Search
  • Follow NativePlanet
Share
» »பொங்கல் பண்டிகைக்குப் பின் இவ்வளவு வரலாறு உள்ளதா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

பொங்கல் பண்டிகைக்குப் பின் இவ்வளவு வரலாறு உள்ளதா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை நாம் அனைவரும் மிகவும் கோலாகலமாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுவது வழக்கம்! தை 1 அன்று பொங்கல் பண்டிகையும், தை 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் மாட்டு பொங்கலையும், காணும் பொங்கலையும் மிக விமர்சியாக கொண்டாடுகிறோம். இது தமிழர்களின் மிக முக்கியமான பண்டிகையாகும். காலம் காலமாக நாம் பொங்கல் பண்டிகையை கொண்டாடினாலும் இதன் வரலாறு தெரிந்து தான் நாம் கொண்டாடுகின்றோமோ? பல பேருக்கு இது தெரியாது! ஆனால் இப்போது தெரிந்துக் கொள்வோமே! ஒன்றும் தவறில்லை!

பொங்கலுக்கும் முன் ஒரு பண்டிகை உள்ளதாம்

கி.பி. எட்டாம் நூற்றாண்டில் ஆண்டாள் இயற்றிய திருப்பாவையிலும்,மாணிக்க வாசகர் எழுதிய திருவெம்பாவையிலும் கூட இந்த பண்டிகை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. அது தான் மார்கழி நீராடல் என்பதாகும். மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பரமாத்மாவே கூறியிருக்கிறார். அந்த அளவுக்கு புனிதமான மாதம் இந்த மார்கழி மாதம் ஆகும்.

Pongal

மார்கழி மாதத்தில் கடும் குளிர் நிலவும், ஆனாலும் காலையில் எழுந்து நீராடிவிட்டு வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டு புதிதாக பறித்த மலர்களை கொய்து கொண்டு ஆலயங்களுக்கு சென்று தெய்வ வழிபடு செய்வது அதீத நன்மைகளை கொடுக்கும் என சங்க கால இலக்கியங்களில் கூறப்பட்டுள்ளது. இதைத்தான் மார்கழி நீராடல் என்று கூறுவார்கள். இது தான் தை திருநாளுக்கு முன்னோடியாகும்.

தைத்திருநாள் வரலாறு

இயற்கைத் தெய்வமாகக் கருதப்படும் சூரிய பகவானுக்கும்,மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றி சொல்லும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதாவது நாம் சாப்பிடும் நெல்லை விளைவிக்க எவையெல்லாம் உதவியதோ அவற்றுக்கெல்லாம் நன்றி கூறி வழிபடுவதாகும். ஆடி மாதம் பயிரிடப்பட்ட பயிர்கள் தை மாதத்தில் அறுவடைக்கு தயார் ஆகிவிடும். அந்த காலங்களில் எல்லாம் தை மாத அறுவடையே அதிக விளைச்சல் தரும் என்பது நம்பிக்கை. உழைக்கும் மக்களின் தேவனாகிய கதிரவனுக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றிசெலுத்தும் விதமாக சூரியப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.

Pongal

நான்கு நாட்கள் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை

போகி பண்டிகை

போகிப்பண்டிகை என்பது பொங்கலுக்கு முதல்நாள் அதாவது மார்கழி கடைசி நாள் தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். போகிப்பண்டிகையன்று வீட்டை சுத்தம் செய்து, தேவையில்லாத பழைய பொருட்களை எரிப்பது வழக்கம். பழையன கழிதலும் புதியன புகுதலுமே போகியாகும். விளைச்சல் முடிந்து பிறக்கும் ஆண்டு புதுமையாய், மகிழ்ச்சிகரமாய் இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள். நமக்கு கெட்ட நேரம், கெட்ட எண்ணம் எல்லாம் இந்த தீயில் கருகி விட வேண்டும். பிறக்கும் ஆண்டு நமக்கு நல்ல எண்ணங்களையும் நல்ல பலன்களையும் தர வேண்டும் என்று எண்ணி போகி பண்டிகை கொண்டாட வேண்டும்.

சூரியப் பொங்கல்

உழைக்கும் மக்களின் தேவனாகிய கதிரவனுக்கும், ஏனைய உயிர்களுக்கும் நன்றிசெலுத்தும் விதமாக சூரியப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் படையலில் முக்கியமாக மஞ்சள் கொத்து, கரும்பு, வாழை, கிழங்கு வகைகள், கொடி வழிக் காய்கறி வகைகள் சேர்க்கப்படும்.

Pongal

பச்சை நெற்களை அரைத்து தவிடு நீக்காமல் தண்ணீர் சேர்த்து வைக்கப்படும் பருப்புக் குழம்புடன் படையலிட வேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது ஐதீகம்! உண்மை தானே! மனதார சூரிய பகவானை கும்பிட்டு படையலிட்டு பாருங்கள். நிச்சயம் வாழ்வில் வெளிச்சம் வரும்.

மாட்டுப் பொங்கல்

விவசாயத்திற்கு உதவி செய்த கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் நாளே இந்த மாட்டுப்பொங்கல். இந்த பொங்கல் தைமாதம் 2-ம் நாள் கொண்டாடப்படுகிறது. மாட்டுப் பொங்கலன்று தொழுவத்தில் உள்ள மாடுகளை குளிக்கவைத்து அலங்காரம் செய்து வைக்கப்படும் பொங்கலே மாட்டுபொங்கலாகும். வைத்த பொங்கலை மாடுகளுக்கு கொடுப்பார்கள்.

Pongal

மாட்டுப்பொங்கல் அன்று மாடுகள் அனைத்தும் கொம்புகளில் வண்ணம் தீட்டப்பட்டு பொட்டு வைத்து தோரணம் கட்டி பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருக்கும். கிராமப் புறங்களில் மாடுகளை வண்டிகளில் பூட்டி ஊர்வலம் வருவதை இன்றளவும் நாம் காண முடிகிறது . உழவுத்தொழிலுக்கு உதவியாக இருக்கும்கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் விதமாகவே மாட்டுப்பொங்கல் மாடு வைத்திருக்கும் ஒவ்வொரு வீட்டிலும் கொண்டாடப்படுகிறது.

காணும் பொங்கல்

காணும் பொங்கல் தை மாதம் 3-ம் நாள் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பட்டிமன்றம், உறி அடித்தல், வழுக்கு மரம் ஏறல் போன்ற வீர சாகசப் போட்டிகள் உட்படப் பல்வேறு நிகழ்ச்சிகள் இந்நாளில் கொண்டாடப்படுகிறது. மேலும் இந்நாளில் மக்கள் பீச், தியேட்டர், பார்க், மற்ற பிற சுற்றுலாத் தலங்களுக்கு சென்றும் கொண்டாடுவார்கள்.

சமத்துவம் உணர்த்தும் பொங்கல் பண்டிகை

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடுகின்றனர். இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் பொங்கல் பண்டிகை வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இவ்வளவு ஏன்? கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பொங்கலன்று உள்ளூர் விடுமுறை கூட விடப்படுகிறதாம். தைப்பொங்கல் விழாவானது தமிழர்களின் விழாவாக பலர் கருதுகின்றனர். ஆனால், அதுவல்ல உண்மை. பொங்கலை இந்துக்கள் மட்டுமல்லாமல் தமிழ் கிருத்துவர்கள், தமிழ் இஸ்லாமியர்களும் சர்க்கரைப் பொங்கல் வைத்து சிறப்பு விருந்தாக குடும்பத்தினருடன் உண்பதும் தமிழ்நாட்டில் பெரும்பான்மையை உணர்த்துகிறது.

Pongal

இந்த நான்கு பண்டிகைகளையும் நாம் மிகவும் உற்சாகமாக கொண்டாடுகிறோம். எங்கு இருப்பவர்களும் பொங்கல் பண்டிகை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். நீங்களும் உங்கள் உற்றார் உறவினருடன் இந்த பொங்கலை ஆனந்தமாக கொண்டாடிடுங்கள்!

Read more about: pongal tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X