வழக்கமாக கோவில்கள் இருக்கும் தெருக்களில் எவரேனும் இறந்து விட்டால் சன்னதிகள் மூடப்படும். இறுதி சடங்குகள் முடிந்து பின்னரே, நடை திறக்கப்பட்டு வழக்கம் போல் பூஜைகள் நடைபெறும். ஆனால் நாகப்பட்டினத்தில் உள்ள காயரோகனேசுவரர் கோயிலில் ஒரு வித்தியாசமான பழக்கம் நடைமுறையில் உள்ளது.
அந்த ஊரில் மீனவர் சமூகத்தை சேர்ந்த எவரேனும் இறந்தால், காயாரோகனேசுவரர் கோயிலில் சிவனுக்கு சாற்றப்படும் மாலையும் அங்கவஸ்திரமும் இறந்தவருக்கு அணுவிக்கப்பட்டு மரியாதை செலுத்திய பின்னரே இறுதி சடங்குகள் நடைபெறுமாம்! இது காலம் காலமாக நடைமுறையில் இருந்து வரும் ஒரு பழக்கமாம், இந்த வினோதம் எதனால் நடைபெறுகிறது என்று பார்ப்போமா!

அனைவர்க்கும் முக்தியளிக்கும் காயாரோகணேஸ்வரர்'
நாகப்பட்டினத்தின் புராண காலப்பெயர், 'கடல் நாகைக் காரோணம்' என்பதாகும். இத்தல ஈசனின் திருநாமம் 'காயாரோகணேஸ்வரர்'. அன்னையின் திருநாமம் 'நீலாயதாட்சி' என்னும் 'கருந்தடங்கண்ணி'. 'காயம்' என்றால் 'உடம்பு' என்று பொருள்படும். 'ஆரோகணம்' என்பதற்கு 'உடம்போடு சேர்த்து அணைத்துக் கொள்வது' என்று அர்த்தம். இத்தலத்தில் குடி கொண்டிருக்கும் ஈசன், புண்டரீக மகரிஷியின் உடலை, தன் சிவலிங்கத் திருமேனியோடு சேர்த்துக் கொண்டதால், இத்தல இறைவனுக்கு 'காயாரோகணர்' என்றும், இத்தலத்திற்கு 'காயாரோகணம்' என்றும் பெயர் வந்தது. மனித உடலோடு சொர்க்கத்தில் இடம் கேட்டு தவம் செய்தார் புண்டரீக மகரிஷி. அவரது தவத்தை மெச்சி, அவரது உடலை தன்னுள் ஆரோகணம் செய்து முக்தி கொடுத்தார் ஈசன். இத்தலத்திற்கு சென்று முக்தி கேட்டு வேண்டுவோருக்கு இறைவன் முக்தியளித்து அருள் பாலிக்கிறார்.
பல ரிஷிகளுக்கும் இத்தலத்தில் காட்சி கொடுத்த சிவபெருமான்
இங்கு மூலவர் காயாரோகணேஸ்வரர் சுயம்பு மூர்த்தியாக உள்ளார். நெற்றிப் பட்டத்துடன் கூடிய பெரிய சிவலிங்கமாக கிழக்கு பார்த்த வண்ணம் காட்சி தருகிறார். மார்க்கண்டேயர், அகத்தியர், வசிஷ்டர், கவுதமர், காசிபர், புலத்தியர், ஆங்கிரசர் முதலிய சப்த ரிஷிகளுக்கும், சிவபெருமான் மூல சிவலிங்கத்தில் இருந்து தோன்றி சோமாஸ்கந்தராய்க் காட்சி கொடுத்த பெரும் புண்ணிய தலம் இதுவாகும். இங்கு மூலவருக்கு பின்புறம் தனி மாடத்தில் சிவன், அம்பாள் நடுவில் முருகப்பெருமானுடன் சோமாஸ்கந்த சிலையும் உள்ளது. இத்தலத்தில் வழிபட்டால் குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும் என்பது நம்பிக்கை.

பல சிறப்புகள் அடங்கிய திருத்தலம்
நாகபட்டினத்தில் அமைந்துள்ள இந்த காயரோகனேசுவரர் சிவன் கோயில் 276 பாடல் பெற்ற ஸ்தலங்களில் முக்கியமான ஒரு திருத்தலமாகும். மிகவும் பழமை வாய்ந்த வரலாற்றை கொண்ட இந்த அழகிய கோயில் சப்த விடங்கர்ளில் ஒன்று. இந்த கோயிலில் ராஜேந்திர சோழன், ராஜாதி ராஜ சோழன், மூன்றால் குலோத்துங்க சோழர்களின் கல்வெட்டுகளை நீங்கள் காணலாம். நீலாயதாட்சியம்மன் சன்னதி, பாசக்கார நந்தி, அழுகுணி சித்தரின் சமாதி, அதிபத்த நாயனாரின் முக்தி ஸ்தலம் என பல சிறப்புகளை இந்த தலம் உள்ளடக்கியுள்ளது.
வறுமையிலும் சிவ தொண்டு செய்த அதிபத்த நாயனார்
அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார் அவதாரம் செய்த திருத்தலம் 'கடல்நாகை' எனும் இந்த நாகப்பட்டினம் ஆகும். மீனவரான அதிபத்த நாயனார், தான் வலைவீசி நடுக்கடலில் தினமும் பிடிக்கும் மீன்களில், முதல் மீனை ஈசனுக்கு அர்ப்பணித்து வந்தார். அதாவது, தினமும் முதல் மீனை அப்படியே கடலில் மீண்டும் ஈசனுக்கு என அர்ப்பணித்து விட்டுவிடுவார். கடும் வறுமையிலும் அவர் இந்த திருத்தொண்டை தவறாது செய்து வந்தார். ஒரு நாள் ஒரே ஒரு மீன் தான் அதிபத்த நாயனாருக்கு கிடைத்தது. மனமகிழ்வுடன் அதையும் இறைவனுக்கே அர்ப்பணித்தார். வறுமையில் தவித்த அந்தக் குடும்பம் அன்று பசியால் வாடியது. இருப்பினும் சிவனுக்கு செய்த பணியை நினைத்து அதிபத்தர் திருப்தியடைந்தார்.
பக்தியை உணர்ந்து ஆட்கொண்ட சிவபெருமான்
மறுநாள் அதிபத்தரின் வலையில் தங்க மீன் கிடைத்தது. அந்த மீனையும் ஈசனுக்கே அர்ப்பணம் செய்தார். வறுமையிலும் கூட விலைஉயர்ந்த தங்க மீனை இறைவனுக்கு தியாகம் செய்த தொண்டை எண்ணி மகிழ்ந்த ஈசன், அதிபத்தருக்கு காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டார். ஆவணி மாதம் ஆயில்யம் நட்சத்திர நாளில் இந்த நிகழ்வு அரங்கேரியதால் நீலாயதாட்சி சமேத காயாரோகணேஸ்வரர் ஆலயத்தில் திருக்கோவில் அருகில் உள்ள கடலில், படகு மற்றும் மீன் வலையுடன் கூடிய கோலத்தை சிவனுக்கு காண்பிக்கும் நிகழ்வு இன்று வரை பின்பற்றப்பட்டு வருகிறது. அப்போது அதிபத்தரின் உற்சவர் சிலையை படகில் வைத்து கடலுக்குள் எடுத்துச் சென்று, அதிபத்தர் தங்க மீனை சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்வினை நடத்திக் காண்பிக்கிறார்கள்.

வழக்கத்தில் உள்ளத வினோத நடைமுறை
பொதுவாக கோவிலுக்கு அருகில் யாராவது இறந்து விட்டால் கோவில் நடையை அடைத்து விடுவார்கள். பரிகார பூஜைகள் செய்தபின்னர் தான் நடையை திறப்பார்கள். ஆனால் இந்த தலத்தில் மட்டும் நடை திறந்தே இருக்கும். சிவனருள் பெற்ற அதிபத்த நாயனாருக்கு மரியாதை தரும் விதமாக, இவ்வூரில் யாரேனும் இறந்து விட்டால் அவர்களுக்கு இத்தல சிவபெருமான் சார்பில் மரியாதை செய்யும் நிகழ்வு நடைபெறுகிறது.
இறந்த பூத உடல்களுக்கு மரியாதை செலுத்தும் சிவ பெருமான்
இறந்தவரின் உடலை ஆலயத்திற்கு முன்பாக வைத்து விடுவார்கள். அப்போது சிவாச்சாரியார், கருவறையில் உள்ள சிவலிங்கத்துக்கு அணிவித்த மாலை, வஸ்திரம் ஆகியவற்றை இறந்தவர் உடலுக்கு அணிவித்து, தீர்த்தம் கொடுப்பார். அதன்பிறகே இறுதிச் சடங்கிற்காக தூக்கிச் செல்வார்கள். இவ்வாறு செய்வதால் இறந்தவரின் ஆன்மா, சிவபதம் அடைவதாக நம்பப்படுகிறது. இத்தலத்திற்கு வருகை தரும் எவருக்கும் மோட்சம் நிச்சயம் என்பது ஐதீகம்.
எப்படி செல்வது
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் நாகபட்டினத்திற்கு தமிழக அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. சென்னை, சேலம், திருச்சி உட்பட தமிழக மாவட்டங்களிலிருந்து கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் முதலில் நாகையை அடைய வேண்டும். பின்னர் அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ தூரத்தில் இருக்கும் சிவன் கோவிலை அடையலாம். அல்லது வேளாங்கண்ணி செல்லும் பேருந்துகள் மூலமாகவும், காரைக்கால் சென்றும் கூட நாகையில் உள்ள கோவிலை அடையலாம்.
இந்த கோவிலுக்கு நீங்கள் செல்வது எப்போது?



Click it and Unblock the Notifications




