» »குழந்தைகளுடன் மைசூருக்கு ஒரு சூப்பர் டூர்!

குழந்தைகளுடன் மைசூருக்கு ஒரு சூப்பர் டூர்!

Written By: Staff

மைசூர், கர்நாடகத்தின் இரண்டாவது மிகப்பெரிய நகரம். பெங்களூரைப் போன்று ஜன நெரிசல் கடையாது, பெங்களூரைவிட இதமான சீதோஷ்ண நிலை, ஏராளமான சுற்றுலா தலங்கள் என்று பல சிறப்பம்சங்கள் கொண்ட ஒரு நகரம். ஆனால் இந்த சுற்றுலா தலங்கள் அனைத்தும் குழந்தைகளை கவரும் வகையில் இருக்கும் என்று சொல்ல முடியாது. எனவே, மைசூரைச் சுற்றியிருக்கும், குழந்தைகள் மனங்கவரும் சுற்றுலா தலங்களைப் பார்க்கலாம்.

ஜி.ஆர்.எஸ் ஃபேண்டஸி பூங்கா

GRS

Photo Courtesy : Official Website

மைசூரில் இருக்கும் புகழ்பெற்ற கேளிக்கைப் பூங்கா . குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பினரும் விரும்பி வரும் சுற்றுலா தலம் இந்தப் பூங்கா. குழந்தைகள் ரயில், குழந்தைகள் தண்ணீரில் விளையாடுவதற்காக சிறு தண்ணீர் தொட்டி, Ramp ஸ்லைடுகள் என்று பல கேளிக்கை விளையாட்டுகள் இருக்கின்றன. பெரியவர்களுக்கும் ராட்சஸ ஊஞ்சல், ட்ராகன் குகை, க்ரேஸி குருய்ஸ் ரைடுகள் என்று பல விளையாட்டுகள் இருக்கின்றன.

மைசூர் மிருககாட்சி சாலை

மைசூர் மிருககாட்சி இந்தியாவின் பழமையானது மட்டுமல்ல மிக அதிக அளவில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் ஒரு சுற்றுலா தலம்கூட. எண்ணற்ற வனவிலங்குகள், பறவைகளுக்குப் புகலிடமாக விளங்குகிறது மைசூர் மிருககாட்சி சாலை. அனகொண்டா பாம்பு வகை, வரிக்குதிரை, புலிகள் என பல வகை மிருகங்கள் இருக்கின்றன. மைசூர் பேருந்து நிலையத்திலிருந்து மூன்றே கி.மீ தொலைவில் இருக்கிறது.

மைசூர் ரயில் மியுசியம்

rail

Photo Courtesy : Nagesh Kamath

அதிகம் பேருக்குத் தெரியாத ஆனால் குழந்தைகள் மனங்கவர் ஃபேவரைட் ஸ்பாட் இந்த ரயில் அருங்காட்சியகம். பழங்காலத்து நீராவி எஞ்சின்கள், பொம்மை ரயில் ஆகியவை பார்ப்பவரை நொடிப்பொழுதில் வசீகரிக்கும். கேளிக்கையைத்தாண்டி குழந்தைகளுக்குப் பயனுள்ள வகையில் இருக்கும் இந்த ரயில் அருங்காட்சியகம் அனைவரும் அவசியம் காண வேண்டிய சுற்றுலா தலம்.

மைசூர் பேலஸ்

Palace

Photo Courtesy : Spiros Vathis

மைசூரின் டாப் சுற்றுலா தலம் என்றால் அது சந்தேகமில்லாமல் மைசூர் பேலஸ்தான். மிரள வைக்கும் பிரமாண்ட கட்டுமானத்தைப் பார்ப்பதற்கே சுற்றுலா பயணிகள் பலர் இங்கு வருகின்றனர். ரோஸ்வுட் கதவுகளும், அழகிய வேலைப்பாடு உள்ள மேற்தளங்களும் மைசூர் மாளிகையின் முக்கிய ஈர்ப்பாகும். மாளிகையைச் சுற்றியிருக்கும் நந்தவனம், இரவு நேர விளக்கொளியில் கண் கவரும் மாளிகையின் ஜொலிப்புத் தோற்றம் என மைசூர் மாளிகை சுற்றுலா பயணிகளின் கனவு மாளிகை

ஹாப்பி மென் பூங்கா

மைசூர் மாளிகை, மிருககாட்சி சாலை எல்லாம் பார்த்தாகிவிட்டது; புதிதாக, குழந்தைகள் காண ஏதேனும் இருக்கிறதா என்று விரும்புபவர்களுக்கு இருக்கிறது. இது வெறும் பூங்கா மட்டுமல்ல, உள்ளுக்குள்ளேயே ஒரு குட்டி மிருககாட்சிசாலையும் இருக்கிறது. வாத்துகளும், கோழிகளும் அலைந்து கொண்டிருக்கும் காட்சி குழந்தைகளை பரவசத்தில் ஆழ்த்தும். நடைபயிற்சி செல்ல, குழந்தைகளோடு விளையாட, அமைதியாய் உட்கார்ந்து சுற்றுச் சூழலை ரசிக்க என்று அவரவர்கேற்ப மனச்சோர்வு தீர இனிமையாய் நேரத்தை கழிப்பதற்கு சிறந்த இடம் இந்த பூங்கா

ப்ருந்தாவன் தோட்டம்

இரவு நேரத்தில் பார்ப்பதற்கு ஒரு சிறந்த சுற்றுலா தலமென்றால் அது ப்ருந்தாவன் தோட்டம்தான். இசைக்கேற்ப பல வகை நீரூற்றுகள் மேலே மேலே எழுந்து பின் கீழ்வருவதைப் பார்ப்பதற்க்கு யாருக்குத்தான் பிடிக்காது ?