ரோயிங் - இயற்கையின் அழகோடு ஒரு உலா!

பச்சைப் பசேலென்ற பள்ளத்தாக்குகளையும், மனதை மயக்கும் மலைகளையும் கொண்ட ஸ்தலமாக காணப்படும் ரோயிங், அருணாச்சலப் பிரதேசத்தின் கீழ்ப்புற திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தின் தலைமையகமாகும். இது அருணாச்சலப்பிரதேசத்தின் கிழக்குப் பகுதியாக விளங்குகிறது. மலைகள் மற்றும் ஆறுகளால் நிறைந்திருக்கும் இந்த நிலப்பகுதி, வடக்குப்புறத்தில் திபாங் பள்ளத்தாக்கினாலும், கிழக்குப்புறத்தில் லோஹித் மாவட்டத்தாலும், மெக் மோஹன் லைனாலும், மேற்குப்புறத்தில் அருணாச்சலப் பிரதேசத்தின் கிழக்கு மற்றும் மேற்புற சியாங் மாவட்டங்களாலும், மற்றும் தெற்குப்புறத்தில் அஸ்ஸாமின் தின்சுகியா மாவட்டத்தாலும் சூழப்பட்டுள்ளது.

பனிமூடிய மலைகள், கொந்தளிப்பான ஆறுகள், பனி படர்ந்த பள்ளத்தாக்குகள் மற்றும் அபரிமிதமான செடி கொடிகள் ஆகியவை ரோயிங்கின் சில ஈர்ப்புகளாகும்.

இயற்கை அழகுக்கு பெயர் போன ரோயிங், கண்ணைப் பறிக்கும் வண்ணமயமான உடைகளுடன் வெள்ளந்தியாகத் திரியும் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்கால தொல்பொருளியல் ஸ்தலங்கள் போன்றவற்றால், இயற்கை விரும்பிகள், சுவாரஸ்யமான அனுபவத்தை நாடும் சுற்றுலாப் பயணிகள், தொல்பொருள் ஆய்வாளர்கள் மற்றும் மனித இன ஆர்வலர்களின் மனதுக்குகந்த இடமாகவும் விளங்கி வருகிறது.

ரோயிங் மற்றும் அதன் அருகில் உள்ள சுற்றுலாத் தலங்கள்

ரோயிங், ஏராளமான பயணிகளை இங்கு வரவழைக்கத்தக்கவையான ஏரிகள், பள்ளத்தாக்குகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம் போன்ற எழில் கொஞ்சும் பல்வகை ஈர்ப்புகளைக் கொண்டுள்ளது.

இவற்றுள் ஸாலி மற்றும் மெஹாவோ ஏரி, மெஹாவோ வனவிலங்கு சரணாலயம் ஆகியவை மிக முக்கியமானவையாகும். ரோயிங், பிஷ்மாகர் மற்றும் ருக்மிணி நாடி போன்ற பழங்கால தொல்பொருளியல் ஸ்தலங்களுக்காகவும் பிரபலமாக உள்ளது.

தெளிந்த நீரோட்டத்துடன் கூடிய ஏரிகள், ஆறுகள் மற்றும் ஏராளமான உயர்ந்த நீர்வீழ்ச்சிகள் ஆகியவை வானத்தின் நீல நிறத்தை பிரதிபலிக்கும் அழகையும், அவ்வப்போது தலைக்கு மேல் மிதந்து செல்லும் மேகக்கூட்டங்களையும் காணும் சுற்றுலாப் பயணிகள் தம்மை மறந்து லயிக்கின்றனர்.

இயற்கையை முழுமையாக அனுபவித்து ரசிக்கும் ஆர்வம் கொண்ட இயற்கை அபிமானிகளை, இந்த மறைந்து கிடக்கும் சொர்க்கம் இரு கை நீட்டி வரவேற்கிறது.

ரோயிங்  - மண் மற்றும் மைந்தர்கள்!

மிஷ்மி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள இந்நகரம், நட்பாகப் பழகும் மக்கள் நிறைந்து உயிர்ப்புடன் காணப்படுகிறது. மிஷ்மி மற்றும் ஆடி ஆகிய இரு மலைஜாதி பிரிவினர்களே ரோயிங்கின் பழங்குடியினர் ஆவர்.

ஒவ்வொரு வருடமும், மிஷ்மிக்களின் திருவிழாவான ரே, பிப்ரவரி மாதத்திலும், ஆடிக்களின் திருவிழாவான சோலங் செப்டம்பர் ஒன்றாம் தேதியிலும், மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் போது நகரமே விழாக்கோலம் பூண்டு காணப்படும்.

இடு மிஷ்மி, இம்மாவட்டத்தின் இதர இரு மலைஜாதிப் பிரிவுகளுள் ஒன்றாகும். ஏனைய மலைஜாதி மக்களிலிருந்து இடு மிஷ்மிக்களை அவர்களின் தனித்தன்மை வாய்ந்த சிகையலங்காரம், உடையலங்காரம் மற்றும் கலைநயம் வாய்ந்த வேலைப்பாடுகள் பதிக்கப்பட்ட உடைகள் போன்றவற்றைக் கொண்டு எளிதாக அடையாளப்படுத்தி விடலாம்.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த மலைஜாதிப் பிரிவினர்கள் இம்மண்ணில் ஆழமாக வேரூன்றிய கலாச்சாரப் பண்புகளை இன்றளவும் மிகவும் பெருமையோடும், கௌரவத்தோடும் கடைபிடித்து வருகின்றனர்.          

ரோயிங் செல்வதற்கு மிகவும் ஏற்ற காலகட்டம், அக்டோபர் மாதம் ஆரம்பித்து ஜனவரி மாதம் வரை நிலவும் குளிர்கால மாதங்களே ஆகும். இக்காலகட்டத்தில், ரோயிங்கின் குளங்கள் அனைத்தும் தாமரைகளால் நிறைந்து உங்கள் சுற்றுலாப் பயணத்தை மேலும் இனிமையாக்கும்.

ரோயிங் செல்வது எப்படி?

ரோயிங் நகரம் பல்வேறு வகையான போக்குவரத்து சேவைகள் மூலம் எளிதாக அடையக்கூடியதாக உள்ளது. இதற்கென ஒழுங்கான ஒரு இரயில் நிலையமோ அல்லது விமான நிலையமோ இல்லை.

இதற்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையமாகிய அஸ்ஸாமின் தின்சுகியாவுக்கு இரயிலில் செல்லலாம். பின் அஸ்ஸாமிலிருந்து ரோயிங் செல்லும் பல்வேறு சாலை வழிகளில் ஒன்றின் வழியாகப் பயணித்து இந்நகரை அடையலாம்.

சுற்றுலாப் பயணிகள் இங்கு பிரபலமான சாலை வழி போக்குவரத்து சேவைகளாக விளங்கும் பேருந்துகள் மற்றும் டாக்ஸிகள் ஆகியவற்றில் ஒன்றைத் தேர்வு செய்து ரோயிங் சென்று சேரலாம்.

Please Wait while comments are loading...