» »கம்பீரமான இந்தியப் படிக்கிணறுகள்!

கம்பீரமான இந்தியப் படிக்கிணறுகள்!

Written By: Staff

இந்தியாவில் படிக்கிணறுகள் கட்டும் வழக்கம் 7-ஆம் நூற்றாண்டிலிருந்தே தொடங்கியிருக்க வேண்டும் என்று தொல்பொருள் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த படிக்கிணறுகள் முதலில் குஜராத் பகுதிகளில் கட்ட ஆரம்பிக்கப்பட்டாலும், மெல்ல ராஜஸ்தானிலும் அற்புதமான கட்டிடக்கலை படைப்புகளாக படுக்கிணறுகள் தோன்ற ஆரம்பித்தன.

அதிலும் 11 மற்றும் 16-ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலங்களில் எண்ணற்ற படிக்கிணறுகள் இந்தப் பகுதிகளில் கட்டப்பட்டன.

இவ்வகை படிக்கிணறுகள் பெரும்பாலும் அந்தக் காலங்களில் மழை நீரை சேமித்து வைக்கும் பொருட்டு உருவாகப்பட்டாலும், மிக நேர்த்தியாக நம் கலாச்சாரத்தையும், வரலாற்றுப் பெருமையையும் எடுத்துக்காட்டும் உன்னத கலை வடிவங்களாக இன்று நம்மிடையே மிஞ்சியுள்ளன.

சாந்த் பாவ்ரி, ஆபானேரி

சாந்த் பாவ்ரி, ஆபானேரி

இந்தியாவில் பிரம்மாண்டமும், பேரழகும் ஒருங்கே வாய்க்கப்பெற்ற சாந்த் பாவ்ரி படிக்கிணறு ராஜஸ்தான் மாநிலம், ஆபானேரி கிராமத்தில் அமைந்திருக்கிறது. இந்தப் படிக்கிணறு 100 அடி ஆழமும், 3500 குறுகலான படிகளும், 13 தளங்களும் கொண்டு வட்ட வடிவில் மிக பிரம்மாண்டமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இப்படிக்கிணறு 'தி ஃபால்' மற்றும் 'தி டார்க் நைட் ரேய்சஸ்' போன்ற ஆங்கில திரைப்படங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படம் : Chetan

ராணி கி வாவ், படன்

ராணி கி வாவ், படன்

ராணி கி வாவ் என்ற படிக் கிணறை ராணி உதயமதி என்பவர் சோலாங்கி அரசாட்சியை உருவாக்கிய தன் கணவர் முதல் பீம்தேவ் அரசரின் காதல் நினைவாக 1063-ஆம் ஆண்டு கட்டினார். இந்த கிணற்றில் உள்ள பல படிகள் சரஸ்வதி ஆற்றின் தண்ணீரால் சேற்றுப் பதிவாக உள்ளது. இங்குள்ள தூண்கள் உங்களை சோலாங்கி அரசாட்சியின் காலத்திற்கு, அவர்களின் கட்டடக்கலைக்கு கூட்டிச் செல்லும். சுவர்கள் மற்றும் தூண்களில் காணப்படும் பல செதுக்கல்கள் விஷ்ணு பகவானின் பல அவதாரமான ராமர், வாமணர், மஹிஷாசுரமர்தினி, கல்கி போன்றவைகளை நினைவு கூறும்.

படம் : Rashmi.parab

அகரசேன் கி பாவ்லி, டெல்லி

அகரசேன் கி பாவ்லி, டெல்லி

தலைநகர் டெல்லியில் அமைந்திருக்கும் அகரசேன் கி பாவ்லி படிக்கிணறு 15 அடி அகலமும், 60 அடி நீளமும் கொண்டது. இது மஹாபாரதத்தில் இடம் பெற்ற அக்ரசேனா எனும் மன்னரால் கட்டப்பட்டதாகவும், பிற்காலத்தில் அகர்வால் சமூகத்தினர் 14-ஆம் நூற்றாண்டில் இதனை புதுப்பித்ததாகவும் சொல்லப்படுகிறது. 103 படிக்கட்டுகளுடன் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கிணறு 5 அடுக்குகளைக் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ளது.

படம் : Supreet Sethi

தாதா ஹரீர் வாவ், அஹமதாபாத்

தாதா ஹரீர் வாவ், அஹமதாபாத்

அஹமதாபாத் நகரத்திற்கு வெகு அருகில் அசர்வா எனும் இடத்தில் ‘தாதா ஹரீர் வாவ்' எனும் படிக்கிணறு அமைந்திருக்கிறது. ஒரு மாளிகை கோபுர கட்டுமான அமைப்பை வானை நோக்கி உயர்த்தி எழுப்புவதற்கு பதிலாக பூமியில் கீழ் நோக்கி கொண்டு சென்றால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள் அதுதான் இந்த தாதா ஹரீர் வாவ். இங்கு திரும்பும் இடமெல்லாம் மாயத்தோற்றங்கள் போன்று நேர் வரிசையில் நிற்கும் எண்ணற்ற தூண்கள் மிரட்சியாக இருக்கும். அதோடு அடுக்கடுக்காக கீழ் நோக்கி இறங்கும் தளங்களின் சுவர்களில் சம்ஸ்கிருத மற்றும் அராபிய வாசகங்கள் காணப்படுகின்றன.

அடலாஜ் படிக்கிணறு, காந்திநகர்

அடலாஜ் படிக்கிணறு, காந்திநகர்

அடலாஜ் படிக்கிணறு அல்லது அடலாஜ் வாவ் என்று குஜராத்தி மொழியில் அழைக்கப்படும் இந்தப் படிக்கிணறு குஜராத் தலைநகர் காந்திநகரிலிருந்து சுமார் 15 கீ.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இதன் தனித்துவமான கட்டமைப்பின் காரணமாக நேரடி சூரிய ஒளி பொதுவாக, நண்பகலில் ஒரு குறுகிய காலத்தைத் தவிர, படிகளைத் தொடுவதில்லை. எனவே இந்தக் கிணற்றின் உள்ளே உள்ள வெப்பநிலை சுற்றுப் புற வெப்பநிலையை விட குளிர்ந்து காணப்படுகிறது.

படம் : Raveesh Vyas

ராம்குந்த் படிக்கிணறு, புஜ்

ராம்குந்த் படிக்கிணறு, புஜ்

குஜராத்தின் புஜ் நகரில் உள்ள கட்ச் அருங்காட்சியகத்துக்கு அருகில் ராம்குந்த் படிக்கிணறு அமைந்துள்ளது. இந்தப் படிக்கினற்றில் இராமாயண கதாப்பாத்திரங்களும், விஷ்ணு பகவானின் பத்து அவதாரங்களும் மிக அழகாக ஓவியங்களாக தீட்டப்பட்டுள்ளன.

ராணிஜி கி பாவ்ரி, கோட்டா

ராணிஜி கி பாவ்ரி, கோட்டா

1699-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தப் படிக்கிணறு 165அடி ஆழமும், நான்கு தூண்களுடன் கூடிய குறுகிய வாசலையும் கொண்டுள்ளது. இதன் படிகள் மற்ற கிணறுகளைக்காட்டிலும் அளவில் பெரியதாக காணப்படுகிறது. அதோடு இங்கு பாம்பு போன்று நெளிந்து நெளிந்து தோற்றமளிக்கும் அலங்கார தோரண வடிவமைப்புகளையும் பயணிகள் பார்க்கலாம்.

படம்

ராஜோன் கி பாவ்லி, டெல்லி

ராஜோன் கி பாவ்லி, டெல்லி

ராஜோன் கி பாவ்லி படிக்கிணறு டெல்லியில் உள்ள மெஹ்ரௌலி ஆர்க்கியாலஜிகல் பார்க்கில் அமைந்திக்கும் ஆதாம் கான் கல்லறைக்கு அருகே அமையப்பெற்றுள்ளது. இந்தக் கிணற்றில் மொத்தம் 3 அடுக்குகள் அமைந்திருந்தாலும் அடுத்த தளத்துக்கு செல்லும்போதுதான் அடுத்தடுத்த அடுக்குகள் கண்களுக்கு புலப்படும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.

படம் : Varun Shiv Kapur

பேரளசேரி படிக்கிணறு, கண்ணூர்

பேரளசேரி படிக்கிணறு, கண்ணூர்

கண்ணூர் நகரத்திலிருந்து 14 கி.மீ தூரத்தில் கண்ணூர்-கூத்துபரம்பா நெடுஞ்சாலையில் உள்ள பேரளசேரி எனும் சிறு நகரில் இந்தப் படிக்கிணறு அமைந்துள்ளது. இந்த பிரமிக்க வைக்கும் கிணற்றின் தோற்றம் ராஜஸ்தானிய படிக்கிணறுகளை ஒத்திருக்கிறது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்