Search
  • Follow NativePlanet
Share
» »ஐயப்ப பெருமானின் அறுபடை வீடு கோவில்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

ஐயப்ப பெருமானின் அறுபடை வீடு கோவில்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

அறுபடை வீடு என்றாலே நம் அனைவர்க்கும் நினைவுக்கு வருவது தமிழ் கடவுளான முருகரே! ஆனால் ஹரிஹர சுதனான ஐயப்ப பெருமானுக்கும் அறுபடை வீடுகள் உண்டு என உங்களுக்கு தெரியுமா மக்களே! இந்த ஆறு முக்கியமான ஐயப்பன் கோவில்களும் மிகவும் சக்தி வாய்ந்த திருத்தலங்களாகும். ஐயப்ப சுவாமி என்றாலே இளம் வயது பெண்கள் செல்லக்கூடாது என்ற ஒரு நிபந்தனை இருப்பது நமக்கு தெரியும், ஆனால் அது சபரிமலைக்கு மட்டும் தான். மீதி ஐந்து படை வீடுகளுக்கும் எல்லா வயது பெண்களும், ஆண்களும், குழந்தைகளும் செல்லலாம்! ஐயப்ப பெருமானின் அறுபடை வீடுகள் பற்றிய தகவல்கள் இதோ!

அச்சன்கோவில்

அச்சன்கோவில்

இது பரசுராமரால் தோற்றுவிக்கப்பட்ட ஆலயமாகும், இங்குள்ள ஐயப்ப விக்கிரகமும் அவரது திருக்கரங்களால் நிறுவியது. உலகில் உள்ள ஐயப்ப சிலைகளில் இந்த கோவிலில் உள்ள சிலை தான் மிகவும் பழமை வாய்ந்தது. ஏனென்றால் இது கடவுளின் கரங்களால் செய்யப்பட்டது அல்லவா! இங்கு வனராஜனாக கையில் அமுதமும், காந்தமலை வாளும் ஏந்திய திருக்கோலத்தில் இத்தலத்தில் ஐயப்பன் வீற்றிருக்கிறார். இவருக்கு இருபுறமும் பூரண, புஷ்கலை தேவியர் காட்சி தருகின்றனர்.

இதனால் 'கல்யாண சாஸ்தா' என்று அழைக்கிறார்கள். திருமண வரம் வேண்டுவோர் வழிபட வேண்டிய சிறப்புமிக்க தலம் இதுவாகும். இவரது வலது கையில் சந்தனம் மற்றும் புனித நீர் இருக்கிறது. பலதரப்பட்ட விஷ முறிவு சிகிச்சைகளுக்கு இந்த சந்தனமும் புனித நீரும் அதிமருந்தாக செயல்படுகிறது. செங்கோட்டையில் இருந்து 30 கிமீ தூரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. ஆண்களுடன் அனைத்து வயது பெண்களும் இந்த கோவிலுக்கு வருகை தந்து ஐயப்ப பெருமானை தரிசிக்கலாம்.

ஆரியங்காவு

ஆரியங்காவு

தென்காசியில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் வழியில் கேரளா மற்றும் தமிழகத்தின் எல்லையில் ஆரியங்காவு எனும் சிற்றூரில் இந்த கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஐயப்பன் அரசராக வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மதுரையை சேர்ந்த சௌராஷ்டிர பெண்ணான புஷ்கலா தேவியை மணந்து ஐயப்பன் இந்த கோவிலில் திருமண கோலத்தில் காட்சி தருகிறார். இங்கு இருக்கும் ஒற்றைக்கல் திருமண மேடையையும் நீங்கள் காணலாம். கேரள முறையில் கட்டப்பட்டு இருக்கும் கோவிலில் தமிழக முறைப்படியும் பூஜைகள் நடைபெறுகின்றன.

மார்கழி மாதத்தில் இங்கு ஐயப்பனுக்கும் புஷ்கலா தேவிக்கும் திருமண வைபவம் மிகவும் விமர்சியாக நடைபெறுகிறது. அந்த சமயத்தில் மதுரையில் இருந்து சௌராஷ்டிரா இனத்தவர்கள் பெண் வீட்டு சார்பில் சீர்வரிசை செய்கின்றனர். அதோடு மாப்பிள்ளை வீட்டு சார்பில் பெண் வீட்டாருக்கு இங்கு மூன்று நாட்கள் விருந்தும் அளிக்கப்படுகிறது.

குளத்துப்புழா

குளத்துப்புழா

மூன்றாவது படை வீடான குளத்துப்புழாவில் ஐயப்ப பெருமான் குழந்தை வடிவில் காட்சி தருகிறார். அதனால் அவர் பால சாஸ்தா என்றும் அழைக்கப்படுகிறார். இந்த ஆலயத்தின் கருவறை சிறுவர்கள் நுழையும் அளவிலான உயரத்திலேயே அமைக்கப்பட்டிருக்கிறது. விஜயதசமி நாளில் இங்கு வித்யாரம்பம் எனும் நிகழ்வு வெகு விமர்சியாக நடைபெறுகிறது.

அன்றைய நாளில் பள்ளியில் சேரவிருக்கும் குழந்தைகளுக்கு எழுத்துப் பயிற்சி தரப்படும். இப்படி செய்தால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள் என்பது ஐதீகம். கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து 60 கிமீ தூரத்திலும் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் இருந்து 40 கிமீ தூரத்திலும் இந்த ஆலயம் அமைந்துள்ளது. குழந்தை வரம் வேண்டுபவர்கள், இந்த ஆலயத்திற்கு வந்து ஐயப்பனை வேண்டி நின்றால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

பந்தளம்

பந்தளம்

காட்டில் பாலகனாக கண்டெடுக்கப்பட்ட அய்யன் ஐயப்பனை மன்னன் ராஜசேகரன் இங்கு தான் சீரோடும், சிறப்போடும் வளர்த்தார். மகன் நினைவாக மன்னர் இங்கு ஒரு ஐயப்பன் ஆலயத்தை எழுப்பியுள்ளார்.

சபரிமலையில் இருந்து சுமார் 88 கி.மீ தொலைவில், திருவனந்தபுரம் சாலையில் அச்சன்கோவில் நதியின் கரையோரத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது அணிவிக்கப்படும், திரு ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான் வைக்கப்பட்டிருக்கின்றனவாம்.

எருமேலி

எருமேலி

எருமைத் தலைக் கொண்ட மகிஷியை வதம் செய்த தலம் ஆதலால் இத்திருத்தலம் எருமேலி என்றானது. சபரிமலை ஐயப்பனை தரிசிக்க வரும் அனைத்து ஐயப்ப பக்தர்களுக்கும் தவிர்க்கவே முடியாக ஒரு இடம் எதுவென்றால் அது எருமேலி தான். இங்கு ஐயப்பன் வேட்டைக்கு செல்லும் கோலத்தில் கையில் வில் மற்றும் அம்புகளை தாங்கியவாறு காட்சியளிக்கிறார்.

மேலும் வாவர் பள்ளிவாசல், கோட்டை கருப்புசாமி, வல்லியம்பலம் மற்றும் பொன்னம்பலம் கோவில்களை நீங்கள் காணலாம். சபரிமலை யாத்திரையின் போது புகழ்பெற்ற எருமேலி பாட்டுத்திடல் இந்த இடத்தில் இருந்து தான் தொடங்குகிறது. ஐயப்ப பக்தர்கள் அனைவரும் இங்கு வந்து வேடர்களைப் போல் வேஷமிட்டு பேட்டை துள்ளி பரவசமடைகின்றனர்.

சபரிமலை

சபரிமலை

சபரிமலையில் அமர்ந்த திருக்கோலத்தில் முன்புறம் சாய்ந்த நிலையில் யோக சின்னம், சின் முத்திரை தாங்கி பக்தர்களுக்கு காட்சி தருகிறார். தான் பூலோகத்திற்கு வந்த வேலை முடிந்துவிட்டதாகவும், அதனால் கடவுள் பரசுராமர் பிரதிர்ஷ்டை செய்த சிலைக்குள் இரண்டற கலந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கப் போவதாகவும் கூறி ஐயப்பன் இந்த ஆலயத்திற்குள் அமர்ந்து விட்டார்.

ஆண்டுதோறும் கார்த்திகை மாத பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜையில் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலையணிந்து விரதமிருந்து சபரிமலை 'தர்மசாஸ்தா'வை வழிபட்டு செல்கின்றனர். இந்த கோவிலுக்கு எந்த மதத்தினரும் வரலாம். இங்கு ஐயப்பன் நித்திய பிரம்மச்சரிய விரதத்தில் இருப்பதால் இந்த ஆலயத்திற்கு இளம் பெண்கள் வர அனுமதி இல்லை!

இவைகள் தான் ஐயப்ப பெருமானின் அறுபடை வீடுகள். சபரிமலைக்கு புனித யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்கள், ஐயப்பன் எழுந்தருளி அருள்பாலிக்கும் இந்த 6 கோவில்களுக்கும் சென்று வழிபட்டால் சிறப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. சென்று வாருங்களேன்!

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X