவி, பாபநாசம், கழுகுமலை, மாஞ்சோலை, கூந்தங்குலம் பறவைகள் சரணாலயம், களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம், மேலும் பல கோவில்கள் மற்றும் அருவிகள் என நெல்லையில் நீங்கள் பார்ப்பதற்க்கு ஏராளமான இடங்கள் உள்ளன.

மேற்கூறப்பட்ட அனைத்து இடங்களும் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுடன் சாலை மார்க்கமாகவும், அருகிலுள்ள நகரங்களின் ரயில் மற்றும் விமான மார்க்கமாகவும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. வரவிருக்கும் மாதங்களில் தமிழ்நாட்டில் பருவமழை தொடங்கிவிடும். ஆகவே, ஆகஸ்ட் மாதத்திலேயே மேற்கூறிய அழகான இடங்களை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து ரசித்துவிட்டு வாருங்கள்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X