தவாங் மடாலயம், தவாங்

இந்த தவாங் மடாலயத்தின் பெயரால்தான் ஒட்டுமொத்த தவாங் மலைநகரமும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கி.பி (1680-1681)-ல் நிறுவப்பட்ட இந்த மிகப்பெரிய மடாலயம் ஆசியாவிலேயே மிகப்பெரியது எனும் பெருமையை கொண்டுள்ளது.

அருணாசலப்பிரதேச மாநிலத்தின் தவாங் மாவட்டத்தில் பொம்டிலா எனும் இடத்திலிருந்து 180 கி.மீ தூரத்தில் இந்த மடாலயம் அமைந்துள்ளது.

கால்டென் நம்கியால் லாட்சே என்ற பெயராலும் அழைக்கப்படும் இந்த தவாங் மடாலயம் கடல் மட்டத்திலிருந்து 10000 அடி உயரத்தில் ஒரு மலை உச்சியில் அமைந்திருக்கிறது.

சுற்றிலும் மலைச்சிகரங்கள் உயர்ந்தோங்கி நிற்க தேவர்களின் தலைமைப்பீடமோ என்று வியக்கும் அளவுக்கு உன்னதமான கம்பீரம் மற்றும் தெய்வீக தோற்றத்துடன் மடாலயம் வீற்றிருக்கிறது.

இங்குள்ள 27 அடி உயர தங்க புத்தர் சிலை மிக விசேஷமான அம்சமாக புகழ் பெற்றுள்ளது. மூன்று அடுக்குகளைக்கொண்ட பிரம்மாண்ட பிரார்த்தனை கூடம் ஒன்றும் இதில் இடம் பெற்றுள்ளது.

பல புராதன எழுத்துப்பிரதிகள் மற்றும் நெறி நூல்கள் போன்றவை பாதுகாக்கப்படும் ஒரு பெரிய நூலகம் இதன் மற்றொரு சிறப்பம்சமாகும். 17ம் நூற்றாண்டைச்சேர்ந்த சில அரிய பிரதிகள் இந்த நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

வழங்கி வரும் கதைகளின்படி  இந்த மடலாயத்தை நிர்மாணித்த மேராக் லாமா லோட்ரே கியாம்ட்சோ அதற்கு ஏற்ற ஒரு ஸ்தலத்தை தேடி சிரமப்பட்டு பின்னர் தியானத்தில் அமர்ந்து இறைவழிகாட்டலுக்காக காத்திருக்க ஆரம்பித்தார்.

தியானம் முடிந்து அவர் கண்விழித்தபோது தனது குதிரை காணாமற்போயிருப்பதை தெரிந்துகொண்டார். குதிரையை தேடித்திரிந்த அவர் இறுதியில் அது ஒரு மலையின் உச்சியில் நிற்பதை கண்டார்.

மடாலயம் அமைப்பதற்கேற்ற இடம் இதுவே என குதிரை மூலமாக தனக்கு இறைவழிகாட்டல் கிடைத்தது போன்று அவர் உணர்ந்தார். எனவே ‘குதிரை தேர்ந்தெடுத்த இடம்’ எனப்பொருள்படும் ‘தவாங்’ என்று இந்த ஸ்தலம் அழைக்கப்படலாயிற்று. 

Please Wait while comments are loading...