
கோட்டயம் மாவட்டத்திலிருந்து 12 கி.மீ தூரத்திலுள்ள இந்த குமரகம் சுற்றுலாத்தலமானது உப்பங்கழி கால்வாய்கள் மற்றும் நீர்த்தேக்கத்தில் இயங்கும் பாரம்பரிய படகுச்சுற்றுலா அம்சங்களுக்காக சர்வதேச கவனத்தைப் பெற்றுள்ளது. பச்சை மரகதம் போல பளிச்சிடும் ஏரிக்கரைகளையும், நிசப்தம் நிரம்பி வழியும் உப்பங்கழி ஓடைகளையும் பெருமையுடன் கொண்டிருக்கும் இந்த குமரகம் தீவுத்திட்டுகளுக்கு பல தரப்பையும் சேர்ந்த சுற்றுலாப்பயணிகள் ஓய்வையும் புத்துணர்ச்சியையும் நாடி வருகின்றனர். வாருங்கள் நாமும் ஆன்மீகம் தேடி குமரகத்துக்கு போவோம்.

படகுவீடுகள்
மற்ற எந்த சுற்றுலாத்தலத்திலும் காணமுடியாத ஒரு அற்புத அதிசயமாக இங்கு காணப்படும் படகுவீடுகள் சிறப்பு பெற்றுள்ளன. படகு வீடுகளில் பயணம் செய்தவாறு உப்பங்கழி நீரோடைகளின் அமைதியையும் கரைகளில் வழியும் இயற்கை எழிலையும் ரசிப்பதற்காக லட்சக்கணக்கான பயணிகள் வருகை தருகின்றனர். தங்கள் சக்திக்கேற்றவாறு பயணிகள் ஒரு முழுநாள் தங்குவதற்காகவோ அல்லது இரவிலும் தங்குவதற்காகவோ விதவிதமான படகுகளில் ஒன்றை தங்கள் சக்திக்கேற்றவாறு வாடகைக்கு அமர்த்திக்கொள்ளலாம்.

அமைப்பு
முழுக்க முழுக்க மரச்சட்டங்களால் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த படகுவீடுகள் குளிர்பதனவசதி உள்ளிட்ட எல்லா நவின வசதிகளையும் கொண்டுள்ளன. ஒரு படுக்கை அறை முதல் மூன்று படுக்கை அறைகள் வரை மற்றும் நவீன குளியல் அறைகள், சமயலறை, பால்கணி, ஓய்வறை, பொழுது போக்கு சாதனங்கள் என்று எல்லா வகைகளிலும் சொகுசான வீட்டைப்போன்றே இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் பெருநிறுவனங்களின் ஆலோசனைக்கூட்டங்கள், விடுமுறைப் பொழுதுபோக்கு, தேனிலவுச்சுற்றுலா போன்ற பலவகையான தேவைகளையும் பூர்த்தி செய்யக்கூடிய விதவிதமான படகுகள் இங்கு வாடகைக்கு கிடைக்கின்றன.

ஓணம் கொண்டாட்டம்
உலகில் வேறெங்குமே பார்க்க முடியாத இந்த படகுவீடுகளை நேரில் பார்த்து அனுபவித்தால் மட்டுமே இவற்றின் அற்புத அம்சங்களை புரிந்துகொள்ளமுடியும். குமரகம் சுற்றுலாதலமானது ஓணம் கொண்டாட்டங்களின்போது இங்கு நடத்தப்படும் படகுப்போட்டிகளுக்காகவும் பிரசித்தி பெற்றுள்ளது.

நீர் சார்ந்த இயற்கை சுற்றுலா
சுற்றுலா வளம் நிரம்பிய குமரகம் பகுதி முழுவதும் ‘விசேட சுற்றுலா மண்டல'மாக கேரள மாநில சுற்றுலாத்துறையால் அறிவிக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. வேம்பநாட் ஏரி, அருவிக்குழி நீர்வீழ்ச்சி, குமரகம் உப்பங்கழி மற்றும் குமரகம் கடற்கரை போன்றவை இங்குள்ள முக்கியமான நீர் சார்ந்த இயற்கை எழில் தலங்களாகும்.

கோவில்கள்
திருநாக்கரா மஹாதேவா கோவில், ஏட்டுமானூர் மஹாதேவா கோவில், செரியபள்ளி செயிண்ட் மேரி தேவாலயம், அதிரம்புழா செயிண்ட் மேரி தேவாலயம் மற்றும் வைக்கம் மஹாதேவா கோவில் போன்றவற்றை இங்குள்ள முக்கிய கோவில்கள் மற்றும் தேவாலயங்களாக குறிப்பிடலாம்.

ஏட்டுமானூர் மஹாதேவா கோவில்
குமரகத்திற்கு அருகிலுள்ள முக்கியமான ஆன்மீகதலமாக இந்த ஏட்டுமானூர் மஹாதேவா கோவில் பிரசித்தி பெற்றுள்ளது. கோட்டயம் நகரிலிருந்து 2 கி.மீ தொலைவில் இந்த கோவில் அமைந்துள்ளது. கேரளாவிலுள்ள மிகப்பழமையான சிவன் கோவில்களில் இதுவும் ஒன்றாகும். பல நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி செல்லும் வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ள இந்த கோவில் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. இந்த கோயிலின் ஆதி கட்டமைப்பானது 1542ம் ஆண்டில் புதுப்பிக்கப்பட்டு தற்போதுள்ள கட்டமைப்பை பெற்றதாக சொல்லப்படுகிறது. இதிலுள்ள சுவரோவியங்கள் மற்றும் அவற்றுள் குறிப்பிடத்தக்க பிரதோஷ நிருத்தம் (சிவ தாண்டவம்) எனும் ஓவியம் ஆகியவை பிரசித்தமாக பேசப்படுகின்றன.

துலாபாரம் எனப்படும் நேர்த்திக்கடன்
நாட்டிலுள்ள மிகச்சிறந்த புராதன சுவரோவியங்களில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன. இந்த கோவில் வளாகத்தில் ஒரு கருவறை, சிவன் சிலை, விநாயகர் மற்றும் சாஸ்தாவுக்கான சன்னதிகள், ஒரு தங்கக்கொடி கம்பம் மற்றும் வெண்கலத்தால் வேயப்பட்ட கூரைகள் ஆகிய அம்சங்கள் நிறைந்துள்ளன. இக்கோயிலில் வருடாந்திரமாக பிப்ரவரி-மார்ச் மாதத்தில் கொண்டாடப்படும் ஆராட்டு திருவிழா மிக முக்கியமான திருவிழாவாக கருதப்படுகிறது. கேரளாவிலுள்ள செல்வம் படைத்த கோவில்களில் ஒன்றாக கருதப்படும் இந்த ஏட்டுமானூர் மஹாதேவா கோயிலில் துலாபாரம் எனப்படும் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஏராளமான பக்தர்கள் விஜயம் செய்வது குறிப்பிடத்தக்கது.

வைக்கம் மஹாதேவா கோவில்
கேரளாவிலுள்ள வரலாற்றுப்பின்னணி கொண்ட முக்கிய புராதன கோவில்களில் ஒன்றாக இந்த வைக்கம் மஹாதேவா கோவில் புகழ்பெற்றுள்ளது. வேம்பநாட் ஏரிக்கரையில் அமைந்துள்ள வைக்கம் நகரில் இந்த கோவில் உள்ளது. சைவ மார்க்கத்தை சேர்ந்தவர்களும் வைணவ மார்க்கத்தை சேர்ந்தவர்களும் சேர்ந்தே வழிபடும் ஒருசில சிவத்தலங்களில் ஒன்றாக இந்த வைக்கம் மஹாதேவா கோவில் விளங்குகிறது.

தீண்டாமை எதிர்ப்பு போராட்டம்
கேரளாவின் வரலாற்றுப்பக்கங்களில் இந்த கோயிலின் பெயர் தங்க எழுத்துக்களால் பொறிக்கப்பட்டு விட்டது எனும் சொல்லும்படியாக, முக்கிய வரலாற்று நிகழ்வான ‘வைக்கம் சத்யாக்கிரகம்' (தீண்டாமை எதிர்ப்பு போராட்டம்) 1924ம் ஆண்டு இந்த கோயிலில் நடந்தேறியது குறிப்பிடத்தக்கது. வருடாவருடம் நவம்பர்-டிசம்பர் மாதத்தில் வைக்கம் அஷ்டமி எனும் திருவிழா சிறப்பாக இக்கோயிலில் கொண்டாடப்படுகிறது. விநாயக்கடவுளின் கற்சிலை மற்றும் நந்தி சிலை ஆகியன இக்கோவில் வளாகத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களாகும். குமரகம் சுற்றுலாத்தலத்திலிருந்து 22 கி.மீ தூரத்திலும், கோட்டயம் நகரத்திலிருந்து 32 கி.மீ தூரத்திலும் உள்ள வைக்கம் மஹாதேவா கோயிலை சாலை மார்க்கமாக எளிதில் சென்றடையலாம்.