» »உங்களை வியக்கச்செய்யும் சிங்காரச் சென்னை அந்த காலத்திலேயே அப்படி இருந்துருக்கு பாருங்களேன்!

உங்களை வியக்கச்செய்யும் சிங்காரச் சென்னை அந்த காலத்திலேயே அப்படி இருந்துருக்கு பாருங்களேன்!

Posted By: Udhaya

சிங்காரச் சென்னை என்றாலே ஏதோ அற்புதத்தை கையில் தந்து பார்க்கச்சொன்னது போல நமக்குள் ஒரு உணர்வு. தமிழகத்தின் மற்ற நகரங்களெல்லாம் அங்கு பிறந்தவர்களுக்கு மட்டும்தான் பெருமையாகத் தோன்றும். ஆனால் நம் சிங்காரச் சென்னை வந்தாரை வாழவைக்கும் என்பதாலோ தெரியவில்லை தமிழனுடன் மலையாளி, தெலுங்கு, கன்னட, இந்தி மொழி பேசுபவர்கள்கூட சென்னையை அதிகம் நேசிக்கின்றனர்.

அப்படிப்பட்ட சென்னை 50 வருடங்களுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று யாராவது யோசித்திருக்கிறீர்களா? அந்த மாதிரியான சென்னை நம் கண்களுக்கு பழைய திரைப்படங்களின்மூலம் சிலசமயம் எட்டலாம். ஆனால் நூறு, இருநூறு வருடங்களுக்கு முன்பிருந்த சென்னையை உங்கள் கண்முன் கொண்டுவந்தால் என்ன செய்வீர்கள். இப்போதுள்ள புகைப்படத்துடன், அப்போதுள்ளதையும் ஒப்பிட்டு பார்ப்பீர்கள்தானே. சும்மா சொல்லிவிடக்கூடாதுங்க.. உண்மையில் சென்னை இத்தனை வருடங்களில் எப்படி வளர்ந்திருக்கிறது என்று உங்கள் கண்ணில் தெரிந்துவிடும். இந்த புகைப்படங்களைப் பார்த்தீர்களென்றால்.

 மதராஸ் ஹார்பர்

மதராஸ் ஹார்பர்

கனவுகளை சுமந்தபடி வேர்களிடமும் உறவுகளிடமும் சொல்லிவிட்டோ, சொல்லாமலோ புறப்பட்டு ரயிலிலும், பஸ்ஸிலும், லாரியிலும் பயணித்து வந்திறங்கிய எண்ணற்ற வேட்கை மனங்களின் கனவுகளை தாமதமாகவேனும் நிறைவேற்றி வைத்த அதிசய நகரம் இது. சென்னை என்பது பலருக்கு நகரம் அல்ல - அது கனவுகளின் கருத்துருவம், வெற்றிக்கான ஆடுகளம், வாழ்க்கைக்கான பிடிமானம், சுதந்திரத்தை அளித்திட்ட ஒரு புகலிடம் - இப்படித்தான் கடந்த அரை நூற்றாண்டு காலமாக தமிழ்நாட்டு மக்களின் வாழ்வோடு, உணர்வோடு கலந்து வீற்றிருக்கிறது இந்த மெட்ராஸ் அல்லது சென்னை நகரம்.

படகு

படகு


புதிய நூற்றாண்டு மற்றும் புத்தாயிரத்தின் துவக்கத்திலிருந்து (2000) இன்னும் பிரம்மாண்டமாக தன் எல்லைகளை நாள்தோறும் விரித்தபடி பல துறைகளிலும் தடம் பதித்து நிற்கும் நவீன நகரமாக இது ஒளிர்கிறது. இந்தியாவின் முக்கிய மாநகரங்களில் ஒன்றான சென்னை நகரம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவின் கலாச்சார கேந்திரமாக சுதந்திர காலம் தொட்டு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தலைநகரமாக இருந்தாலும் கேரள, தெலுங்கு மற்றும் கன்னட பாரம்பரியங்களும் இங்கு கலந்திருப்பதை ஒரு அற்புதமான தேசிய வரலாற்று பரிமாணம் எனலாம்.

சிட்டி ஹார்பர்

சிட்டி ஹார்பர்


1910ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். ஒருகாலத்தில் டெல்லிவாசிகள் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு பேசும் யாவரையும் ‘மதராஸி' என்றே விளிக்கும் ஒரு காலமும் இருந்திருக்கிறது. திருவனந்தபுரமும், பெங்களூரும், ஹைதராபாத்தும் தான் அண்டை மாநிலங்களின் தலைநகரங்கள் என்றாலும் அம்மாநிலங்களை சேர்ந்த ஒருசாராருக்கு மனதளவில் சென்னைதான் தலைநகரமாக விளங்கிவருகிறது என்பதும் மறுக்க முடியாத ஒரு உண்மை. கொரமாண்டல் எனப்படும் சோழமண்டலக் கடற்கரையில் வங்காளவிரிகுடாவை ஒட்டி சென்னை நகரம் அமைந்துள்ளது.

சென்ட்ரல் ரயில் நிலையம்

சென்ட்ரல் ரயில் நிலையம்


இது 1925ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படமாகும். 400 வருட வரலாற்றை கொண்டுள்ள இந்நகரம் தற்போது உலகில் பெரிய மெட்ரோபாலிடன் நகரங்களில் 36வது இடத்தை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்றுப்பின்னணி இந்நகரத்தின் ஆதி வரலாற்றை நோக்கினால் இது தமிழ்நாட்டின் தொண்டை மண்டல ராஜ்ஜியத்தில் இடம் பெற்றிருந்திருக்கிறது. காலனிய ஆட்சிக்காலத்தின்போது ஒரு மாநகரமாக மாறுவதற்கு முற்காலத்திலேயே இப்பகுதியில் திருவான்மியூர், திருவொற்றியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி போன்ற ஊர்கள் ஆன்மீக திருத்தலங்களாக கீர்த்தியுடன் விளங்கியிருக்கின்றன.

சென்னையின் பழைய புகைப்படம்

சென்னையின் பழைய புகைப்படம்

நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களால் இந்த ஸ்தலங்கள் பாடப்பட்டுள்ளன. பண்டைய ஆட்சி என்று காலத்தின் ஊடே பின்னோக்கி பார்த்தால் சென்னைப்பிரதேசமானது தொண்டை நாட்டின் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது. ஆதியில் தொண்டை நாட்டு மன்னர்கள் சோழ ராஜ வம்சத்தின் பிரதிநிதிகளாக இப்பகுதியை ஆண்டு வந்துள்ளனர். இரண்டாம் நூற்றாண்டில் தொண்டைமான் இளந்திரையன் எனும் கீர்த்தி பெற்ற மன்னர் இப்பகுதியை ஆண்டுள்ளார். அவருக்கு பிறகு இளம் கிள்ளி எனும் சோழ மன்னரின் ஆட்சிக்குள் இருந்து பின்னர் சாதவாஹனர்களின் ஆளுகைக்குள் தொண்டை மண்டலம் சென்றிருக்கிறது.

பர்ஸ்ட் லைன் பீச்

பர்ஸ்ட் லைன் பீச்

1915ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம். அவர்களின் பிரதிநிதிகளாக முதலில் ஆளத்துவங்கிய பல்லவ வம்சம் பின்னர் தமிழ்ப்பகுதியின் முக்கியமான ராஜ வம்சமாக பரிணமித்தது. பல்லவ வம்சத்தினர் 3ம் நூற்றாண்டு தொடங்கி 9ம் நூற்றாண்டு வரை இப்பகுதியை ஆண்டுள்ளனர். 9ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆதித்ய சோழர் பல்லவர்களை வென்று சோழர் ஆட்சியை இப்பகுதியில் ஏற்படுத்தினார். பின்னர் 13ம் நூற்றாண்டில் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் எனும் பாண்டிய மன்னர் சோழ வம்சத்தை வென்றபோது பாண்டியர் ஆட்சியின் கீழும் இப்பகுதி இருந்துள்ளது.

மெரினா பீச்

மெரினா பீச்

1890ல் எடுக்கப்பட்ட படம் இதுவாகும். அரை நூற்றாண்டளவிலான மிகக்குறுகிய காலத்திற்கே நீடித்த பாண்டிய ஆட்சிக்குப்பின் டெல்லி கில்ஜி சுல்தான்களின் பிரதிநிதிகளாக பாமினி அரசர்கள் சிறிது காலம் இப்பகுதியை ஆண்டுள்ளனர். அவர்களுக்கு பின்னர் 14ம் நூற்றாண்டில் விஜயநகர வம்சத்தினர் கடைசியாக தொண்டை மண்டலத்தை தங்கள் ராஜ்ஜியத்தில் இணைத்துக்கொண்டனர். மேற்சொன்ன வரலாறு யாவுமே சென்னை நகரத்தின் அமைந்திருக்கும் பிரதேசம் குறித்த ஆதி வரலாறே தவிர அந்நாளில் இப்போதிருக்கும் சென்னை எனும் நகரமைப்பு இருந்திருக்கவில்லை. இப்பிரதேசத்தின் முக்கிய நகராக காஞ்சி திகழ்ந்திருக்கிறது. மாமல்லபுரம் இருந்திருக்கிறது. இருப்பினும் இன்றிருக்கும் விசாலமான சென்னை அன்றில்லை.

 பாரிஸ் கார்னர்

பாரிஸ் கார்னர்


1890ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். இந்த சென்னை எனும் மாநகரத்திற்கான அடிக்கல் ஆங்கிலேயர்கள் இப்பகுதிக்கு கிழக்கிந்திய கம்பெனி எனும் பெயருடன் வியாபாரம் செய்ய வந்திறங்கியபோது நாட்டப்பட்டது. இந்த நிகழ்வு 1639 ஆண்டில் அதாவது 17ம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கிறது. இருப்பினும் இதற்கு முன்பே ஐரோப்பியர்களின் ‘சென்னை வருகை' நிகழ்ந்துவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. அதாவது, 1522ம் ஆண்டிலேயே போர்த்துகீசியர்கள் இங்கு வந்திறங்கிவிட்டனர். முதலாம் நூற்றாண்டிலேயே இங்கு வருகை தந்து பரங்கிமலையில் மரித்ததாக சொல்லப்படும் கிறித்துவின் சீடராகிய புனித தோமா எனப்படும் தாமஸ் குருவின் பெயரால் அவர்கள் ஒரு தேவாலயத்தையும் எழுப்பியுள்ளனர்.

மைலாப்பூர்

மைலாப்பூர்


1906ம் ஆண்டு எடுக்கப்பட்ட மைலாப்பூர் படம் இதுவாகும். சென்னைக்கு வடக்கே புலிகாட் கடற்கரைப்பகுதியில் போர்த்துகீசியர் தங்கள் குடியிருப்புகளையும் உருவாக்கினர். இது பின்னர் டச்சுக்காரர்கள் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. ஆங்கிலேயர்கள் துவக்கத்தில் விஜய நகர நாயக்க வம்ச அரசர்களிடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடற்கரையை ஒட்டிய மதராசப்பட்டிணம் எனும் மீனவக்குப்பத்தினை தங்களது துறைமுக வசதிகளுக்காகவும் குடியிருப்பிற்காகவும் பெற்றுக்கொண்டு இன்றும் வீற்றிருக்கும் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையை எழுப்பிக்கொண்டுள்ளனர்.

பைகிராப்ட் சாலை

பைகிராப்ட் சாலை

1890ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். நிர்மாணிக்கப்பட்ட காலத்திலிருந்து இந்தியாவை விட்டு புறப்படும் வரை இந்த கோட்டை ஒரு ஆங்கிலேய குடியிருப்பாகவும் ராணுவக்கேந்திரமாகவும் ஆட்சிக்கேந்திரமாகவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. கோட்டையின் பின்புறத்தில் புராதனமாக காட்சியளிக்கும் கட்டிடங்கள் குதிரை லாயங்கள், அகழி போன்றவை காலனிய ஆதிக்கத்தின் சான்றுகளாக இன்றும் வீற்றிருக்கின்றன. காலனிய ஆட்சியின்போது இன்றைய சென்னையின் முக்கிய அங்கங்களான வேப்பேரி, திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், எக்மோர், சேத்துப்பட்டு போன்ற கிராமங்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து ஒரு மாகரமாக உருமாறத்துவங்கின. மதராசப்பட்டணத்துக்கு அருகிலேயே சென்னப்பட்டணா என்ற கிராமமும் இருந்தது.

மைவ்பீரே சாலை

மைவ்பீரே சாலை

1885 ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். அதன் அடிப்படையில்தான் இந்த நகருக்கு சென்னை எனும் புதிய பெயர் அரசாங்கத்தால் 1996ம் ஆண்டில் வழங்கப்பட்டிருக்கிறது. மெட்ராஸ் என்றே அதுநாள் வரை இந்நகரம் தமிழ் மக்களின் கனவோடும் உணர்வோடும் கலந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் பலருக்கு சென்னை நகரம் என்பது ‘மெட்ராஸ்'தான். தென்னிந்தியாவின் கலாச்சாரக்கேந்திரம் கலை மற்றும் கைவினைப்பாரம்பரியம், இசை மற்றும் நடனம் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய எல்லா கலையம்சங்களும் சென்னை மாநகரத்தில் தழைத்தோங்கி வளர்ந்துள்ளன. குறிப்பாக கர்நாடக இசை மரபு சென்னையின் ஒரு முக்கிய கலாச்சார அடையாளமாகவும் அங்கமாகவும் பரிணமித்துள்ளது.

மவுண்ட் சாலை

மவுண்ட் சாலை

1905ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். சங்கீத சீசன் எனப்படும் டிசம்பர் மாதத்தில் இங்குள்ள இசைஅரங்குகள் மற்றும் சபாக்களில் சென்னை மற்றும் தென்னிந்தியாவின் எல்லா பிரபல மற்றும் வளரும் கலைஞர்களின் நேரடி இசை நிகழ்ச்சிகளை கண்டும் கேட்டும் ரசிக்கலாம். புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் இக்காலத்தில் கர்நாடக இசைப்பாரம்பரியத்தை ரசித்து ருசிக்க சென்னையை முற்றுகையிடுகின்றனர். கிறிஸ்துமஸ் காலம் என்பதோடு நகரின் சீதோஷ்ண நிலையும் இதமாக இனிமையாக இருக்கும் என்பதால் டிசம்பர் மாதத்திய சென்னை மாநகரம் மிகவும் விரும்பத்தக்கதாக இருக்கும். இனிமையான கிறிஸ்துமஸ் கரோல் இசை கீதங்களும் டிசம்பர் மாதத்தில் சென்னை நகரமெங்கும் இசைக்கப்படுவதை காணமுடியும்.

ஜார்ஜ் டவுன்

ஜார்ஜ் டவுன்

1800ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படம். பரதக்கலை அல்லது பரத நாட்டியம் எனப்படும் நடன வடிவமும் சென்னை நகரின் அடையாளமாக வளர்ச்சி பெற்றுள்ளது. இந்தியாவின் பழமையான நடன வடிவங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. உலகளாவிய அளவில் இன்று பரதநாட்டியம் அறியப்படுகிறது என்றால் அதற்குக்காரணம் சென்னை மாநகரத்தில் உதித்த உன்னதமான கலைஞர்கள் மற்றும் அவர்களது முயற்சிகள்தான் என்பதில் ஐயத்திற்கே இடமில்லை.

ரிப்பன் பில்டிங்க்

ரிப்பன் பில்டிங்க்

1900ம் ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த படம். சென்னையில் பரதக்கலைக்கான பாரம்பரிய மையமாக ருக்மணி அருண்டேல் அவர்களால் துவங்கப்பட்ட கலாஷேத்ரா பரதக்கல்விக்கூடம் வீற்றுள்ளது. கலாஷேத்ரா பாரம்பரியத்தின் விழுதுகளாக இயங்கும் திரு தனஞ்செயன் மற்றும் திருமதி சாந்தா தம்பதிகள் மற்றும் ஸ்ரீமதி பத்மா சுப்ரமண்யம், ஸ்ரீமதி அனிதா ரத்னம் போன்ற கலைஞர்கள் தங்களது உன்னதமான முயற்சிகள் மூலம் பரதக்கலையை உலகறிய வைத்துள்ளனர். நாடகக்கலையிலும் சென்னை மாநகரம் அக்காலத்திலிருந்தே ஆழமான பின்னணியை கொண்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம்

எழும்பூர் ரயில் நிலையம்


1905ம் ஆண்டு எடுக்கப்பட்டது இந்தபடம். பிற்காலத்தில் சினிமா எனும் வடிவமானது நாடகத்துறையின் நீட்சியாகவே உருமாற்றம் அடைந்தது எனலாம். நவீன தமிழ்நாடகக்கலையில் சில உன்னதமான முயற்சிகள் திரு ந. முத்துசாமி அவர்களால் துவங்கப்பட்ட ‘கூத்துப்பட்டறை' எனும் நாடகப்பள்ளி மூலம் நிகழ்த்தப்பட்டுள்ளது. யுனெஸ்கோ அமைப்பு இந்த கூத்துப்பட்டறை நாடகப்பள்ளியை முக்கியமான ஒன்றாக அங்கீகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கோலிவுட் என்றழைக்கப்படும் சென்னை சினிமாத்துறை இந்திய அளவில் மும்பைக்கு அடுத்தபடியாக பெரிய அளவிலான செயல்பாடுகளையும் தயாரிப்புகளையும் வர்த்தக முதலீடுகளையும் கொண்ட கேந்திரமாக திகழ்கிறது.

ஹிக்கிங்போத்தம்

ஹிக்கிங்போத்தம்

1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்திப்படங்களின் தயாரிப்பிலும் சென்னை தயாரிப்பாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இங்கு பாரம்பரியம் மிக்க ஏவிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் விஜயா வாஹினி ஸ்டுடியோஸ் போன்றவை ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்காலமாக சினிமாத்துறையில் முக்கிய அடையாளங்களாக விளங்குகின்றன. பொதுவாகவே சுதந்திரத்துக்கு பிந்தைய தமிழ் நாகரிகம் மற்றும் கலாச்சார சூழலில் சினிமா ஒரு முக்கிய அம்சமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

ஸ்பென்ஸர் பிளாசா

ஸ்பென்ஸர் பிளாசா


1863ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். எனவே அந்த சினிமா சம்பந்தப்பட்ட செயல்பாடுகளின் களமாகவும், சினிமா பிரபலங்கள் வசிக்கும் சொகுசு நகரமாகவும் சென்னை அறியப்படுவது இந்த நகரின் மற்றொரு பரிமாணமாகும். தமிழக அரசியல் சூழலோடு சினிமா நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. தொலைக்காட்சி ஊடகம் கற்பனைக்கெட்டாத அளவில் வளர்ச்சியடைந்துள்ள சூழலில் பல தமிழ் தொலைக்காட்சி சேனல்கள் சென்னையிலிருந்து இயக்கப்படுகின்றன.

உயர்நீதிமன்றம்

உயர்நீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றம் 1950ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். இவற்றுக்கான நிகழ்ச்சி தயாரிப்புகள் மற்றும் தொழில் நுட்பம் சார்ந்த செயல்பாடுகளும் சென்னையில் ஒரு முக்கிய துறையாக பரிணமித்துள்ளது. இவைதவிர, பதிப்பு ஊடகத்துறையிலும் சென்னை ஒரு கேந்திரமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சுதந்திரப்போராட்ட வீரரான சுப்ரமணிய ஐயர் துவங்கி வைத்த தி ஹிந்து ஆங்கிலப்பத்திரிகை தேசிய அளவில் ஒரு முக்கியமான பதிப்பு ஊடக அமைப்பாகவும் சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும் இயங்குகிறது.

முதல் உலகப் போர்

முதல் உலகப் போர்

சென்னையில் முதல் உலகப்போரில் எடுக்கப்பட்ட படம் இதுதவிர இன்னும் ஏராளமான ஆங்கில மற்றும் தமிழ் பதிப்பு ஊடக வெளியீடுகள் தினசரி செய்தி பத்திரிகைகளாகவும் இதர பருவ இதழ்களாகவும் சென்னையிலிருந்து தமிழகம் மற்றும் தேசிய அளவில் வெளியிடப்படுகின்றன. நூற்பதிப்பிற்கான நவீன வசதிகளை கொண்ட அச்சகங்கள் சென்னையில் ஏராளம் உள்ளன. இவற்றை சென்னையின் திருவல்லிக்கேணி, ராயப்பேட்டை பகுதிகளில் காணலாம். கருத்தும், எண்ணமும் எழுத்து வடிவில் இருப்பின் இங்கு ஒரே நாளில் உங்கள் புத்தகத்தை அச்சு வடிவத்தில் கொண்டு வரலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

கடற்கரைச் சாலை

கடற்கரைச் சாலை

1913ம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த படம் . சென்னை நகரம் பல முக்கிய அரசியல் தலைவர்களையும் சிந்தனையாளர்களையும் மாநில அளவிலும் தேசிய அளவிலும் அளித்துள்ளது. ராஜகோபாலாச்சாரியார், சி.சுப்ரமணியன், டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், மோகன் குமாரமங்கலம் ஆகியோர் இவர்களில் குறிப்பிடப்படவேண்டியவர்கள். பல அரசியல் இயக்கங்களும் சமூக முன்னெடுப்புகளும் சென்னை நகரத்தில் இன்று வரை உருவெடுத்து வந்திருக்கின்றன.

நேப்பியர் பாலம்

நேப்பியர் பாலம்


1895ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும். சென்னை மாநகரத்தின் புனித ஜார்ஜ் கோட்டையையும், மெரினா கடற்கரையையும் இணைக்கும் இந்த பாலம், கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ளது.

1869ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம், பிரான்சிஸ் நேப்பியர் எனும் ஆளுநர் பெயரால் அழைக்கப்படுகிறது.

 சேப்பாக்கம் மாளிகை

சேப்பாக்கம் மாளிகை

1890ம் ஆண்டு எடுக்கப்பட்ட சேப்பாக்கம் மாளிகை புகைப்படம்.

 மதராஸ் கிரிக்கெட் கிளம் MCC

மதராஸ் கிரிக்கெட் கிளம் MCC


1890ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் இதுவாகும்.

ரிக்ஷா ஸ்டேன்ட்

ரிக்ஷா ஸ்டேன்ட்

மதராஸின் ரிக்ஷா ஸ்டேன்ட் இதுவாகும்.

பிரசிடென்சி கல்லூரி

பிரசிடென்சி கல்லூரி

கல்லூரி கட்டப்பட்டபொழுது புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் பிரசிடென்சி காலேஜ்.

சென்னைப் பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்றாகும். இது 1851 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, 5 செப்டம்பர் 1857ல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது.

பிரசிடென்சி காலேஜ் தற்போது

பிரசிடென்சி காலேஜ் தற்போது


பிரசிடென்சி காலேஜ் தற்போது புதுப்பொலிவுடன் படத்தில் காட்டியுள்ளவாறு காட்சியளிக்கிறது.
wiki

 நேப்பியர் பாலம் தற்போது

நேப்பியர் பாலம் தற்போது

நேப்பியர் பாலம் தற்போது புதுப்பொலிவுடன் படத்தில் காட்டியுள்ளவாறு காட்சியளிக்கிறது.

Ravichandar84

 சென்னை சென்ட்ரல் நிலையம் தற்போது

சென்னை சென்ட்ரல் நிலையம் தற்போது


சென்னை சென்ட்ரல் நிலையம் தற்போது புதுப்பொலிவுடன் படத்தில் காட்டியுள்ளவாறு காட்சியளிக்கிறது.

wiki

 எழும்பூர் ரயில் நிலையம், தற்போது

எழும்பூர் ரயில் நிலையம், தற்போது


எழும்பூர் ரயில் நிலையம், தற்போது புதுப்பொலிவுடன் படத்தில் காட்டியுள்ளவாறு காட்சியளிக்கிறது.

Balaji Sowmyanarayanan

ரிப்பன் மாளிகை தற்போது

ரிப்பன் மாளிகை தற்போது

ரிப்பன் மாளிகை தற்போது புதுப்பொலிவுடன் படத்தில் காட்டியுள்ளவாறு காட்சியளிக்கிறது.

Sameer.udt

Read more about: travel chennai

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்