Search
  • Follow NativePlanet
Share
» »தேங்காய் நகரமான பொள்ளாச்சியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ!

தேங்காய் நகரமான பொள்ளாச்சியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களின் பட்டியல் இதோ!

கோயம்பத்தூரில் இருந்து 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த அழகிய நகரமான பொள்ளாச்சி அதன் பசுமை மற்றும் ஆடம்பரமான இயற்கை காட்சிகளுக்கு பெயர் பெற்றது. நாட்டின் பல பகுதிகளுக்கும் தேங்காய் இங்கிருந்தே அனுப்பப்படுவதால் இது தேங்காய் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது.

வலிமைமிக்க மேற்குத் தொடர்ச்சி மலைகளால் சூழப்பட்ட இந்த நகரம் வசீகரமான இயற்கை அழகைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், ஆண்டு முழுவதும் மிதமான மற்றும் இதமான காலநிலையையும் வழங்குகிறது. அதன் மிகுதியான இயற்கை அழகு காரணமாக பொள்ளாச்சியில் ஏகப்பட்ட திரைப்படங்கள் எடுக்கப்பட்டு உள்ளன என்பது நாம் ஏற்கனவே அறிந்த விஷயமே.

பல நகரங்களில் இருந்தி எளிதில் அணுகக்கூடிய பொள்ளாச்சியில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றின் பட்டியல் இதோ!

டாப் ஸ்லிப் டைகர் ரிசர்வ்

டாப் ஸ்லிப் டைகர் ரிசர்வ்

பொள்ளாச்சியில் இருந்து 38 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த டாப் ஸ்லிப் டைகர் ரிசர்வ் பொள்ளாச்சியின் முதன்மையான சுற்றுலாத் தலமாகும். சுற்றிலும் பசுமையான மலைகள் மற்றும் காடுகளுடன் கம்பீரமாக நிற்கிற இந்த இடத்தில் பல வனவிலங்குகளையும், அரியவகை தாவரங்களையும் கண்டு களிக்கலாம்.

காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இங்கு யானை சபாரி செய்து மகிழலாம். இயற்கை அழகால் கட்டிப் போடுகிற இந்த இடம் இயற்கை ஆர்வலர்களுக்கும் அமைதி விரும்புகளுக்கும் ஒரு வரப்பிரசாதம் ஆகும்.

ஆழியார் அணை

ஆழியார் அணை

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆழியார் அணையில் நீர் தேக்கம் மட்டுமின்றி மினி தீம் பார்க், தோட்டம், படகு சவாரி, விளையாட்டு பகுதி மற்றும் மீன்வளம் போன்ற மற்ற செயல்பாடுகளின் பட்டியலையும் கொண்டு, இது பொள்ளாச்சியில் பார்க்க வேண்டிய இடங்களில் இடம் பிடிக்கியது.

நீர்த்தேக்கத்தை சூழப்பட்ட ஆனைமலை மலைத்தொடரின் காட்சி கண்களுக்கு விருந்தாகவும், அணையின் மேல் இருந்து விழும் நீர் அருவி இயற்கை எழில் கொஞ்சும் விதமாகமாகவும் இருப்பதாலேயே இங்கு மக்களின் கூட்டம் அதிக காணப்படுகிறது.

குரங்கு நீர்வீழ்ச்சி

குரங்கு நீர்வீழ்ச்சி

குரங்கு நீர்வீழ்ச்சி வால்பாறைக்கு வடக்கே பொள்ளாச்சியிலிருந்து 30 கிமீ தொலைவிலும் ஆழியாறு அணையிலிருந்து 6 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது. ஆனைமலை மலைத்தொடரின் சாரலில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, பொள்ளாச்சி அருகே பார்க்க வேண்டிய இடங்களாகும்.

மழைக்காலங்களில் நீர் வரத்து அதிகமாக இருக்கும் போது, அருவியில் குளிப்பது புத்துணர்ச்சி அளிக்கிறது. பெயருக்கு ஏற்றாற்போல் இந்த இடத்தில் பல குரங்குகள் உள்ளன. பசுமையான காடுகள் மற்றும் பாறைகளால் சூழப்பட்ட இந்த மயக்கும் நீர்வீழ்ச்சியின் அழகில் நம் மனதை தொலைப்பது உறுதி.

ஆனைமலை மலைகள்

ஆனைமலை மலைகள்

மேற்கு தொடர்ச்சி மலைகளின் சாரலில் அமைந்துள்ள ஆனைமலை பசுமையான காடுகளும், நீர்வீழ்ச்சிகளும், இயற்கை எழிலும் நிறைந்த ஒரு மலைத்தொடராகும். சின்னார் வனவிலங்கு சரணாலயம், ஆனைமலை புலிகள் காப்பகம், பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் மற்றும் இரவிகுளம் தேசிய பூங்கா ஆகிய அனைத்தும் இந்த ஒரு இடத்தில் அமைந்துள்ளது.

நண்பர்களுடன் இளசுகள் அனைவரும் இங்கு கூட்டம் கூட்டமாக ட்ரெக்கிங் செய்வதும், குழந்தைகளுக்கான ஒரு சிறந்த பிக்னிக் ஸ்பாடாக இருப்பதால் இங்கு குடும்பங்கள் வருகை தருவதும் இங்கு வழக்கமே!

மாசாணி அம்மன் கோவில்

மாசாணி அம்மன் கோவில்

பொள்ளாச்சி மாசாணி அம்மன் கோவிலைப் பற்றி தமிழ்நாட்டில் அறிந்திடாதோர் எவரும் இருக்க முடியாது. இந்துக்களிடையே மிகவும் புனிதமாக கருதப்படும் இந்த கோவில் மிகவும் ஒரு சக்திவாய்ந்த ஸ்தலமாகும். பொள்ளாச்சியிலிருந்து 20 - 30 நிமிடங்களில் ஆனைமலை மாசாணி அம்மன் கோயிலை அடையலாம்.

நான்கு கைகளுடன் கபாலம், பாம்பு, மேளம், திரிசூலம் ஆகியவற்றை ஏந்தியவாறு 15 அடி உயரத்தில் படுத்த நிலையில் அம்மன் இங்கு காட்சியளிக்கிறார். பொதுமக்களின் குறைகளைக் கேட்கும் நலன்புரி அரசாகவும், மக்களின் உடல் உபாதைகளைச் சரிசெய்யும் மருத்துவ மருந்தகமாகவும், ஆண்கள் மற்றும் பெண்களின் துன்பங்களைக் குறைக்கும் நீதி மன்றமாகவும் இந்தக் கோவில் திகழ்கிறது.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

பொள்ளாச்சி சந்திப்பில் இருந்து 1 கி.மீ தொலைவில் உள்ள ஸ்ரீ அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் பொள்ளாச்சியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். கி.பி 12-13 ஆம் நூற்றாண்டில் கொங்கு சுந்தர பாண்டியன் மற்றும் கொங்கு திரிபுவன சக்கரவர்த்தி விக்ரம சோழன் ஆட்சியின் கீழ் கட்டப்பட்டது.

சிறந்த கலைப்படைப்பு மற்றும் சிற்பத் திறனுக்காக பெயர்பெற்ற இந்தக் கோவில் பொள்ளாச்சியில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகும்.

வால்பாறை

வால்பாறை

பொள்ளாச்சியில் இருந்து 65 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலைவாசஸ்தலமான வால்பாறை, தேயிலை மற்றும் காபி தோட்டங்களால் சூழப்பட்ட மிதமான வானிலையில் பார்வையாளர்களை ஈர்க்கிறது. வால்பாறையே ஒரு தனி சுற்றுலாத் தலமாகும், நீங்கள் அங்கு சென்றால் ஒரு நாளில் திரும்பி வர நிச்சயம் முடிவு செய்யமாட்டீர்கள்.

ஏரிகள், நீர்வீழ்ச்சிகள், மலை சிகரங்கள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகள் நிறைந்த வால்பாறை உங்களுக்கு ஒரு மறக்கமுடியாத பயண அனுபவத்தை வழங்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

அட்டகட்டி மற்றும் லோம்ஸ் வியூ பாயின்ட்

அட்டகட்டி மற்றும் லோம்ஸ் வியூ பாயின்ட்

ஆழியாரிலிருந்து வால்பாறை செல்லும் வழியில் ஒன்பதாவது ஹேர்-பின் வளைவில் இந்த வியூ பாயின்ட் அமைந்துள்ளது. மலை உச்சியில் இருந்து ரம்மியமான நிலப்பரப்பைக் காணும் வாய்ப்பை இது சுற்றுலாப் பயணிகளுக்கு வழங்குகிறது. பத்தாவது மற்றும் பதினொன்றாவது வளைவில் இருந்து வியூ விரிவடைகிறது, ஆனால் ஒன்பதாவது மிகவும் சிறப்புமிக்கதாகும். ஏனெனில் இது சூரிய அஸ்தமனத்தை பார்ப்பதற்கும், எண் பாறை மற்றும் நல்லமுடி பூஞ்சோலையை பார்ப்பதற்கும் ஒரு சிறந்த இடமாக உள்ளது.

மேலும் அறிவு திருக்கோவில், சூலக்கல் மாரியம்மன் கோவில், திருமூர்த்தி மலை, ஆத்துப்பாறை நீர் அருவி ஆகியவையும் நீங்கள் இங்கு கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

பொள்ளாச்சிக்கு எப்படி செல்வது?

பொள்ளாச்சிக்கு எப்படி செல்வது?

உடுமலைப்பேட்டையில் இருந்து 30 கிமீ, கோயம்புத்தூரில் இருந்து 40 கிமீ, வால்பாறையில் இருந்து 65 கிமீ, மூணாறில் இருந்து 110 கிமீ, திண்டுக்கல்லில் இருந்து 130 கிமீ, கொச்சியில் இருந்து 160 கிமீ, மதுரையில் இருந்து 190 கிமீ, தொலைவிலும், சென்னையிலிருந்து 500 கிமீ தொலைவிலும் இயற்கை எழில் கொஞ்சும் நகரமான பொள்ளாச்சி அமைந்துள்ளது.

பொள்ளாச்சியில் இருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள கோயம்புத்தூர் விமான நிலையம் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி மற்றும் புனே உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து முக்கிய நகரங்களுடனும் சிறந்த விமான இணைப்பைக் கொண்டிருக்கும் அருகிலுள்ள விமான நிலையமாகும்.

பொள்ளாச்சி சந்திப்பில் பாலக்காடு, கோயம்புத்தூர், திருச்செந்தூர் மற்றும் பழனியிலிருந்து வழக்கமான ரயில்கள் இயக்கப்படுகின்றன. கோயம்புத்தூர், திண்டுக்கல், சென்னை, சாலக்குடி, திருப்பூர், உடுமலைப்பேட்டை, மதுரை, வால்பாறை மற்றும் பழனி போன்ற அருகிலுள்ள நகரங்களிலிருந்து மாநில அரசு மற்றும் தனியார் டீலக்ஸ் பேருந்துகள் பொள்ளாச்சிக்கு இயக்கப்படுகின்றன.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X