Search
  • Follow NativePlanet
Share
» »அழகிய ஹார்ஸ்லிக்கு ஒரு ஹலோ சொல்வோம்

அழகிய ஹார்ஸ்லிக்கு ஒரு ஹலோ சொல்வோம்

By Kumaravel Rajan

தென்றல் உலாவும் மலைவாழிடம்

மனித இனம் தோன்றிய பிறகு ஆதி மனிதன் முதன்முதலில் குடியேறியது மலைப்பகுதிகளில் தான் என்று தொல்லியல் நமக்குச் சான்று பகர்கின்றது. காட்டு விலங்குகளிடமிருந்தும்,வெள்ளப்பெருக்கிலிருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்ள மனிதன் மலைப்பகுதிகளை தன் வாழிடமாகத் தேர்ந்தெடுத்தான். ஆனால் இன்றோ நிலமை வேறு. காலச்சக்கரம் சுழன்ற வேகத்தில் நாம் அறிவியல் யுகத்தில் வந்து நிற்கிறோம்.

நவ நாகரீகத்தில் நடைபோட்டுக் கொண்டிருக்கும் நமக்குச் சற்றே வாழ்வின் இறுக்கத்தைத் தளர்த்திக்கொள்ள சுற்றுலாப் பயணங்கள் உதவுகின்றன. அதிலும் மலையையும் மலைசார்ந்த இடத்தையுமே மனம் அதிகம் விரும்புகிறது.

ஹார்ஸ்லி அதைக் கண்டுகளி

ஹார்ஸ்லி அதைக் கண்டுகளி

பூலோக சொர்க்கத்தைக் காண விழைபவர்கள் ஆந்திர பிரதேசத்தில் அழகாய்

அமைந்துள்ள டபிள்யூ.டி ஹார்ஸ்லி மலை வாழிடத்திற்குச் செல்லலாம். அங்கு

நிலவும் காலநிலை உங்கள் உடலுக்கும், உள்ளத்திற்கும் உற்சாகத்தை ஊட்டும்.

அடேங்கப்பா!

ஹார்ஸ்லி மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 4,100 அடி உயரத்தில்

கம்பீரமாகக் காட்சியளிக்கின்றது. இங்கு காணப்படும் இயற்கைச்சூழல் உங்களைக்

கிறங்கடிக்கும் என்பதில் ஐயமில்லை.சாலைகளின் இருபுறங்களிலும் உள்ள

மரங்கள் தங்களின் கிளைகளை அசைத்து உங்களை வரவேற்கும்.

பனித்துகிலைப் பகலவன் நீக்கியதும் பசுமைப் போர்வை போர்த்திய

மலைமகளின் மடியில் நீங்கள் தவழலாம். அமலா,புகையிலை

மரம்,யூகலிப்டஸ்,அலமந்தா,சாண்ட்லவுட் ஆகிய மரங்கள் உங்களைத் தாலாட்ட

பாட்டிசைக்கும். மேகங்களின் ஆலயமாக ஹார்ஸ்லி மலைவாழிடம்

விளங்குவதில் வியப்பில்லை.

PC: Rajaraman Sundaram

 ஹார்ஸ்லிக்கு ஹலோ சொல்வோம்

ஹார்ஸ்லிக்கு ஹலோ சொல்வோம்

மலரின் மகரந்தத்தில் படுத்துப் புரளும் வண்டினம்போல் இயற்கையோடு நீங்கள்

உறவாட ஹார்ஸ்லிக்குச் செல்வது அவசியம். சென்னையிலிருந்து வெறும்

261கி.மீ தான். இவ்வளவு தூரமா என்று நீங்கள் வாயைத்திறப்பது எனக்குத் தெரியாமலில்லை. ஆழ்கடலின் ஆழத்தில் முத்து உள்ளதைப் போல்

தொலைவில்தான் அழகை தரிசிக்க முடியும்.

சாலை மார்க்கமாக 6-8 மணி நேரம் பயணித்தால் ஹார்ஸ்லி என்னும் அழகின்

நுழைவு வாயிலை அடையலாம். சென்னையிலிருந்து ஹார்ஸ்லி செல்லும்

பயணம் உங்களுக்கு ஓர் இதமான அனுபவத்தைத் தரும்.

PC: Shyamal

போறதுக்கு நேரம் காலம் வேண்டாமா?

போறதுக்கு நேரம் காலம் வேண்டாமா?

ஆண்டு முழுவதும் ஹார்ஸ்லி மலை வாழிடம் அழகையும் ஆனந்தத்தையும்

அள்ளித் தெளிக்கிறது. ஒவ்வொரு பருவங்களில் செல்லும் போதும் ஒரு புது

அனுபவம் நமக்கு உண்டாகும். இருப்பினும் கோடைகாலப் பயணத்தில் ஹார்ஸ்லி

மலைத்தலம் ஒருவித குளிர்ச்சியையும் குதூகலத்தையும் தரும்.

மழைகாலத்தில் ஹார்ஸ்லி மலைத்தொடர் சொர்க்கத்தின் அழகைப் பெறும்.

திசம்பர் முதல் பிப்ரவரி வரை நீடிக்கும் குளிர்காலத்தில்தான் இங்கு பறவைகள்

ஏகாந்தம் இசைத்து இன்னிசை பாடும்.

காதலர்களின் கனிவான கவனத்திற்கு

காதலர்களே நீங்கள் ஏறிந்து விளையாட இந்த பூமிப்பந்தில் இறைவன் தீட்டிய

ஓவியம் தான் ஹார்ஸ்லி. உங்கள் காதல் காவியத்தை அரங்கேற்ற ஹார்ஸ்லி

மலைவாழிடம் உங்களை அன்புடன் அழைக்கிறது. உங்கள் காதல் வாழ்விற்கு

மோகனராகத்தை ஹார்ஸ்லி மலைத்தென்றல் இசைக்கட்டும்.

பயணத்தைத் திட்டமிடலாமா?

பயணத்தைத் திட்டமிடலாமா?

ஹார்ஸ்லி மலைவாழிடம் இன்னும் விமானப்போக்குவரத்துடன்

இணைக்கப்படவில்லை.இங்கு சென்றால் உங்களுக்கே இறகு முளைத்துவிடும்.

பிறகெதற்கு விமானம்?

இருப்பினும் பெங்களூரு விமான நிலையம் ஹார்ஸ்லிக்கு 160 கி.மீ

தொலைவிலும் திருப்பதி விமான நிலையம் 165 கி.மீ தொலைவிலும்

அமைந்திருப்பது சற்றே திருப்தி அளிக்கிறது.

மடனபல்ல நகரிலிருந்து 43கி.மீ தொலைவில் குப் குப் வண்டி நிலையமும்

உள்ளது. எனவே சென்னையிலிருந்து மகிழுந்தில் பயணிப்பதே மகிழ்ச்சியான

அனுபவம்.

PC: Rajeev Rajagopalan

 ஹார்ஸ்லி செல்ல வழித்தடங்கள் இதோ.

ஹார்ஸ்லி செல்ல வழித்தடங்கள் இதோ.

வழி 1: சென்னை - திருப்பதி - ஹார்ஸ்லி

வழி 2: சென்னை - காஞ்சிபுரம் - சித்தூர் - ஹார்ஸ்லி

சென்னையிலிருந்து வண்டியைக் கிளப்பினால்

தமிழகத்தின் தலைநகராக விளங்கும் சென்னை பல்வேறுபட்ட இனமக்களின்

சங்கமமாக உள்ளது. திரையரங்கங்கள்,கோயில்கள்,கேளிக்கையரங்கம்,தலைவர்கள்

மீளாத்துயில் கொள்ளுமிடங்கள் ஆகியவைகளுக்கு இங்கு பஞ்சமில்லை.

திருப்பதி சென்றால் திருப்பம் நேரும்

சென்னையிலிருந்து எட்டிப்பிடித்ததைப்போல் 133 கி.மீ தொலைவில் திருப்பதி

அமைந்துள்ளது.கடவுள் நம்பிக்கை உடையோர் கன்னத்தில் போட்டுக்கொள்ளவும்.

இம்மலையில் தன்னைக்காண வரும் பக்தர்களுக்கு ஏழுமலையான் அருள்

பாலிக்கிறார்.

PC: Dinesh Kumar

 இறுதி இலக்கு ஹார்ஸ்லி

இறுதி இலக்கு ஹார்ஸ்லி

திருப்பதியிலிருந்து 128 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஹார்ஸ்லி

மலைவாழிடத்தின் தனிச்சிறப்பிற்குப் பஞ்சமில்லை. இம்மலைவாழிடத்தை

நோக்கி நாம் படையெடுக்கும் முன் அங்கு காணப்படும் அழகின் சின்னங்களை

நாம் அறிய வேண்டியது அவசியம்.

PC: Ram Prasad

 கவின்மிகு காட்டுயிர் சரணாலயம்

கவின்மிகு காட்டுயிர் சரணாலயம்

ஹார்ஸ்லி மலையில் காணப்படும் காட்டுயிர் சரணாலயம் பல்வேறு

வகையான தாவர,விலங்கினங்களின் புகழிடமாக விளங்குகிறது. இதைக் காண

நேருமேயானால் இறைவன் படைப்பின் இலக்கணத்தை உணரலாம்.

அழகிய ஓடை. அதனருகில் ஓங்கி உயர்ந்த மாமரம்.அதன் உச்சியில் காய்த்துக்

குலுங்கும் கனிகள்.அதைக் கொத்தி உண்ணும் கிளி.ஏக்கத்துடன் பார்க்கும் அணில்

என்று நாம் அந்த சரணாலயத்தில் காணும் காட்சிகள் யாவும் நம்மைக்

கவிஞனாக்கிவிடும்.

சுகம்தரும் சுற்றுச்சூழல் பூங்கா

சுகம்தரும் சுற்றுச்சூழல் பூங்கா

இங்கு காணப்படும் சுற்றுச்சூழல் பூங்கா இயற்கை வல்லுனர் வேங்கட சுப்பா

ராவினால் உருவாக்கப்பட்டது. வளரும் தலைமுறைக்கு இயற்கையக் காக்க

வேண்டும் என்ற விழிப்புணர்வைத் தோற்றுவிக்க இந்தப் பூங்கா துணைபுரியும்

என்று நம்பலாம்.

மலாமா ஆலயம்

மலாமா ஆலயம்

இங்கு நம்மை பரவசப்படுத்தும் பல்வேறு விசயங்களுள் மலாமா ஆலயமும்

ஒன்று. மலாமா என்ற பழங்குடி இனப்பெண் நீண்ட நாட்களுக்கு முன் அங்கு

வாழ்ந்ததாகவும் இயற்கை முறையில் வைத்தியம் செய்து பழங்குடி இனமக்களின்

நோய் தீர்த்ததாகவும் பிறகு அப்பெண் காணமல் போய்விட்டதாகவும் அங்கு

வாழும் மக்கள் கதை கூறுகின்றனர்.

அத்தோடு மட்டும் நில்லாமல் அப்பெண்ணைக் கடவுளக ஏற்று ஓர் அழகிய

ஆலயத்தையும் எழுப்பியுள்ளனர். பெண்ணைச் சுமையாகக் கருதும் சமுதாயத்தில்

பெண்ணைத் தெய்வமாக ஏற்றுக்கொண்ட மக்களின் மனதை என்னவென்று

பாரட்டுவது.

PC: Raghuramacharya

கண்ணைக்கவரும் கங்கோத்ரி ஏரி

கண்ணைக்கவரும் கங்கோத்ரி ஏரி

இங்கு 360 கி.மீ பரப்பளவில் கங்கோத்ரி ஏரி காணப்படுகிறது. காற்றின்

வேகத்தால் அலையெலும்பும் இந்த ஏரி உங்கள் மனதையும் அலைபாயவைக்கும்

என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. பல்வேறு வண்ணக் கொடிகளால்

அலங்கரிக்கப்பட்டிருக்கும் படகுகள் இரு கரம் நீட்டி பயணிக்க வாருங்கள் என்று

அழைப்பது போல் இருக்கும். படகுகளில் நீங்கள் பயணம் செய்யும் போது

காற்றினால் சிதறுண்டு உங்கள் முகத்தில் தெறிக்கும் நீர்த்துளிகள் உங்களின்

கரைந்துவிட்ட கடந்த காலநினைவுகளை மெல்ல அசைபோட வைக்கும்.

PC: Alosh Bennett

சித்தமெல்லாம் சிவனே

சித்தமெல்லாம் சிவனே

இறுதி யாத்திரையாக ஹார்ஸ்லி மலைவாழிடத்தில் அமைந்திருக்கும்

சிவாலயத்திற்குச் சென்று வணங்கலாம்.வாழ்வின் முடிவு சிவனை நோக்கி

என்பது போல நம் இன்பப் பயணத்தின் முடிவும் சிவாலயத்தோடு நிறைவு

பெறுகிறது.

உடனே முடிவெடுங்கள். உங்கள் உள்ளச் சாளரங்கள் ஹார்ஸ்லிக்காகத்

திறக்கட்டும்.

PC: Nikesh Kumar

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X