அருணாச்சல் பிரதேசம் – ஆர்க்கிட் மலர்களின் அழகு பூமி!

முகப்பு » சேரும் இடங்கள் » » கண்ணோட்டம்

வண்ணமயமாக மலர்ந்து ஜொலிக்கும் ஆர்க்கிட் மலர்கள், சூரிய ஒளியில் ஒளிரும் பனிச்சிகரங்கள், தூய்மையான பள்ளத்தாக்குகள், செழிப்பான பசுமைக்காடுகள், ஸ்படிகம் போன்ற நீருடன் ஓடிவரும் சிற்றோடைகள், புத்த துறவிகளின் மந்திர ஒலிப்புகள் மற்றும் அன்போடு உபசரிக்கும் பூர்வ குடிமக்கள் போன்ற தனித்தன்மையான அம்சங்களோடு உங்களை அருணாசலபிரதேச மாநிலம் வரவேற்கிறது. வித்தியாசமான தாவரங்கள், உயிரினங்கள் மற்றும் இயற்கை சூழலை கொண்டுள்ள இம்மாநிலம் வேறெந்த பகுதியிலும் பெற முடியாத அனுபவங்களை ஒரு பயணிக்கு அளிக்கும் என்பதில் சந்தேகமேயில்லை.

எங்கோ ஒரு அமைதிப்பிரதேசத்தில் - சுயதரிசன தேடலில் மூழ்குவதற்கு மனம் விழையும் தருணங்களில் - நாமும் நம்மோடு இயற்கையும் தனித்திருக்க உதவும் பூமிதான் இந்த ‘அருணாச்சல பிரதேசம்’.

மனித மனத்தை லேசாக்கும் மகத்தான சக்தி இந்த பூமியில் நிரம்பி வழியும் மலைஎழில் காட்சிகளுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் அனுபவித்துதான் புரிந்துகொள்ள முடியும். ‘வாழ்விலே ஒரு முறை’ எனும் பட்டியலில் இடம் பெற வேண்டிய ஒன்றுதான் ‘அருணாச்சலப்பிரதேஷ் விஜயம்’.

அருணாச்சல் பிரதேசம் – புவியியல் அமைப்பு

வடகிழக்கிந்தியாவில் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் இம்மாநிலத்தின் புவியியல் அமைப்பு மிக விசேஷமான ஒன்று. வித்தியாசமான மலைத்தோற்றங்கள், விஜயம் செய்யப்படாத ஸ்தலங்கள் போன்றவற்றை இம்மாநிலம் கொண்டுள்ளது. ‘சூரியன் உதிக்கும் பூமி’ என்று இது அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இம்மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் இமாலயத்தின் மலைப்பகுதிகளால் சூழப்பட்டிருக்கிறது. எனவே இதன் அழகு எப்படியிருக்கும் என்பதை சொல்லவே வேண்டியதில்லை.

ஐந்து ஆற்றுப்பள்ளத்தாக்கு பகுதிகளாக இம்மாநிலம் பிரிக்கப்பட்டிருக்கிறது. சியாங், சுபன்சிரி, கமேங், திரப் மற்றும் லோஹித் என்பவையே அவை. இந்த பள்ளத்தாக்கு பகுதிகள் பசுமையான வனப்பகுதிகளால் சூழப்பட்டிருக்கின்றன.

ஆர்க்கிட் மலர்களின் சொர்க்கம்!

‘ஆர்க்கிட் மலர்களின் சொர்க்கம்’ எனும் பொருத்தமான பெயரை அருணாச்சல் பிரதேசம் பெற்றிருக்கிறது. இங்கு 500 வகைகளுக்கும் மேற்பட்ட ஆர்க்கிட் மலர்த்தாவரங்கள் காணப்படுகின்றன.

இந்தியாவில் காணப்படும் ஆர்க்கிட் வகைகளில் பாதிக்கும் மேற்பட்டவை இம்மாநிலத்தில்தான் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவற்றில் அரிதான மற்றும் அருகி வரும் வகைகளும் அடங்கும்.

இந்த தாவரங்களை பாதுகாப்பதற்காக ‘ஆர்க்கிட் ரிசர்ச் அன்ட் டெவெலப்மெண்ட் ஸ்டேஷன்’ எனும் ஆராய்ச்சி மையத்தையும் அருணாச்சல் பிரதேச மாநில அரசு அமைத்துள்ளது.

ஈடாநகர், செஸ்ஸா, டிப்பி, தரங், ரோயிங் அன்ட் ஜெங்கிங் போன்ற இடங்களில் மாநில அரசின் வனத்துறையால் பராமரிக்கப்படும் ஆர்க்கிட் மையங்கள் அமைந்துள்ளன.

இவற்றில் அலங்காரத்துக்கான பல ஆர்க்கிட் மலர்ச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. செஸ்ஸா ஆர்க்கிட் சரணாலயம் பலவகை ஆர்க்கிட் செடிகளுக்கு புகழ் பெற்றுள்ளது. ஓவியர் வரைந்த வண்ண ஓவியம் போன்று அருணாச்சல் பிரதேசம் முழுதும் ஆர்க்கிட் மலர்களால் ஜொலிக்கின்றது.  

சாகசப்பொழுதுபோக்குகள்!

அருணாச்சல் பிரதேச மாநில சுற்றுலா பலவிதமான சாகச பொழுதுபோக்கு அம்சங்களையும் பயணிகளுக்கு வழங்குகிறது. டிரெக்கிங் எனப்படும் மலையேற்றம், ஆற்று மிதவைப்படகு சவாரி மற்றும் தூண்டில் மீன் பிடிப்பு போன்ற பொழுதுபோக்கு அம்சங்கள் இங்கு சாகச விரும்பிகளுக்காக காத்திருக்கின்றன.

அருணாச்சல் பிரதேசத்திலுள்ள எல்லா இடங்களுமே மலையேற்றத்துக்கு உகந்ததாக காணப்படுவது ஒரு கூடுதல் சிறப்பம்சமாகும். அக்டோபர் முதல் மே மாதம் வரையிலான பருவம் மலையேற்றத்துக்கு உகந்ததாகும்.

கமேங், சுபன்சிரி, திபாங் மற்றும் சியாங் ஆறுகளில் ‘ஒயிட் வாட்டர் ரிவர் ராஃப்டிங்’ எனும் மிதவைப்படகு சவாரிகள் பயணிகளுக்காக ஏற்பாடு செய்து தரப்படுகின்றன.

மாநில முழுதும் வெவ்வேறு இடங்களில் தூண்டில் மீன்பிடிப்பு திருவிழாக்களும் நடத்தப்படுகின்றன. இது மனதுக்கு உற்சாகத்தையும் அமைதியையும் அளிக்கும் வித்தியாசமான பொழுதுபோக்கு அம்சமாகும்.

அருணாச்சல் பிரதேச மக்கள் மற்றும் கலாச்சாரம்

மிகவும் எளிமையான மனோபாவம் மற்றும் உபசரிப்பு குணங்களை கொண்டவர்களாக அருணாச்சல் பிரதேச மக்கள் விளங்குகின்றனர். 26 பூர்வகுடி இனப்பிரிவுகளை சேர்ந்த மக்கள் இங்கு வசிக்கின்றனர்.

அந்தந்த இனத்துக்குரிய பிரத்யேக கலையம்சங்கள் மற்றும் பாரம்பரியத்தை இவர்கள் பின்பற்றுவது குறிப்பிடத்தக்கது. அபடானி, அகா, போரி, கலோ, ஆதி, டாஜின், நியிஷி ஆகியவை இங்குள்ள முக்கியமான இனப்பிரிவுகளாகும்.

பல்வேறு மொழிகளும் இம்மாநிலத்தில் பேசப்படுகின்றன. இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளை உள்ளடக்கிய பல பூர்வகுடி திருவிழாக்கள் இம்மாநிலத்தில்  கொண்டாடப்படுகின்றன.

தவாங் நகரத்தில் கொண்டாடப்படும் லோசார் புத்தாண்டு திருவிழா முக்கியமான கொண்டாட்டமாகும். இது தவிர ட்ரீ திருவிழா, சோலுங் திருவிழா, ரெஹ் திருவிழா போன்றவையும் இம்மாநிலத்தில் விசேஷமாக கொண்டாடப்படுகின்றன.

அருணாச்சல் பிரதேசத்திலுள்ள முக்கிய சுற்றுலா அம்சங்கள்

கலவையான சுவாரசிய அம்சங்கள் நிறைந்த ஒரு சுற்றுலா அனுபவத்தை அருணாச்சல பிரதேசம் பயணிகளுக்கு வழங்குகிறது. மலைவாழ் பழங்குடி மக்களின் உன்னதமான கலாச்சாரம், மக்களின் வாழ்க்கை முறை, வித்தியாசமான இயற்கைச்சூழல் போன்ற அம்சங்களே சுற்றுலாவில் முக்கிய அங்கம் வகிக்கின்றன.

மாநிலத்தலைநகரான ஈடாநகரில் காட்டுயிர் சரணாலயம் மற்றும் ஈடாநகர் கோட்டை ஆகியவை அமைந்துள்ளன. தவாங், அலோங், ஜிரோ, பொம்டிலா, பசிகாட் ஆகிய நகரங்களும் அருணாச்சல் பிரதேசத்தின் முக்கிய சுற்றுலாத்தலங்களாக விளங்குகின்றன.

அருணாச்சல பிரதேசம் பருவநிலை

உயரத்தை பொறுத்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விதமான பருவநிலை இயல்புகள் அருணாச்சல் பிரதேச மாநிலத்தில் இடம் பெற்றுள்ளன. மிக உயரமான இடங்களில் இங்கு தூந்திரப்பிரதேச பருவநிலை நிலவுகிறது.

மத்தியமான உயரம் உள்ள இடங்களில் மிதமான பருவநிலை காணப்படுகிறது. இதர இடங்களில் உபவெப்பமண்டல பருவநிலை நிலவுகிறது. மே மாதம் முதல் செப்டம்பர் வரையான பருவத்தில் இம்மாநிலம் கடுமையான மழைப்பொழிவை பெறுகிறது.  

Please Wait while comments are loading...