» »ஜகன்மோகினி இல்லைங்க, இது ஜகன்மோகன் அரண்மனை..! எங்க இருக்கு தெரியுமா?

ஜகன்மோகினி இல்லைங்க, இது ஜகன்மோகன் அரண்மனை..! எங்க இருக்கு தெரியுமா?

Written By:

நம் எல்லாருக்குமே ஜகன்மோகினி குறித்து நன்றாகவே தெரியும். மாயாஜாலங்கள் அறிந்த மந்திரப் பேய், உடல் முழுவதும் வெண்மை நிறத்தில் கால்களிலயே விறகு எரிக்கும் மோகினி. ஆனால், இன்று நாம் பார்க்கப்போவது ஜகன்மோகினி குறித்து அல்ல, ஜகன் மோகன் அரண்மனை குறித்தது. கர்நாடக மாநிலத்தின் இரண்டாவது பெரிய நகரமான மைசூரில்தான் இந்த மனதை மயக்கும் அரண்மனை அமைந்துள்ளது. மைசூர் வரும் சுற்றுலா பயணிகள் இந்த நகரின் பழமை வாய்ந்த கட்டிடங்களின் ஒன்றான ஜகன்மோகன் அரண்மனையை பார்க்காமல் திரும்புவதில்லை. மைசூரை ஆண்ட மன்னர்களால் 1861ல் கட்டப்பட்ட இந்த அரண்மனையில் ராஜ குடும்பத்தினர் 1897-ல் வசித்ததாக சொல்லப்படுகிறது. சரி வாருங்கள். தொடர்ந்து, அந்த அரண்மனையில் என்னவெல்லாம் உள்ளது ? எப்படிச் செல்வது உள்ளிட்ட மேலும் பல தகவல்களுடன் சுற்றிப்பார்ப்போம்.

ஜகன்மோகன் அரண்மனை

ஜகன்மோகன் அரண்மனை


மைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகளால் பெரிதும் ஈர்க்கப்படும் அரண்மனைகளில் ஒன்று ஜகன்மோகன் அரண்மனை. நான்காம் கிருஷ்ண ராஜ உடையார் திருமணத்தின் போது அமைக்கப்பட்ட திருமண விதானங்கள் பயணிகளுக்கு பெரிதும் விருப்பமான பகுதியாகும். தர்பார் ஹால் என்று அழைக்கப்படும் இந்த விதானத்தில்தான் நான்காம் கிருஷ்ணராஜ உடையார் தன் பிறந்த நாள் விழாக்களை விமரிசையாக கொண்டாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அரண்மனையின் விசாலமான அரங்குகள் இசை விழாக்கள், நாடகம் போன்ற இதர கலை நிகழ்ச்சிகள் மற்றும் மைசூர் பலகலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாக்கள் போன்றவற்றிற்கு பயன்படுத்தப்பட்டன. தற்சமயம் இந்த அரங்குகள் கலை நிகழ்ச்சிகளுக்கும் தசராவின்போது நடத்தப்படும் மாநாடுகளுக்கும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

சிறப்பு

ஜகன்மோகன் அரண்மனையில் உள்ள விஷ்ணுவின் தசாவதார காட்சியை சிற்ப வடிவமாய் செதுக்கப்பட்டுள்ள இரண்டு பெரிய மரக்கதவுகளும், மைசூர் மஹாராஜாக்களின் ஓவியங்களும் அவர்கள் பயன்படுத்திய கலைப்பொருட்களும் தவறாமல் பார்த்து ரசிக்க வேண்டியவற்றில் ஒன்றாகும்.

நுழைவுக் கட்டணம்

பெரியவர்களுக்கு 20 ரூபாயும், சிறுவர்களுக்கு 10 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது.

பார்வை நேரம்

வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை அரண்மனையின் கதவு திறக்கப்பட்டிருக்கும்.

செலவிடும் நேரம்

சராசரியாக 2 முதல் 3 மணி நேரம் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள்

வருடத்தின் பிற நாட்களில் உள்ளூர் பயணிகள், அயல் நாட்டு சுற்றுலாப் பயணிகள் என பல ஆயிரம் பேர் வந்தாலும், கோடை கால விடுமுறையின் போது ஜகன்மோகன் அரண்மனையில் கூட்டம் சற்று அதிகமாகவே இருக்கும்.

எப்போது செல்லலாம் ?

மாநிலத்தின் பிற பகுதிகளில் கோடை வெயில் வாட்டினாலும், வருடந்தோறும் மைசூரில் மிதமான வெப்ப நிலையே இருக்கும்.

எப்படிச் செல்லலாம் ?

சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் இருந்தும் மைசூரு நல்ல முறையில் இணைக்கப்பட்டுள்ளது. சாலை மார்க்கமாகவும், ரயில், விமான சேவைகள் மூலமாகவும் எளிதில் மைசூரை அடையலாம்.

சுற்றுலா டிப்ஸ்

ஜகன்மோகன் அரண்மனை அமைந்துள்ள மைசூரில் என்னற்ற கோட்டைகளும், சுற்றுலாத் தலங்களும் நிறைந்து காணப்படுகின்றன. ஜகன்மோகன் அரண்மணையில் இருந்தே ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் பயணம் மேற்கொள்வதாக இருந்தால் ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன், ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி, ஹேப்பி மேன் பார்க், லலிதா மஹால் உள்ளிட்டவை சிறந்த சுற்றுலாத் தலங்களாகும்.

Vedamurthy.j

ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன்

ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன்


மைசூர் நகரத்தில் உள்ள தொன்மை வாய்ந்த கட்டிடங்களில் ஒன்று ஜயலட்சுமி விலாஸ் மேன்ஷன் ஆகும். இந்த மாளிகை குக்கரஹள்ளி ஏரியின் மேற்குப்பகுதியில் ஒரு சிறு குன்றின் மீது அமைந்துள்ளது. மானசகங்கோத்ரி என்றழைக்கப்படும் பசுமை மிகுந்த மைசூர் பல்கலைக்கழக வளாகம் இந்த மாளிகையை சூழ்ந்து வனப்புடன் காணப்படுகிறது. நான்காம் கிருஷ்ணராஜ உடையார் காலத்தில் 1905 ஆண்டு மஹாராஜா சாமராஜா உடையார் மகளான இளவரசி ஜயலட்சுமி அம்மணிக்காக இந்த மாளிகை கட்டப்பட்டுள்ளது. ஆறு ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த புத்துருவாக்கம் செய்யப்பட்ட தொன்மையான மாளிகைக்கு இரு புறமும் வாயில்கள் உள்ளன. இந்த மாளிகையில் 300 ஜன்னல்களும், 127 அறைகளும், 287 அலங்கார வேலைப்பாடு கொண்ட கதவுகளும் உள்ளன. இந்த மாளிகை மரம், இரும்பு, செங்கல் மற்றும் சுண்ணாம்பு குழம்பு ஆகியவற்றை கொண்டு கட்டப்பட்டுள்ளது.

Pratheepps

ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி

ரீஜனல் மியூசியம் ஆப் நேச்சுரல் ஹிஸ்டரி


மைசூருக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் கண்டிப்பாக இந்த பிராந்திய அருங்காட்சியகத்தை பார்க்கும் படியாக அறிவுறுத்தப்படுகிறார்கள். சாமுண்டி மலையடிவாரத்தில் கரன் ஜி ஏரிக்கரையின் மீது இந்த மியூசியம் அமைந்துள்ளது. 1995ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் இயற்கை அன்னைக்கென்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம் தென்னிந்தியாவிற்கு சொந்தமான அற்புத மலர்கள், தாவரங்கள் மற்றும் அவற்றின் மகிமைகள், விலங்குகள் மற்றும் புவியியல் தாது பொக்கிஷங்கள் போன்றவை குறித்த தகவல்களை வழங்குகிறது என்பது குறிப்பிடத் தக்கது.இங்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை சுற்றுச் சூழல், பிராணிகள் மற்றும் தாவரங்களிடையே உள்ள சமச்சீர் உறவு போன்ற இயற்கை சார்ந்த அறிவியல் உண்மைகளை மிக எளிமையாக தெரிந்து கொள்ளலாம். மேலும் இயற்கை சூழலியல், உயிரியல் பன்முகத்தன்மை, உயிரியல் பரிணாம வளர்ச்சி, இயற்கை பாதுகாப்பு போன்ற இயற்கை அறிவியல் சார்ந்த கருத்துகள் பற்றிய அறிவை இங்கு பெறலாம். கருத்து விளக்கத்துக்கு உதவும் மாதிரி படைப்புகள், கருவிகள் போன்ற பல அம்சங்கள் இந்த மியூசியத்தில் இடம் பெற்றுள்ளன. இந்த மியூசியத்தை பார்வையிடுவதற்கு பொது மக்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மியூசியம் திறக்கப்பட்டிருக்கும்.

Bikashrd

ஹேப்பி மேன் பார்க்

ஹேப்பி மேன் பார்க்


மைசூர் வரும் பயணிகள் நேரம் இருந்தால் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் இதுவும் ஒன்று. குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெற்றோரும் விரும்பும் அளவுக்கு இந்த பூங்கா காணப்படுகிறது. இந்த சிறிய பூங்காவில் ஒரு வன விலங்கு காப்பகம் உள்ளது. இங்குள்ள மரப்பாலத்தில் நடந்தபடியே அருகிலுள்ள ஒரு சிறிய ஓடையையும், வாத்துகளையும், கோழிகளையும் பார்த்து ரசிக்கலாம். இந்த பூங்காவின் முக்கியமான அம்சம் இங்குள்ள ஹேப்பி மேன் சிலையாகும். மனதை மயக்கும் மென்மையான இசை இந்த பூங்காவின் பின்னணியில் ஒலிப்பது ஒரு இனிமையான அனுபவமாகும். நடைப்பயிற்சி செல்ல விரும்புகிறவர்களுக்கு ஏற்ற இந்த பூங்கா காலை 4.30 மணியிலிருந்து 9 மணி வரை திறந்து வைக்கப்படுகிறது.

Prof tpms

லலிதா மஹால்

லலிதா மஹால்


மைசூருக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகள் தவறாமல் பார்க்க வேண்டிய மற்றுமொரு தொன்மை வாய்ந்த பாரம்பரிய கட்டிடம் இந்த லலிதா மஹால் ஆகும். இது சாமுண்டி மலையின் மீது அமைந்துள்ளது. இந்த மாளிகை 1921 ஆம் ஆண்டு மஹாராஜா நான்காம் கிருஷ்ணராஜ உடையாரால் அப்போதைய இந்திய வைஸிராய்க்காக கட்டப்பட்டதாகும். இந்த மாளிகை நவீன பாணியையும் ஆங்கிலேய மெனார் பாணியையும் இத்தாலியன் பலாஸோ கட்டிட முறையையும் கலந்து கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த மாளிகை இந்திய அரசாங்கத்தின் சுற்றுலாத் துறையின் மூலம் ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலாக மாற்றப்பட்டுள்ளது. இந்த மாளிகையின் அரச பரம்பரை வரலாற்றுக்கேற்ப அதிலுள்ள இப்போதைய ஐந்து நட்சத்திர ஹோட்டல் விருந்தினர்களை பாரம்பரிய பாணியில் உபசரித்து சேவைகளை வழங்குகிறது. இந்த மாளிகை ஒரு ஹோட்டலாக மாற்றப்பட்ட போதிலும் பழைய அரண்மனை தோற்றத்தில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பழைய தொன்மையான ஓவியங்கள், இருக்கைகள் போன்றவற்றை அப்படியே பயன்படுத்தியிருந்தாலும் விருந்தினர் சௌகரியங்களை கருதி நவீன சாதனங்களும் இப்போதைய ஹோட்டலில் அதன் இயல்பு கெடாமல் இடம் பெற்றுள்ளன.

Bikashrd

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்