» »ஹம்பியில் ஓர் ஆன்மிகச் சுற்றுலா!

ஹம்பியில் ஓர் ஆன்மிகச் சுற்றுலா!

Written By: Sabarish

ஹம்பி என்றாலே நம் நினைவில் வந்து தோன்றுவது புகழ்பெற்ற விஜய நகரின் சிதிலமடைந்த வரலாற்று சின்னங்களும், ஆன்மீகத் தலங்களும், அதைச் சுற்றிலும் காணப்படும் கட்டிடக்கலை அம்சங்களுமே. விஜயநகர சாம்ராஜயத்தின் தலைநகரமாக விளங்கிய இந்த ஹம்பியில் பிரதிபெற்ற தலங்கள் என குறிப்பிட்டு சொன்னால் அது ஆலயக் குவியல்களே. எங்கு காணிணும் வானுயர்ந்த கோட்டைகளும், கோவில்கள் மட்டுமே நம்மை வரவேற்கும் வகையில் இருக்கும். வாருங்கள், ஹம்பியில் ஓர் ஆன்மீகச் சுற்றுலா சென்று வரலாம்.

யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோவில்

யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோவில்


ஹம்பியிலுள்ள புனித தலங்களில் ஒன்று யந்த்ரோதாரகா ஆஞ்சநேயர் கோவில். அனுமான் என்றும் ஆஞ்சநேயர் என்றும் அழைக்கப்படும் கடவுளுக்காக இந்த கோவில் எழுப்பப் பட்டுள்ளது. இந்த கோவில் கோதண்ட ராமர் கோவிலுக்கு பின்புறம் அமைந்துள்ளது. ஹனுமானின் விக்கிரகமானது இங்கு ஒரு யந்திரத்தில் பொதிக்கப்பட்டிருப்பது இந்த கோவிலின் பிரதான சிறப்பாகும். நெருங்கி உற்று பார்த்தால் இந்த யந்திரத்தின் மைய விக்கிரகத்தைச் சுற்றிலும் எண்ணற்ற வானரங்களின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதைக் காண முடியும்.

MADHURANTHAKAN JAGADEESAN

மரத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கம்

மரத்தில் பதிக்கப்பட்ட மாணிக்கம்


இக்கோவிலின் வெளிச்சுவர்கள் பிற இந்துக் கோவில்களைப் போன்று வெள்ளை மற்றும் காவி நிற பட்டைகளால் வண்ணம் பூசப்பட்டுள்ளன. இங்குள்ள புனித மரத்தின் மீது மாணிக்க கற்கள் பதிக்கப்பட்டுள்ளதை காணலாம். இந்த யந்த்ரோதாரகா ஆஞ்சநேயா கோவில் பக்தர்களுக்கு காலையும் மாலையும் திறந்து விடப் படுகிறது.

Snivas1008

யெதுரு பசவண்ணா

யெதுரு பசவண்ணா


ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட யெதுரு பசவண்ணா எனும் நந்தி சிலை ஹம்பி பஜாரின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. புராண நம்பிக்கையின் படி சிவ பெருமானின் வாகனமான நந்திக்கு எழுப்பப்பட்ட சிலை என்பதால் உள்ளூர் மொழியில் யெதுரு பசவண்ணா என்று அழைக்கப்படுகிறது. சற்று சிதிலமடைந்து காணப்படும் இந்த நந்தி சிலை மற்ற புராதன சின்னங்களின் அளவுக்கு சிற்ப வேலைப்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்றாலும் இரண்டு அடுக்குகளை கொண்ட ஒரு பீட அமைப்பின் மீது இந்த நந்தி சிலை அமைக்கப்பட்டுள்ளது. எதிரிலுள்ள விருபாக்ஷ ஆலயத்தை நோக்கி இருக்குமாறு இந்த நந்தி சிலை அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சிலைக்கருகில் இரும்பு ஈட்டிகளுடன் கூடிய ஒரு விளக்கு தூண் ஒன்றும் உள்ளது.

Drmmgir

யானை கூடங்கள்

யானை கூடங்கள்


நேரம் இருப்பின் ஹம்பிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் இங்குள்ள யானைக் கூடத்தை பார்க்கலாம். அக்காலத்து மன்னர்கள் தங்கள் படை மற்றும் போக்குவரத்துக்கு பயன்படுத்திய யானைகளை இந்த மண்டபங்களில் வைத்து பராமரித்தனர். ஹம்பியிலுள்ள பொதுக் கட்டிடங்களிலேயே மிக சிறப்பானது என்று சொல்லும்படியாக இந்தோ-இஸ்லாமிக் கட்டிடக்கலை மரபுப்படி இந்த மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்த அமைப்பானது 11 பிரம்மாண்டமான உயரமான அறைகளை கொண்டுள்ளது. இந்த அறைகளின் மேற்பகுதி குமிழ் வடிவ விதான வடிவமைப்பை கொண்டுள்ளது. கல்லாலும் சுண்ணாம்பாலும் உருவாக்கப்பட்டுள்ள இந்த குமிழ் விதானங்கள் வெவ்வேறு வடிவங்களில் உருவாக்கப்பட்டுள்ளன. மையத்திலுள்ள குமிழ் விதானம் மிகப் பெரியதாக காணப்படுகிறது. இதற்கு கீழே இசைக்குழுவினர் இருந்து முக்கியமான யானைகள் தொடர்பான திருவிழாக்கள் அல்லது சடங்குகளின்போது போது இசைக்கருவிகளை இசைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. இங்கு உள்ளே இருக்கும் கூரைப்பகுதியில் யானைகளை கட்டுவதற்கு பயன்படுத்திய இரும்பு வளையம் உள்ளதை காணலாம். ஒவ்வொரு அறையின் பின்புற மூலையிலும் யானைப் பாகன்கள் பாதுகாப்பாக நுழைவதற்கு சிறியதான தரைவழித் துவார கதவுகள் இருக்கின்றன. இது போன்ற பல நுணுக்கமான விஷயங்கள் சுற்றுலா பயணிகளை பிரமிக்க வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

G41rn8

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்

ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில்


இந்த கோவிலில் விஷ்ணு பஹவானின் அவதாரமான நரசிம்ம கடவுளின் 6.7 மீட்டர் உயரமுள்ள ஒற்றைக்கல் சிலை ஆதிசேஷ பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலிலுள்ள கல்வெட்டுகள் மூலம் இந்த கோவில் கிருஷ்ண தேவராய ஆட்சியின்போது 1528-ஆம் ஆண்டு கட்டப்பட்டதாக தெரிகிறது. ஆதியில் நரசிம்மர் சிலையின் மடியில் லட்சுமி தெய்வத்தின் சிலை இருந்ததாக சொல்லப்படுகிறது. 1565 ஆம் ஆண்டில் உடைக்கப்பட்ட இந்த லட்சுமி சிலை தற்சமயம் கமலாபுரம் மியூசியத்தில் உள்ளது. இருப்பினும் விரிந்த விழிகளுடனும், அவிழ்ந்த கூந்தலுடனும் காட்சியளிக்கும் இந்த மஹாவிஷ்ணுவின் சிலை பக்தர்களிடையே பிரசித்தம். தென்னிந்திய சிற்பிகளின் பாணியிலிருந்து முற்றிலும் மாறுபட்டு சங்கம வம்ச சிற்பிகள் இந்த கோவிலை பளிங்கு கல்லால் கட்டியுள்ளனர். இருப்பினும் கருங்கல்லில் செதுக்குவது போன்று பளிங்கு கல்லில் நுட்பமான சிற்பச் செதுக்கல்களை செய்ய முடியாது என்பதால் அதற்குப்பதிலாக அவர்கள் பிரம்மாண்டமான வடிவங்களை உருவாக்கியுள்ளனர்.

Klaus Nahr

அஞ்சநாத்ரி மலைகள்

அஞ்சநாத்ரி மலைகள்


ராமாயாண புராணத்தின் படி பார்த்தால் இந்த அஞ்சநாத்ரி மலை அனுமன் பிறந்த இடம் என்று நம்பப்படுகிறது. வானரக் கடவுளான அனுமனுக்கென்று இங்கு ஒரு அழகான கோவில் உள்ளது. இந்த கோவில் அஞ்சநாத்ரி மலையின் உச்சியில் உள்ளது. 570 படிகளை ஏறித்தான் மலை உச்சியில் உள்ள இந்த கோவிலுக்கு செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படிகளில் ஏறிச்செல்லும் போது ஏராளமான குரங்குகளை வழியில் பார்க்க முடிகிறது. நாம் அவற்றுக்கு தொல்லை தராதபோது அவை நம்மை தொல்லைப்படுத்துவதில்லை. அனுமன் பக்தர்கள் தவறாமல் தரிசிக்க வேண்டிய இடம் இந்த அஞ்சநாத்ரி மலைக்கோவில் ஆகும்.

Barbaragailblock

உத்தன வீரபத்ரர் ஆலயம்

உத்தன வீரபத்ரர் ஆலயம்


உத்தன வீரபத்ரர் ஆலயத்தில் 3.6 மீட்டர் உயரமுள்ள சிவனின் அவதாரமான உத்தன வீரபத்ரர் கடவுள் சிலை காணப்படுகிறது. இந்த கோவிலில் உள்ள சிவபெருமானின் சிலையானது நான்கு கைகளுடன் வாள், அம்பு, வில், கேடயம் ஆகிய ஆயுதங்களை ஏந்தியபடி காட்சியளிக்கிறார். பக்தர்கள் இங்கு தக்‌ஷனின் சிறிய சிலையையும் சர்வாங்க லிங்கம் என்று அழைக்கபடும் சிவ லிங்கத்தையும் காணலாம். இந்த கோவிலில் புகைப்படம் எடுப்பதற்கு பக்தர்களுக்கு அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Vu2sga

புராணக் கதை

புராணக் கதை


புராண நம்பிக்கையின் படி சிவபெருமான் இந்த மூர்க்கமான உத்தன வீரபத்ர அவதாரமெடுத்து தன் மனைவி சதியின் தகப்பனான தக்‌ஷன் என்றவனை கொன்றழித்ததாக கூறப்படுகிறது. தக்‌ஷன் நடத்திய யாகத்தை தடுக்க சென்ற சதியை அவள் தகப்பனான தக்ஷன் அவமதித்ததால் அவள் தற்கொலை செய்து கொள்ளவே அதற்கு பழி வாங்கும் விதத்தில் சிவ பெருமான் தக்‌ஷனை வதம் செய்ததாக அந்த கதை வழங்கி வருகிறது. இந்த உத்தன வீரபத்ரக் கடவுள் சிவனின் அவதாரங்களில் ஒன்றான ரௌத்திர அவதாரமாக பக்தர்களால் வணங்கப்படுகிறது. ஹம்பியின் பிரதான சாலையிலேயே அரண்மனை வளாகம் மற்றும் புனித வளாகத்துக்கு இடையில் இந்த கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் அருகே ஒரு உயரமான ஒற்றைக்கல் விளக்குத்தூணும் ஒரு சதி கல்வெட்டும் உள்ளது. போரில் இறந்த கணவர்களை முன்னிட்டு உயிர்நீத்த மனைவிகளுக்காக இந்த சதி கல்வெட்டு எழுப்பப்பட்டுள்ளது.

சண்டிகேஸ்வரா கோவிலுக்கு எதிரிலேயே அமைந்துள்ள உத்தன வீர பத்ரர் கோவில் வளாக சுவரை ஒட்டியே ஹம்பியின் பிரதான சாலை செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Ms Sarah Welch

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்