அருணாசலப்பிரதேசத்தில் 10,000 அடி உயரத்தில் இமயமலைக்கு நடுவே அமைதியான இயற்கை அழகு மற்றும் ஆன்மீக சூழலால் அனைவரையும் கவரும் வகையில் அமைந்திருக்கும் நகரம் தான் இந்த தவாங். தலாய் லாமாவின் பிறப்பிடமாக அறியப்படும் தவாங் பல அற்புதமான மடங்கள், போர் நினைவுச் சின்னங்கள், ஏரிகள், கணவாய்கள், நீர்வீழ்ச்சிகள், பனி மூடிய சிகரங்கள் மற்றும் சாகச இடங்களைக் கொண்டுள்ளது.
தவாங் பள்ளத்தாக்கு வடக்கில் திபெத், தென்மேற்கில் பூட்டான் மற்றும் கிழக்கில் சேலா மலைத்தொடரை எல்லையாக கொண்டுள்ளது. 'மோன்-யுல்' என்று அறியப்படும், பாரம்பரியமான மொன்பா பழங்குடியினர் பெரும்பான்மையாக தவாங்கில் வசித்து வருகிறார்கள். தவாங்கின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை பெருமைப்படுத்துகிறது. 6 வது தலாய் லாமாவான, சாங்யாங் கியாட்சோ பிறந்த இடமாக உலகெங்கும் பிரபலமாக இருக்கும் தவாங்கில் சுற்றிப் பார்ப்பதற்கு ஏராளமான இடங்கள் உள்ளன.
எங்கும் நிறைந்த அமைதி மற்றும் நம்மை வியப்பில் ஆழ்த்தக்கூடிய இயற்கை அழகு ஆகியவற்றின் வனாந்தரத்தில் நாம் தொலைந்து போவது உறுதி. தவாங்கில் உள்ள பல பிரபலமான சுற்றுலாத்தலங்களில் சிலவற்றை இங்கே காண்போம்!

தவாங் மடலாயம்
அழகிய சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள தவாங் மடாலயம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள முதன்மையான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
17 ஆம் நூற்றாண்டில் மேரா லாமா லோட்ரே கியாஸ்டோவால் நிறுவப்பட்ட தவாங் மடாலயம் இந்தியாவின் மிகப்பெரிய புத்த மடாலயமாகவும் ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மடமாகவும் உள்ளது. எண்ணற்ற இளம் துறவிகள் வசிக்கும் இந்த மடாலயம் பௌத்த கல்வியின் மையமாக உள்ளது.
400 ஆண்டுகள் பழமையான இந்த மடாலயம் 17 கோம்பாக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் உயரத்தில் இந்த மடாலயம் அமைந்துள்ளதால் இங்கிருந்து பார்க்கக்கூடிய காட்சிகள் நம்மை மெய் சிலிர்க்க வைக்கும்.

சேலா பாஸ்
பிரமிக்க வைக்கும் நிலப்பரப்புகள் மற்றும் அற்புதமான சுற்றுப்புறங்களுக்கு மத்தியில் அமைந்திருக்கும் சேலா பாஸ், தவாங்கில் அதிகம் பார்வையிடப்பட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
13,700 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த பாஸ் தவாங்கை கவுகாத்தியின் திராங்குடன் இணைக்கிறது. இந்தியாவில் வாகனங்கள் செல்லும் மிக உயரமான பாதைகளில் இதுவும் ஒன்றாகும்.
இமயமலையின் மிகவும் ஈர்க்கக்கூடிய இடங்களில் ஒன்றான சேலா பாஸ் அருணாச்சலப் பிரதேச மக்களின் உயிர்நாடியாகவே திகழ்கிறது எனலாம். சேலா ஏரிக்கு அருகில் அமைந்துள்ள சேலா பாஸ், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் சாகச ஆர்வலர்களின் பக்கெட் லிஸ்டில் உள்ள இடமாகும்.

ஷோங்கா-சேர் ஏரி
அழகிய செழுமையான பள்ளத்தாக்குகள் மற்றும் பனி மூடிய மலைகளால் சூழப்பட்ட ஷோங்கா-ட்ஸர் ஏரி, தவாங்கின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
மாதுரி ஏரி என்றழைக்கப்படும் இந்த ஏரியை சுற்றியுள்ள இயற்கை அழகின் அமைதியிலிருந்து நாம் மீண்டு வருவது சற்று கடினம் தான்.

தவாங் போர் நினைவுச்சின்னம்
தவாங் நகரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தவாங் போர் நினைவுச்சின்னம், தவாங்கில் தேசபக்தி ஆர்வத்தை போற்றும் வகையில் பார்க்க வேண்டிய ஒரு அற்புதமான இடமாகும்.
1962 இந்திய-சீனப் போரில் நாட்டுக்காக போராடி வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களின் வீரத்தை நினைவாக இந்தச் சின்னம் அமைக்கப்பட்டது.
இது தவாங்கில் மிகவும் பார்க்க வேண்டிய இடங்களில் இன்றியமையாத ஒன்றாகும்.

நுரானாங் நீர்வீழ்ச்சி
பெரும்பாலும் இந்தியாவின் மிகவும் கவர்ச்சிகரமான நீர்வீழ்ச்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் நுரானாங் நீர்வீழ்ச்சி தவாங்கின் மறைந்திருக்கும் ரத்தினங்களில் ஒன்றாகும்.
தவாங்கிலிருந்து ஜெமிந்தாங் செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த 100 அடி உயரம் கொண்ட அழகிய நீர்வீழ்ச்சி, தவாங்கிலிருந்து 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஆனாலும் இதன் இயற்கை அழகில் நனைய உள்ளூர் மக்களும் சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் திரண்டு வருகின்றனர்.

கோரிசென் சிகரம்
அருணாச்சல பிரதேசத்தின் தவாங் மற்றும் மேற்கு கமெங் மாவட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ள இந்த கோரிசென் சிகரம் அருணாச்சல பிரதேசத்தின் மிக உயரமான சிகரமாகும்.
கடல் மட்டத்திலிருந்து 22,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இந்த சிகரம் தவாங்கிலிருந்து சுமார் 164 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
கோரிசென் சிகரத்தைப் பார்வையிடுவதன் மூலம் உங்களுக்கு உள்ளே ஒளிந்து இருக்கும் சாகசக்காரரை வெளியே கொண்டு வாருங்கள்.
த்ரில் தேடுபவர்கள் மற்றும் இயற்கை அன்பர்களுக்காக தவாங்கில் பார்க்க வேண்டிய மிக அற்புதமான இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

கமெங் ஆறு
வளமான பழங்குடி கலாச்சாரம், இயற்கை அன்னையின் பெருமை, அடர்ந்த காடுகள், ஆடம்பரமான நதி அமைப்பு மற்றும் அற்புதமான உயிர்களின் பன்முகத்தன்மையை காண, கமெங் ஆற்றின் வலுவான நீரோட்டங்களில் ராஃப்டிங் செய்வது சால சிறந்ததாகும்.
மேலும் உர்கெலிங் கோம்பா, பெங் டெங் சோ ஏரி, ஜஸ்வந்த் கர் போர் நினைவுச்சின்னம், தக்சங் கோம்பா, பும்லா பாஸ், சம்டென் யோங்சா மடாலயம், கெஷிலா சிகரம் மற்றும் நகுலா ஏரி ஆகியவையும் தவாங்கில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும்.
387கிமீ தொலைவில் உள்ள தேஜ்பூர் சலோனிபாரி விமான நிலையமும் மற்றும் 480கிமீ தொலைவில் உள்ள கவுகாத்தி லோக்பிரியா கோபிநாத் போர்டோலோய் சர்வதேச விமான நிலையமும் தவாங்கிற்கு அருகிலுள்ள விமான நிலையங்களாகும்.
தவாங்கிலிருந்து 383 கிமீ தொலைவில் உள்ள தேஜ்பூர் ரங்காபாரா ரயில் நிலையம் அருகிலுள்ள ரயில் நிலையம் ஆகும். சுற்றுலாப் பயணிகள் இங்கிருந்து பஸ் அல்லது டாக்ஸி மூலம் தவாங் நகரத்தை அடையலாம்.
வட கிழக்கின் முக்கிய நகரங்களிலிருந்து தவாங்கிற்கு ஏராளமான வண்டிகள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சுற்றுலாப் பயணிகள் அரசு அல்லது தனியார் போக்குவரத்தில் ஏதேனும் ஒன்றை எடுத்துக்கொண்டு நகரத்தை அடையலாம்.