Search
  • Follow NativePlanet
Share
» »மணி ரத்னத்தின் படைப்புலகம்.

மணி ரத்னத்தின் படைப்புலகம்.

By Staff

மணி, அடுத்த படத்தை ஆரம்பித்துவிட்டார். வழக்கம்போல், ஒரு கவித்துவமான தமிழ்ப் பெயர் - காற்று வெளியிடை. கார்த்தி, விமானப் படை வீரனாக நடிக்கிறார் என்று பத்திரிகை செய்திகள் சொல்கின்றன.

ஆனால், ஒரு Travel வலைதளத்தின் பார்வையில், நமக்கு வரும் ஒரு எதிர்பார்ப்பு: இந்தப் படத்தில், மணி, என்ன மாதிரியான இடங்களைத் தேர்வு செய்யப்போகிறார்; கதாபாத்திரங்கள் மேற்கொள்ளப் போகும் பயணம்; பின், அதனால் ஏற்படும் மாற்றங்கள், இவைகளைப் பற்றி ஒரு ஆர்வம்.

மணியின் படங்களில் பயணம், அவர் தேர்வு செய்யும் லொக்கேஷன்கள், எதை வைத்து அந்த லொக்கேஷன்களைத் தேர்வு செய்கிறார்; இவைகளைப் பற்றி சிறிது கதைக்கலாம்.

  • பல்லவி அனுபல்லவி
  • மெளன ராகம்
  • நாயகன்
  • இதயத்தை திருடாதே
  • தளபதி
  • ரோஜா
  • பம்பாய்
  • கன்னத்தில் முத்தமிட்டால்
  • குரு
  • ராவணன்
  • ஓகே கண்மணி

மேலே உள்ள படங்களில் என்ன ஒற்றுமை தெரியுமா ? படத்தின் முக்கிய கதாபாத்திரங்கள், படத்தின் ஆரம்பத்தில் அல்லது ஒரு சிக்கலான தருணத்தில், ஒரு ஊரிலிருந்து இன்னொரு ஊருக்கு இடம்பெயர்கின்றனர். இந்த இடமாற்றம், ஒன்று, திருமணத்தால் யதேச்சையாக நடக்கிறது அல்லது ஒரு கொலையின் காரணமாக தப்பித்துச் செல்ல நடக்கிறது அல்லது ஒரு கதாபாத்திரம் கடத்தப்பட்டு இன்னொரு இடத்திற்கு வலுகட்டாயமாக கொண்டுசெல்லப்படுகிறது.

இடமாற்றம் நடந்த பிறகு படத்தின் போக்கே மாறிவிடுகிறது. புதிய சூழலில், கதாபாத்திரங்கள் சந்திக்கும் மனிதர்கள், மொழி, அரசியல் சார்ந்த பிரச்சனைகள் படத்தை வேறு திசைக்கு கொண்டு செல்கிறது.

அடுத்தது காட்சிகளுக்கு வலுசேர்க்கும் விதமாக, காட்சிகளின் மனநிலையை படம் பார்ப்பவர்களுக்கு நுட்பமாகத் தெரிய வைப்பதற்கு, அவர் கவனமாக இடங்களைத் தேர்வு செய்கிறார். ஒரு நல்ல இயக்குனரின் திறமை இதில்தான் அடங்கியிருக்கிறது.

Melkote

Photo Courtesy : Philanthropist 1

இதற்கு ஒரு அருமையான உதாரணம் : தளபதி படத்தில் ரஜினியும்- ஷோபனாவும் காதல் கொள்ளும் காட்சியை ஒரு அழகான தெப்பக்குளத்தில் வைத்திருப்பார்; அவர்கள் பிரியும் காட்சியை ஒரு பசுமையான இலை கொடிகூட‌ இல்லாத வறண்ட இடமாக காட்சியளிக்கும் மேல்கோட்டையில் வைத்திருப்பார்.

ரஜினியை, அம்ரிஷ் பூரி வந்து சந்திக்கும் காட்சியும், ஒரு சுவாரஸ்யமான பின்னணியில் நடக்கிறது. ரஜினி வந்து மம்மூட்டியுடன் சேர்ந்தபிறகு அவர்களின் பலம் வெகுவாக உயர்கிறது. இது அம்ரிஷ் பூரிக்கு பெரும் இடஞ்சலாக இருக்கிறது. ரஜினியை தன்வசம் இழுக்க அம்ரிஷ் பூரி நினைக்கிறார்.

அம்ரிஷ் பூரி-ரஜினி சந்திக்கும் காட்சியைப் பாருங்கள்; ஒரு உயர்ந்த இடத்தில் ரஜினி இருக்கிறார்; காரில் வந்து அம்ரிஷ் பூரி சந்திப்பதாக‌ மணி அந்தக் காட்சியை வைத்திருக்கிறார். பின்னணி இடங்கள்தான் காட்சிகளுக்கு எத்தனை வலு சேர்க்கிறது.

இதே காட்சியை, ஒரு தெரு முனையில் வைத்திருந்தால், காட்சியின் தீவிரம் பொசுக்கென்று போயிருக்கும்.

மன்னிக்கவும்; தலைப்பை விட்டு ஒரு நிமிடம் வெளியே செல்கிறேன்.

கற்றது தமிழ் படத்தில்கூட இதுபோல பின்னணி லொகேஷன்கள், காட்சிகளின் மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் ராம் அமைத்திருப்பார்.

சிறு வயதில், பிரபாகரும், ஆனந்தியும் சந்தோஷமாக இருக்கும் தருணங்களில் அச்சன் கோவில் பசுமையை பின்னணியாகவும், பின்னாளில் மராட்டிய மாநிலத்தில் சந்திக்கும் ஒரு சோகமான தருணத்தில், முற்றிலும் வறண்ட மலைப்பகுதியை பின்னணியுமாக ராம் வைத்திருப்பார்.

கடைசியாக: மணி, சில இடங்களை, வேறு பெயரிட்டு, படங்களில் நம்மூராக காட்டிவிடுவார். இதற்கு, படப்பிடிப்பு எடுப்பதில் சிரமம், அல்லது அனுமதி கிடைக்காமல் போவது என்ற காரணங்கள் இருக்கலாம்.

உதாரணமாக, பாம்பே படத்தில் மாங்குளம் - திருநெல்வேலி என்று ஒரு ஊரைக் காட்டுவார். எப்போதும் மழை வேறு பெய்து கொண்டிருக்கும். இன்று வரை திருநெல்வேலியில் அப்படி மழை பெய்யும் ஊர் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால், அவை உணமையாக கேரளா, காஸர்கோட் இடங்களில் எடுக்கப்பட்டது.

கன்னத்தில் முத்தமிட்டால் படத்தின் களம், இலங்கை என்றாலும் : இரண்டாம் பாதியில், பெரும்பாலான காட்சிகள் பாண்டிச்சேரியிலும், தெய்வம் தந்த பூவே பாடலில் வரும் அருவி, சாலக்குடியிலும் எடுத்தது.

அமுதா, இலங்கையில் காரில் செல்லும்போது, கேமரா அமுதாவையும், வெளிப்புறத்தையும் ஒரே சமயத்தில் காட்டாது. படக்குழுவினர் முன்பே போய் அவைகளை படம்பிடித்து வந்திருக்கலாம்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X