» »இராவணனை ஜடாயு தாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க இடம் எது தெரியுமா?

இராவணனை ஜடாயு தாக்கிய வரலாற்று சிறப்பு மிக்க இடம் எது தெரியுமா?

Posted By: Udhaya

ஆந்திராவின் தலைநகர் ஹைதராபாத்துக்கு வடகிழக்கே 309 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் சிறிய நகரமான பத்ராச்சாலம், கம்மம் மாவட்டத்தில் கோதாவரி ஆற்றங்கரையோரம் எழிலே உருவாய் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த சிறிய நகரத்தில் ஸ்ரீ இராம பிரான் சிறிது காலம் வாழ்ந்ததாக சொல்லப்படுவதால் பத்ராச்சாலம் நகரம் இந்தியா முழுவதும் மிகவும் பிரபலம். இதன் காரணமாக ஏராளமான பக்தர்கள் கூடும் புகழ்பெற்ற யாத்ரீக ஸ்தலமாக பத்ராச்சாலம் நகரம் திகழ்ந்து வருகிறது.

பத்ராச்சாலம் நகரத்தின் பெயர் 'பத்ரகிரி' என்ற வார்த்தையிலிருந்து பெறப்பட்டதாகும். அதாவது புராண கூற்றின் படி, மேரு மற்றும் மேனகாவுக்கு வரம் வாங்கி பிறந்த குழந்தையே பத்ரா என்று சொல்லப்படுகிறது. இன்று அயோத்திக்கு பிறகு இராம பிரானின் பக்தர்கள் மிகவும் முக்கியமாக கருதுவது இந்த பத்ராச்சலம் நகரைத்தான்.

 சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

பத்ராச்சலம் நகரில் சுற்றுலாப் பயணிகள் அதிகமாக கூடும் இடங்களாக ஜடாயு பக்க, பர்ணசாலா, தும்முகுடேம், குண்டாலா ஆகிய பகுதிகள் அறியப்படுகின்றன. இந்த நகரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆலயங்களான ஸ்ரீ சீதா இராமச்சந்திர சுவாமி கோயில் மற்றும் பத்ராச்சல இராமர் கோயில் ஆகிய இரண்டு கோயில்களுக்கும் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வந்து செல்கின்றனர்.

Adityamadhav83

 ஜடாயு பக்க

ஜடாயு பக்க

பத்ராச்சலம் நகரிலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்திருக்கும் ஜடாயு பக்க என்ற புராணச் சிறப்பு வாய்ந்த பகுதி எடபக்க என்ற பெயராலும் பிரபலமாக அறியப்படுகிறது. ஹிந்து புராணத்தின் படி கழுகளின் ராஜாவான ஜடாயு, இராவணன் சீதா தேவியை கடத்திச் செல்லும் போது இந்த இடத்தில்தான் அந்த அசுரனை வழிமறித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது. அதாவது இராவணன் தன்னை புஷ்பக விமானத்தில் இலங்கைக்கு கடத்திச் செல்லும் போது சீதா தேவி எழுப்பிய அபயக் குரலைக் கேட்டு இராவணனுடன் ஜடாயு இந்த இடத்தில் போர் புரிந்தார். ஆனால் இந்த யுத்தத்தில் தோல்வியுற்ற ஜடாயுவின் இரு கைகளையும் இராவணன் வெட்டி வீழ்த்திவிட்டான். அந்த கைகளில் ஒன்று ஜடாயு பக்க இடத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ரேக்காபள்ளி என்ற இடத்தில் விழுந்ததாக கூறப்பபடுகிறது.

அதன் பிறகு சீதா தேவியை பற்றி விவரமறிய ஜடாயுவை சந்தித்த இராம பிரான் இராவணனுடன் நடந்த யுத்தத்தில் ஜடாயுவின் கைகள் வெட்டப்பட்ட செய்தியறிந்து மிகவும் மனவருத்தம் அடைந்தார். இதனையடுத்து ஜடாயுவுக்கு அடிபட்ட பகுதிகளில் தன் கைகளை கொண்டு தடவிக் கொடுக்க ஜடாயுவின் காயங்கள் குணமானதாக புராணம் கூறுகிறது.

Nivedita

பர்ணசாலா

பர்ணசாலா


பத்ராச்சாலம் நகரிலிருந்து 32 கிலோமீட்டர் தொலைவில், கம்மம் மாவட்டத்தின் தும்முகுடேம் மண்டலத்தில் அமைந்திருக்கிறது பர்ணசாலா கிராமம். இந்த கிராமத்தில் ஸ்ரீ இராமச்சந்திர மூர்த்தி தன்னுடைய 14 வருட வனவாசத்தின் சில காலங்களை சீதா தேவி மற்றும் லக்ஷ்மனனுடன் கழித்ததாக சொல்லப்படும் புராணச் செய்தியால் பர்ணசாலா கிராமம் புனித யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்களிடையே பிரபலமாக அறியப்படுகிறது. அதோடு இராம பிரான் பர்ணசாலா கிராமத்தின் காடுகளில்தான் குடிசை கட்டி வசித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த கிராமத்துக்கு அருகில் ஓடிக் கொண்டிருக்கும் ஓடையில்தான் சீதா தேவி இராமாயண காலத்தில் நீராடியதாகவும், துணிகளை சுத்தம் செய்ததாகவும் நம்பப்படுகிறது.

Adityamadhav83

ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில்

ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில்

பத்ராச்சலம் நகரின் முக்கியமான ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில் புராணச் சிறப்பு வாய்ந்த பர்ணசாலா கிராமத்திலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோயில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி மற்றும் சீதா தேவி இருவருக்காகவும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி சீதாவை காப்பாற்ற இலங்கை சென்ற போது கோதாவரி நதியை கடந்து சென்ற இடத்தில்தான் இந்தக் கோயில் கட்டப்பட்டிருப்பதாக புராணம் கூறுகிறது. இதேபோல் இந்தக் கோயிலை பற்றி மற்றொரு சுவையான புராணச் செய்தியும் உள்ளது. அதாவது கபீர் என்ற இஸ்லாமியர் ஒருவருக்கு இந்தக் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன் காரணமாக கோயிலில் இருந்த சிலைகள் எல்லாம் திடீரென மாயமானது. அதன் பிறகு கபீர் கோயிலுக்குள் நுழைந்த பிறகுதான் சிலைகள் யாவும் திரும்பவும் தோன்றியதாக கூறப்படுகிறது. இவைபோன்ற எண்ணற்ற புராணச் செய்திகளின் பின்புலத்தில் ஸ்ரீ சீதா ராமச்சந்திர சுவாமி கோயில் பக்தர்கள் மற்றும் பயணிகளிடையே மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது.

Pranayraj1985

தும்முகுடேம்

தும்முகுடேம்


பத்ராச்சலம் நகரிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தும்முகுடேம் கிராமம், பாகற்காய் வடிவில் அமைந்திருக்கக்கூடிய சிறிய தீவுப் பகுதியாகும். இந்தக் கிராமத்தில்தான் கரா மற்றும் தூஷணன் என்ற இரண்டு அசுர சகோதரர்களின் படைகளை சேர்ந்த 14000 அரக்கர்களை ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி வதம் செய்ததாக புராணம் கூறுகிறது. இதன் பிறகு கொல்லப்பட்ட அரக்கர்களின் சாம்பலின் மீதுதான் தும்முகுடேம் கிராமம் நிர்மாணிக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. தும்முகுடேம் என்ற வார்த்தையில் உள்ள 'தும்மு' எனும் சொல்லுக்கு தெலுங்கில் சாம்பல் என்று பொருள்.

தும்முகுடேம் தீவில் வசிக்கக்கூடிய மக்கள் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை ஆத்மராமர் என்ற வடிவில் வழிபட்டு வருகின்றனர். இந்தத் தீவை அருகாமை பகுதிகளோடு இணைக்கும் உருதி வாய்ந்த பாலம் 100 ஆண்டுகள் பழமையானது. இது ஆர்த்தர் காட்டன் என்ற ஆங்கில கட்டிடக் கலை நிபுணரால் போக்குவரத்து வசதிக்காக கட்டப்பட்டது ஆகும்.

Adityamadhav83

பத்ராச்சல இராமர் கோயில்

பத்ராச்சல இராமர் கோயில்


பத்ராச்சலம் நகரிலிருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் பத்ராச்சல இராமர் கோயில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும், சீதா தேவிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு விஷ்ணுவின் மற்றொரு அவதாரமான நரசிம்ஹ மூர்த்தியையும் பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். அதோடு சிவபெருமானுக்கும் இந்தக் கோயிலில் தனி சன்னதி ஒன்று உள்ளது.

vimal_kalyan

ராமநவமி

ராமநவமி


பத்ராச்சல இராமர் கோயில் இராம பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரசித்தம் என்பதால் ஒவ்வொரு ராமநவமியின் போதும் இந்தக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அதுமட்டுமல்லாமல் ராமநவமி மற்றும் தசரா பண்டிகைகள் இந்தக் கோயிலில் மிகவும் கோலாகலமாகவும், ஆடம்பரமாகவும் கொண்டாடப்படும். ஒவ்வொரு ஆண்டும் 10 நாட்கள் நடக்கும் இந்த திருவிழாக்களில் இராவணின் உருவ பொம்மையை எரித்து பக்தர்கள் குதூகலத்துடன் விழாவை நிறைவு செய்வார்கள்.

Bcmnet

குண்டலா

குண்டலா எனும் அழகிய கிராமம் பத்ராச்சலம் நகரிலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், ஆந்திர தலைநகர் ஹைதராபாத்திலிருந்து 258 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்திருக்கிறது. இந்த கிராமத்திலிருக்கும் வெப்ப நீரூற்றில் நீராட ஒவ்வொரு பனிக் காலத்திலும் படைக்கும் கடவுளான பிரம்மா, காக்கும் கடவுளான விஷ்ணு மற்றும் அழிக்கும் கடவுளான சிவன் ஆகிய மூவரும் வந்து செல்வதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக புனித யாத்ரீகர்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் இந்த கிராமம் மிகவும் பிரபலமாக அறியப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த நீரூற்றில் நீராடினால் சரும நோய்கள் குணமாகுமென்றும், பாவங்கள் தீருமேன்றும் பக்தர்கள் மத்தியில் ஒரு நம்பிக்கை உள்ளது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

விமானம் மூலம்

பத்ராச்சலம் நகரிலிருந்து 300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் ஹைதராபாத் பன்னாட்டு விமான நிலையத்தை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு பயணிகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதே போல் ஏறக்குறைய அதே தொலைவிலேயே சென்னை பன்னாட்டு விமான நிலையமும் அமைந்திருக்கிறது.

ரயில் மூலம்

பத்ராச்சலம் நகரிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் கொத்தகுடேம் நகரில் பத்ராச்சலம் ரோட் ஸ்டேஷன் என்று அழைக்கப்படும் ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பின்பு பேருந்துகள் மூலம் வெகு சுலபமாக பத்ராச்சலம் நகரை அடைந்து விட முடியும்.


சாலை மூலம்
பத்ராச்சலம் நகருக்கு ஆந்திராவின் பிற பகுதிகளிலிருந்து எண்ணற்ற பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதோடு கம்மம் மற்றும் ஹைதராபாத் நகரங்களிலிருந்து பத்ராச்சலம் நகருக்கு தினசரி பேருந்து போக்குவரத்து உள்ளது.

காலநிலை

காலநிலை

பத்ராச்சலம் நகரை அக்டோபர் மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலங்களில் சுற்றிப் பார்க்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு பத்ராச்சலம் நகருக்கு அதன் பனிக் காலங்களில் சுற்றுலா வரும் பயணிகளில் எண்ணிகையும் கணிசமாகவே உள்ளது.