உங்கள் கையில் அதிக அளவில் பணம் புரளுகிறது என்றால், உங்கள் வியாபாரம் செழிக்கப்போகிறது அல்லது, நீங்கள் நல்ல முறையில் பணம் சம்பாரிக்கப் போகிறீர்கள் என்று பொருள். சரி உங்கள் கையில் இப்போதைவிட அதிக அளவில் அள்ளித் தரும் பணம் கொழிக்க என்ன செய்யவேண்டும் தெரியுமா.. இந்த கோவிலுக்கு போங்க...
தமிழகம் மற்ற வட மாநிலங்களை ஒப்பிடுகையில், அதிக இடங்களையும், நிறைய சுற்றுலாத் தளங்களையும் கொண்டதுதான் என்றாலும், நம்மவர்கள் சுற்றுலா என்று சென்றாலும், அதனுடன் கோவிலை இணைத்தே செல்கிறார்கள். நம் ஒவ்வொரு பயணத்தையும் கோவில் தான் துவக்கி வைக்கிறது. மேலும் பயணத்தின் ஊடே குறைந்த பட்சம் ஒரு கோவிலுக்காவது போய்விட்டு வந்துவிடுகிறோம். அதற்காகவே இந்த ஆன்மீகப் பயணச் சுற்றுலா பகுதி உங்களுக்கு சிறந்த ஆன்மீக சுற்றுலாவுக்கான இடங்களை தருவிக்கிறது.

எந்த கோவில்
மாசிலாமணீஸ்வரர் கோவில்தான் அந்த கோவில். உங்கள் கஷ்டங்களைப் போக்கி, அள்ளித் தரும் செல்வங்களை பெற சிவனை வழிபடுங்கள். அதிலும் குறிப்பிட்ட இந்த கோவிலில் சென்று வழிபட்டால், உங்கள் தொழில் முன்னேற்றமடைந்து பணப்புழக்கம் அதிகரிக்கும்.

எங்கே இருக்கிறது இந்த கோவில்
இந்த கோவில் எங்கே இருக்கிறது என்று நீங்கள் இந்நேரம் சிந்திக்க ஆரம்பித்திருப்பீர்கள் என நம்புகிறோம். இது சென்னை வாசிகளுக்கு மிகவும் எளிதாக சென்று வர ஏதுவானதாக இருக்கும்.
சென்னை வட திருமுல்லை வாயிலில் தான் இந்த கோவில் அமைந்துள்ளது.

தொன்னம்பிக்கை
இந்த தலமானது கிருதயுகத்தில் ரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் செண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லை வனமாகவும் விளங்குகிறது என்பது தொன்னம்பிக்கை ஆகும்.
இந்த கோவிலின் சிறப்புகள், வரலாறு, புகைப்படங்கள் போன்றவற்றை தெரிந்துகொள்ள முழுவதும் படியுங்கள்.

வரலாறு
ஓணன், வாணன் எனும் இரு முரடர்கள் தொண்டை நாட்டில் இருந்தார்கள். அவர்கள் முரடர்களாயினும் குறும்பர்கள். சிறு தெய்வத்தை வழிபடுபவர்கள். இவர்கள் அந்த ஊர் மக்களுக்கு அடிக்கடி இடையூறு செய்து கொண்டு இருந்தனர். அவர்களின் பொருள்களைத் திருடுவது, திருப்பி கேட்டால் தாக்குவது என அட்டூழியம் செய்து வந்தனராம்.

படை திரட்டி வந்த தொண்டைமான்
இவர்களின் தொல்லை நாளுக்கு நாள் தாங்க முடியாததால், அரசருக்கு புகார் சென்றது. இதைத் தொடர்ந்து தொண்டைமான் காஞ்சிபுரத்திலிருந்து படையுடன் கிளம்பி, திருமுல்லை வாயில் வரை வந்தான். ஆனால் பொழுது சாய்ந்தது.

மாசிலாமணி
குறையில்லா மணி எனும் பொருள்தரும் இந்த சொல் சிவனை குறிக்கப் பயன்படுகிறது. போருக்கு சென்ற தொண்டைமான் தனது யானையின் கால்கள் முல்லைக் கொடியில் சுற்றி தவிக்க, அதை மன்னன் வெட்டிவிட, இடையில் எங்கிருந்து ரத்தம் பீறிட்டு வந்தது. யானைதான் பாதிக்கப்பட்டுள்ளது எனக் கருதிய தொண்டைமான் கீழிறங்கி பார்க்க, அங்கு குறையில்லா மணியாக சிவலிங்கம் தோன்றியது.

கல்வெட்டுகள்
இந்த கோவிலைச் சுற்றியும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவை 23 என்ற எண்ணிக்கையில் இருக்கின்றன.
அவை, சிங்கள வீரநாரணன், திருவிழா, தேவதானம், உடையார் அரசு, புழற்கோட்டத்து நாட்டவர், கோயம்பேடு சிவபூதன் வானவர், அய்யலுப்ப கடையார், பிராட்டியார் செம்பியன் மாதேவி, நற்பாக்கிழான் கோற்றளப்பான் சூரியதேவன் உள்ளிட்ட விசயங்களை உள்ளடக்கியுள்ளது.
Logic riches

மூலவரும் அம்மையாரும்
இந்த கோவிலின் மூலவராக அமர்ந்திருப்பது, தொழில் வளம் பெருக்கித் தரும் மாசிலாமணீஸ்வரர் மற்றும் நிர்மல மணீஸ்வரர் ஆவர்.
அம்மையார் கொடியிடை நாயகியும், லதாமத்யாம்பாளும் ஆவர், இங்கு முல்லை தலவிருட்சமாக இருக்கிறது.
இந்த கோவிலைக் கட்டிய மன்னனின் யானை முல்லைக் கொடியில் சிக்கியது நினைவிருக்கலாம்.

தலச் சிறப்பு
இங்கு சிவ பெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இந்த தலத்தில் இருக்கும் சுயம்பு லிங்கம் தலையில் வெட்டுப் பட்ட காயத்துடன் காட்சி யளிக்கிறார். முன்னதாக மன்னனின் வாள் பட்டு உருவான காயம் என்பதற்கான அடையாளம்.

செல்வ வளம் தரும் சந்தனக் காப்பு விழா
இந்த கோவிலில் வருடம் தோறும் சந்தனக் காப்பு விழா நடை பெறும். மேலும் இந்த கோவில் மூலவர் எப்போதுமே சந்தனக்காப்பு அலங்காரத்துடனேயே காட்சி தருகிறார். இது காண்பவருக்கு சிறப்பை ஏற்படுத்தும். இந்த கோவிலுக்கு சென்று வருபவர்களுக்கு செல்வம்கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

கோடியில் ஒருத்தருக்கு கிடைக்கும் அதிர்ஷ்டம்
சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் இரண்டு தினங்கள் மட்டும் சந்தனக் காப்பு இல்லாமல் நிஜ திருமேனியுடன் அருள்கிறார். அது காண்பது அரிது என்றாலும், இதைக் காணும் கோடியில் ஒருத்தருக்கு அதிர்ஷ்டம் அடிப்பதாக கூறப்படுகிறது. அவருக்கு திடீர் நலன்கள் கூடி, வராதக் கடன் வருகிறது. கடன் தொல்லை நீங்குகிறது. புதிய தொழில் வாய்ப்புகள் உருவாகின்றன என்கிறார்கள் இக்கோவிலுக்கு வரும் பக்தர்கள்.

நடை திறக்கும் நேரம்
இந்த கோவிலின் நடை காலையில் 6.30 மணிக்கு திறக்கப்படுகிறது. மேலும் மதியம் 12 மணி வரை திறந்திருக்கும் இந்த கோவில், இடையில் 4 மணி வரை மூடப்பட்டு பின் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இந்த கோவிலின் முகவரி தெரியுமா?
அருள் மிக மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில் சென்னையில் அமைந்துள்ளது. இது சென்னையின் திருமுல்லை வாயில் வட பகுதியில் இருக்கிறது.
முகவரி - அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோவில், வட திருமுல்லைவாயில், சென்னை - 113

விநாயகருக்கு இந்த கோவிலில் இருக்கும் சிறப்பு
விநாயகர் ஒவ்வொரு கோவிலிலும் சிறப்பாக இருப்பார். அதிலும் இந்த கோவிலில் வலம்புரி விநாயகர் என்னும் பெயரோடு அழைக்கப்படுகிறார்.

பிரார்த்தனையும் நேர்த்திக்கடனும்
இந்த கோவிலில் பௌர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நேரங்கள் தவிர்த்த பிற நேரங்களில் இங்கு இருக்கும் நந்திக்கு பூசை செய்து சாத்திய மாலையை அணிந்து கொண்டால், திருமணத்தடை நீங்கி விரைவில் திருமணம் நடக்குமாம்.
அப்படி பிரார்த்தனை பலித்துவிட்டால், இங்கு வந்து மூலவருக்கு சந்தனகாப்பு செய்து வழிபட்டு நேர்த்திக்கடனை நிறைவேற்றுகிறார்கள்.

கொட்டிக் கொடுக்கு நந்தீஸ்வரர்
இங்குள்ள நந்தி, மன்னருக்கு துணையாக போருக்கு சென்றதால்,மற்ற கோவில்களில் இருக்கும்படி அல்லாமல், சிவனுக்கு எதிர்த் திசையில் பார்த்து இருக்கிறது. மற்றுமொரு விசயம் என்னவென்றால் இந்த கோவிலுக்கு வருகை தரும் ரிஷிப ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாம். மற்றவர்களைக் காட்டிலும் இவர்களுக்கு கூடுதல் பலன் கிடைக்கும்.