பட்ஜெட் ரயில், சீசன் ரயில், சிறப்பு ரயில், சொகுசு ரயில் என்று பலவிதமான ரயில்களைப் பற்றி கேள்வி பட்டிருப்போம். ஆனால், ஆஸ்பத்திரி ரயிலைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறீர்களா ? ஆம், மும்பையைச் சேர்ந்த Impact India Foundation என்ற அரசு சாரா நிறுவனம், இந்த நடமாடும் மருத்துவமனை ரயிலை, அடித்தட்டு மக்களின் நலனுக்காக நடத்திக்கொண்டிருக்கிறது, இந்திய ரயில்வே மற்றும் சுகாதார அமைச்சகம் உதவியோடு.
ஆங்கிலத்தில், Lifeline Express(LLE) அல்லது ஹிந்தியில், ஜீவன் ரேகா எக்ஸ்பிரஸ் என்று அழைக்கிறார்கள்.
இந்த ரயிலில், மருத்துவர்கள், நர்சுகள், அதிக மருத்துவ வசதிகள் இல்லாத இடங்களுக்குச் சென்று, 20-25 நாட்கள் வரை ஓர் இடத்தில் முகாம் அமைத்து, தேவையான மருத்துவ உதவிகளை செய்கிறார்கள் இலவசமாக.
25 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு எளிய யோசனையால் தோன்றிய திட்டம் இன்று நாடு முழுவதும் 2 லட்சம் கி.மீ கடந்து, 6 லட்சத்திற்கும் அதிகமான மக்களை சென்றடைந்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான செய்தி.

இந்த வருடத்தில், கிழே கொடுக்கப்பட்டுள்ள இடங்களுக்குச் செல்கிறது :
ஆகஸ்ட் 2 முதல் 22 வரை பத்கல், கர்நாடகா
செப்டம்பர் 1 முதல் 21 வரை கோல்பாரா, அசாம்
அக்டோபர் 5 முதல் 25 வரை அஜ்மீர், ராஜஸ்தான்
நவம்பர் 9 முதல் 29 வரை கலஹந்தி, ஒடிசா
டிசம்பர் 10 முதல் 30 வரை மொகாலி, பஞ்சாப்
இந்த திட்டத்தின் சவால்களாக மருத்துவர்கள் கூறுவது: ரத்த வங்கி இல்லாதது மற்றும் அறுவை சிகிச்சைக்கான பெட்டிகள் இல்லாதது. ஆனால், இந்த சிக்கல்கள் இருந்தும் கண் குறைபாடுகள், மாரடைப்பு, எலும்பு, நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது.
கார்பரேட்டுகள், தனி நபர் ஆர்வலர்கள், மருத்துவர்கள் பலர் இந்த திட்டத்திற்கு நிதியுதவி செய்து வருகிறார்கள்.
சந்தோஷ தகவலாக, இந்த வருடம் முதல் கூடுதல் இரண்டு பெட்டிகள் இணைக்கப்படுகிறது - புற்று நோய் மற்றும் குடும்ப கட்டுப்பாடு சிகிச்சைக்காக.
இந்த திட்டத்தின் வெற்றியைப் பார்த்து பல நாடுகள் இதைப் பின்பற்ற துவங்கிவிட்டன. சீனாவில் நான்கு ரயில்கள், தென்னாப்ரிக்காவில் இரண்டு ரயில்கள்; வங்கதேசம் மற்றும் கம்போடியாவில் படகு மருத்துவமனைகள் வெற்றிகரமாக இயங்குகின்றன.
மகாராஷ்டிரா மாநிலம், தங்கள் மாநிலத்திற்காக, பிரத்யேக மருத்துவ ரயிலைத் தொடங்க இருப்பதாக திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.



Click it and Unblock the Notifications



