பெங்களூர், சென்னை, ஹைதராபாத் வாசிகளால் எப்போதுமே புதுச்சேரி வார இறுதிகளில் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதனால் புதுச்சேரிக்கு வருமானம் கிடைத்தாலும், புதுச்சேரி வாசிகள் எங்கும் வெளியே செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். கவலையை விடுங்க! இந்த வார இறுதியில், ப்ஃரண்ட்ஸ் அல்லது குடும்பத்தினருடன் ஒரு அழகான இயற்கை சுற்றுலாத் தலத்திற்கு சென்று ஆட்டம் போட்டு, ஜாலியா குளித்துவிட்டு, நிம்மதியா இருக்க ஒரு சூப்பர் ஐடியா நாங்கள் சொல்லுகிறோம்!
புதுவையிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில்
நம் அனைவர்க்கும் பிடித்த ஒரு சுற்றுலாத் தலமான புதுச்சேரி என்றால் பிரெஞ்சு கட்டிடங்கள், அழகான வீதிகள், பல வண்ண கடற்கரைகள், துடிப்பான பப்கள் மற்றும் கஃபேக்கள் மட்டுமே நியாபகத்திற்கு வரும். ஆனால், புதுச்சேரியில் பல அழகான இயற்கை சுற்றுலாத் தலங்களும் உண்டு. வெளியூர்களில் இருந்து அங்கு செல்லும் பலருக்கும் இது தெரியாது, ஏன் சில உள்ளூர் வாசிகளுக்கு அந்த இடங்களைப் பற்றி தெரியாது. அப்படிப்பட்ட ஒரு இடம் தான் புதுச்சேரியிலிருந்து ஒரு மணி நேர பயண தூரத்தில் அமைந்திருக்கும் நெடுமொழியனூர் அணைக்கட்டு!

பருவமழை காலத்தில் பிரபல சுற்றுலாத் தலமாக மாறும் தடுப்பணை
சில தடுப்பணைகள், குறிப்பாக பெரியவை, மீன்பிடித்தல், படகு சவாரி அல்லது கயாக்கிங் போன்ற பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கான இடங்களாக மாறியுள்ளன. இந்த நடவடிக்கைகள், வெளிப்புறங்களை அனுபவிக்க இயற்கையான ஆனால் ஈர்க்கக்கூடிய வழியைத் தேடும் சாகச ஆர்வலர்கள் மற்றும் குடும்பங்களை ஈர்க்கின்றன. அப்படியொரு தடுப்பணை தான் புதுவையிலும் பருவமழை காலத்தில் அழகிய சுற்றுலாத் தலமாக பிரபலமடைகிறது.
இயற்கை அழகு, குட்டி நீர்வீழ்ச்சி - மனதைக் கவரும் சுற்றுலாத் தலம்
இந்த அணையானது பசுமைக்கு மத்தியில் அமைக்கப்பட்டு அமைதியான சூழலை வழங்குகிறது. அருவி நீர் மற்றும் கீழே உள்ள இயற்கை குளம் ஒரு அழகிய அமைப்பை உருவாக்குகிறது. தேக்கி வைக்கப்பட்டு இருக்கும் நீர், விழுவது ஒரு இயற்கையான நீர்வீழ்ச்சியை உருவாக்குகிறது. இந்த சின்ன நீர்வீழ்ச்சியில் நாம் அனைவரும் அமர்ந்து குளிப்பதற்கு ஒரு அழகிய சூழலை உருவாக்குகிறது. அதுவும் உங்க வீட்டில் குட்டீஸ்களுக்கு இந்த இடம் மிகவும் பிடிக்கும். ஒரு முறை அழைத்து வந்தால், மீண்டும் மீண்டும் இங்கு வர சொல்லி அடம் பிடிப்பார்கள்.

குளித்து, நீச்சலடித்து விளையாடி மகிழலாம்
சமீபத்தில் வெளுத்து வாங்கிய கன மழையால் ஏரி முழு கொள்ளளவை இப்பொழுது அடைந்துள்ளது. முழுதாக நிரம்பி வழியும் ஏரியை காண மக்கள் திரள் திராளாக வருகை தருகின்றனர். ஏரியும் கூட அதிகம் ஆழம் இல்லாதது என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். ஆழம் 50 அடி தான் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நீங்கள் படிக்கட்டில் அமர்ந்து குளிக்கலாம், நீச்சல் தெரிந்தால் கண்டிப்பாக நீச்சல் அடிக்கலாம். நீர் வருவதற்கு ஒரு சிறிய இடைவெளியின் கீழ் நீங்களே அமர்ந்து குளிக்கலாம். நிச்சயம் அது ஒரு அலாதியான உணர்வை உங்களுக்கு வழங்கும்.
பிக்னிக் செல்ல ஏற்ற இடம்
இங்கே வந்தால் குளிக்க மட்டும் தான் முடியுமா என்று எண்ண வேண்டாம். ஏரியை சுற்றி அழகான வயல்களும், மரங்களும் பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கிறது. நீங்கள் அமர்வதற்கு போர்வை அல்லது பாய், சாப்பிடுவதற்கு சாப்பாடு கொண்டு வந்து இங்கே பொழுதையும் கழிக்கலாம். நிச்சயம் நீங்கள் ஏதோ ஒரு அழகிய கிராமத்திற்கு சென்று வந்தது போல ஒரு வித்தியாச உணர்வை இந்த ட்ரிப் உங்களுக்கு வழங்கும். ஆனால் சுற்றிலும் எந்த கடைகளும் கிடையாது. உங்களுக்கு குடிதண்ணீர் முதற்கொண்டு திண்பண்டங்கள், உணவுபொருட்கள் ஆகியவற்றை நீங்கள் எடுத்து செல்வது அவசியம்.
கண்டிப்பா அனைவரும் செல்ல வேண்டிய இடம்
இந்த ஏரி மிகவும் பெரிய ஏரி என்பதால், நீர் வரத்து கட்டாயம் 2 மாதங்களுக்கு தொடர்ந்து இருக்கும் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். நீங்கள் பெண்கள், குழந்தைகளுடன் வருகிறீர்கள் என்றால் வார இறுதியில் சென்று வாருங்கள். வார இறுதிகளில் நீங்கள் குடும்பங்களின் கூட்டத்தை மட்டுமே காணலாம். ஆனால் எத்தனை பேர் வந்தாலும் அனைவரும் அமர்ந்து குளிக்கும் அளவுக்கு நீர் வரத்து நம்மை மகிழ்விக்கிறது. நீங்கள் நண்பர்களுடன் சேர்ந்து வருகிறீர்கள் என்றால் வார நாட்களில் சென்று வாருங்கள். தனியா, ஜாலியா இருக்க வார நாட்கள் தான் பெஸ்ட்.
நெடுமொழியனூர் அணைக்கு செல்வது எப்படி?
இந்த அணையானது, விழுப்புரம் மாவட்டம் பேரணி மற்றும் கூட்டேரிப்பட்டுக்கு அருகில் அமைந்துள்ளது. அதாவது புதுச்சேரி மையத்தில் இருந்து சரியாக 40 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. நீங்கள் google maps இல் நெடுமொழியனூர் அணைக்கட்டு என்று தேடினாலே இதற்கான சரியான வழி கிடைத்து விடுகிறது. அதை அப்படியே பின்தொடர்ந்து செல்லுங்கள். புதுவையிலிருந்து மேட்டுப்பாளையம்-வானூர்-பரங்கனி-பெரும்பாக்கம்-மயிலம்-செண்டூர்-நெடி வழியே இந்த அணைக்கட்டை எளிதில் அடையலாம். இந்த இடத்திற்கு சொந்த வாகனத்தில் செல்வதே சிறந்தது!
என்ன மக்களே! இந்த வார இறுதியிலே இங்கு சென்று வந்து விடலாமா?



Click it and Unblock the Notifications



