» »நம்ம ஊரு சென்னையில இப்படியெல்லாம் கோவில் இருக்கா ? என்ன அதுன்னு வாங்க பாக்கலாம்...

நம்ம ஊரு சென்னையில இப்படியெல்லாம் கோவில் இருக்கா ? என்ன அதுன்னு வாங்க பாக்கலாம்...

Posted By: Sabarish

PC : Rasnaboy

சோழமண்டல கடற்கரையில் அமைந்திருக்கும் சென்னை, தமிழ் நாட்டின் கலாசார மற்றும் வர்த்தகத் துறையின் முக்கிய கேந்திரமாக திகழ்கிறது. இந்தியாவின் நான்கு பெரும் நகரங்களில் ஒன்றான இது, நிகழ் காலத்தின் நவீனத்தன்மையினையும், பழம்பெருமை வாய்ந்த தன் கலாச்சார அடையாளத்தினையும் தன்னுள் கொண்டுள்ளதால் சென்னை தென் இந்தியாவின் கலாச்சார தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இதை ஒரு நகரம் என்ற ஒற்றை வார்த்தையில் சொல்வதை விட தமிழகத்தின் கூட்டு அடையாளம் என பெருமையுடனும் கூறலாம்.

இத்தனை பெருமை வாய்ந்த சென்னையில் கலைநயம் வாய்ந்த கோவில்களும் ஏராளமாக உள்ளன. வாருங்கள் நம்ம சென்னையில் உள்ள ஐந்து அழகிய கோவில்களுக்கு சென்று வருவோம்.

கபாலீஸ்வரர் கோவில்

கபாலீஸ்வரர் கோவில்

PC : Nsmohan

மயிலாப்பூரில் அமைந்திருக்கும் கபாலீஸ்வரர் கோவில் பற்றிய குறிப்புகள் 7ஆம் நூற்றாண்டில் பாடப்பட்ட தேவாரத்தில் கிடைக்கப்பெறுகின்றன. இங்கு சிவபெருமான் கபாலீஸ்வரராகவும், பார்வதி தேவி கற்பகாம்பாளாக வீற்றிருகின்றனர். இக்கோவில் பல்லவர்களால் 7ஆம் நூற்றாண்டில் கடற்கரையோரத்தில் கட்டப்பட்டதாகவும் ஆனால் போர்த்துகிசியர்களால் அக்கோவில் அழிக்கப்பட்டதால் 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர மன்னர்களால் தற்போதுள்ள கோவில் கட்டப்பட்டதாகவும் கூறுகின்றனர். அழகிய வேலைப்பாடுகள் நிறைந்த இக்கோவில் திராவிட கட்டிடக்கலையின் சிறப்பான அடையாளங்களில் ஒன்றாக திகழ்கிறது.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

PC : Gsnewid

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மயிலாப்பூருக்கு மாநகர பேருந்து வசதிகளும், தனியார் டாக்சிகளும் ஏராளமாக உள்ளன. ரயில் நிலையத்தில் இருந்து மேரினா கடற்கரை சாலை- கடற்கரை விளக்கு வந்து கச்சேரி சாலை வழியாக மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலை அடையலாம்.

அஷ்டலட்சுமி கோவில்

அஷ்டலட்சுமி கோவில்

PC : Summer yellow

செல்வத்தின் கடவுளான லக்ஷ்மி தேவியின் அஷ்ட வடிவங்களை கொண்டுள்ள இக்கோவில் சென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ளது. மஹாலஷ்மிக்கு என்று தமிழ் நாட்டில் இருக்கும் ஒரே கோவிலான இதன் நுழைவு வாயில் மஹாலக்ஷ்மி கடலில் இருந்து அவதரித்ததாக நம்பப்படுவதால் கடலினை பார்த்தபடி அமைக்கப்பட்டுள்ளது. நான்கு அடுக்குகளைக் கொண்டுள்ள இக்கோவிலில் எட்டு அவதார வடிவங்களும் வெவ்வேறு பிரிவுகளில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. தனம், தான்யம், கஜம், சந்தானம், வீரம், விஜயம், வித்யா போன்ற பாக்கியங்களை அருளும் இந்த லட்சுமி அவதாரங்களை ஒருசேர வணங்குவது விசேஷமான ஐதீகமாக பக்தர்களால கருதப்படுகிறது.

எப்படிச் செல்வது ?

எப்படிச் செல்வது ?

Map

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 14 கிலோ மீட்டர் கடற்கரை சாலை வழியாக பயணித்தால் இந்த அஷ்டலட்சுமி கோவிலை அடையலாம். அல்லது, மவுன்ட் ரோடு வழியாக 17 கிலோ மீட்டர், மயிலாப்பூர் வழியாக 15 கிலோ மீட்டர் பயணித்தாலும் அஷ்டலட்சுமி கோவிலை அடைய முடியும்.

பார்த்தசாரதி கோவில்

பார்த்தசாரதி கோவில்

PC : Nsmohan

8-ஆம் நூற்றாண்டில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்டு பின்னர் சோழர்கள் மற்றும் விஜயநகர பேரரசர்களால் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது இக்கோவில். கிருஷ்ண பெருமானை மூலவராக கொண்டுள்ள இக்கோவில் ஆழ்வார்களால் பாடப்பட்ட வைணவ திவ்ய ஸ்தலங்களுள் ஒன்றாகும். மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனன் தேரோட்டியாக (சாரதி) இருந்த கிருஷ்ண பகவானின் கோவிலான இதனுள் மகா விஷ்ணுவின் அவதாரங்களான ராமர், நரசிம்மர் ஆகிய கடவுள்களின் சந்நிதிகளும் உள்ளன. சித்திரை மாதம் நடக்கும் பிரம்மோத்சவம் இக்கோவிலின் முக்கிய திருவிழாவாகும். இக்கோவில் குளத்தின் பெயர் 'திரு அல்லி கேணி' என்று இருந்ததாகவும் அதுவே மறுவி இன்று திருவல்லிக்கேணி என அழைக்கப்படுகிறது. சென்னையின் மிகப்பழமையான கோவில்களில் ஒன்றான இது நிச்சயம் சென்று வர வேண்டிய ஓரிடமாகும்.

எப்படிச் செல்லலாம் ?

எப்படிச் செல்லலாம் ?

PC : Destination8infinity

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து, சென்னை பல்கலைக் கழக சாலை வழியாக சுமார் 5 கிலோ மீட்டர் பயணித்தால் கடற்கரை சாலையோரம் அமைந்துள்ள பார்த்தசாரதி கோவிலை அடையலாம். திருவள்ளிக்கேணி ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 350 மீட்டர் தொலைவில்தான் இக்கோவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நவகிரஹ கோவில்கள்

நவகிரஹ கோவில்கள்

PC : Chithiraiyan

சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டிருக்கும் இக்கோவில்கள் சென்னையின் புற நகர் பகுதியில் அமைந்திருக்கின்றன. நவகிரஹங்கலயும் வழிபட கும்பகோணம் வரை செல்ல வேண்டி இருந்ததால் இக்கோவில்கள் சென்னையில் உள்ள குன்றத்தூர் பகுதியை சுற்றி கட்டப்பட்டுள்ளன. சோழர் கட்டிடக்கலையின் அற்புதங்களை இக்கோவில்கள் தாங்கி நின்றலும் சில கோவில்கள் முறையான பராமரிப்பின்றி சிதலமடைந்து வருகின்றன.

குன்றத்தூர்

குன்றத்தூர்

PC : L.vivian.richard

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இவிஆர் சாலை வழியாக புள்ளபுரம், வேலூர் - சென்னை மாநில நெடுஞ்சாலை 14-யில் சுமார் 26 கிலோ மீட்டர் பயணிக்க வேண்டும். மதுரவாயில், காட்டுப்பாக்கம், மாங்காடு வழியாக குன்றத்தூரை அடையலாம்.

காளிகாம்பாள் கோவில்

காளிகாம்பாள் கோவில்

PC : Rasnaboy

சென்னையின் பரபரப்பான பகுதிகளில் ஒன்றான பாரிஸ் கார்னரில் உள்ள தம்பு செட்டி தெருவில் அமைந்திருக்கும் இக்கோவிலில் காளிகாம்பாள் அம்மன் முதற்கடவுளாக வீற்றிருக்கிறார். இக்கோவில் ஸ்தல புராணப்படி இங்கு அம்மனை முதலில் மிகவும் உக்கிரமான காமாட்சி ரூபத்தில் வழிபடபட்டதாகவும் ஆனால் அந்த ரூபத்தின் உக்கிரம் மிக அதிகமாக இருந்ததால் சாந்த ஸ்வரூபிணியான காளிகாம்பாள் ரூபத்தை வழிபட துவங்கியிருக்கின்றனர் . தற்போதிருக்கும் கோவிலுக்கு முன்னர் ஒரு கோவில் இருந்ததாகவும் அது போர்த்துகீசியர்களால் சிதைக்கப்பட்டதால் 1640ஆம் ஆண்டு தற்போதிருக்கும் கோவில் கட்டப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

சென்ட்ரல் - பாரிஸ் கார்னர்

சென்ட்ரல் - பாரிஸ் கார்னர்

PC : L.vivian.richard

சென்னை செட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருத்தணி நெடுஞ்சாலையில் சென்று பின் ராசப்பா செட்டி சாலையில் பயணிக்க வேண்டும். தமிழ் இசைச் சங்கம், சென்னை சட்டக் கல்லூரி கடந்து சுபாஷ் சந்திரபோஸ் சாலை வழியாக மோத்தம் 2.5 கிலோ மீட்டர் சென்றால் பாரிஸ் கார்னரில் உள்ள காளிகாம்பாள் கோவிலை அடையலாம்.