
தமிழகத்தின் பெரிய மாவட்டங்களில் முதலானது விழுப்புரம் மாவட்டமாகும். இதன் தலைநகரமாக விழுப்புரம் நகரம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சுற்றுலா செல்வதற்கு ஏற்ற வகையில் அதிக பொழுது போக்கு அம்சங்களுடன் கூடிய நிறைய இடங்கள் இருக்கின்றன. வாருங்கள் விழுப்புரம் மாவட்டத்தின் அழகிய சுற்றுலாத் தளங்களை கண்டு களிக்கலாம்.
விழப்பரையார்கள் என்பது ஒரு இனக்குழுவின் பெயர். விழுப்புரம் மாவட்டம் இருக்கும் இடத்தில் பூர்வீகமாக வாழ்ந்து வந்தவர்கள் என்று நம்பப்படுகிறது. ராஜ சபையில் பெருமதிப்பு கொண்டவர்கள். அரசர்களின் அவைகளில் பெரும் பதவிகளில் இவர்களே இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. சரி இந்த விழுப்புரத்தின் சுற்றுலாத் தளங்களைப் பற்றி காண்போம் வாருங்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள மொத்த சுற்றுலாத் தலங்கள்
திருக்கோவிலூர், கல்வராயல் மலை, தியாகதுர்கம், மேல்மலையனூர், வல்லம், செஞ்சி,மணிமுத்தாறு, கோமுகி ஆறு, கெடிலம் ஆறும், சங்கராபரணி ஆறு, செஞ்சி ஆறு, தென்பெண்ணை ஆறு, கப்பியாம்புலியூர் ஏரி, கெங்கவரம் ஏரி, சாலமேடு ஏரி, மல்லிகைப்பட்டு ஏரி, கோமலூர் ஏரி ஆகியன இந்த மாவட்டத்தின் இயற்கை மற்றும் சுற்றுலா அம்சங்கள் நிறைந்த இடங்களாகும்.
செஞ்சிக்கோட்டை, ரங்கநாதர்கோவில், சட் அட் உல்லா கான் மசூதி, திருவாமாத்தூர், எசாலம் ராமநாத ஈஸ்வரர் கோவில், மேல்மலையனூர் அங்காள பரமேஸ் வரி கோவில், சிங்கவரம் பாறைக் கோவில், வேங்கட ரமணா கோவில், கிருஷ்ணகிரி, மண்டகப்பட்டு, மேல்சித்தாமூர், திருநரங்கொன்றை, ஆரோவில், மைலம் முருகன் கோவில், திருவக்கரை பூங்கா, திருவெண்ணெய்நல்லூர், மரக்காணம் கடற்கரை என சுற்றுலாவுக்கு சிறந்த நிறைய இடங்கள் இங்கு காணப்படுகின்றன.

ஆன்மீகத் தலங்கள்
தமிழகம் பெரியார் மண். என்றாலும் இங்கு பக்தி மார்க்கமும் நெறிகளும் அதி தீவிரமாக நிறைந்து விளங்குகிறது. கடவுள் மேல் அன்பு கொண்டவர்களுக்கு சுற்றுலாவில் கூட கடவுள்தான் முதன்மையாகிறார். எனவேதான் தமிழகத்தின் அனைத்து முக்கிய சுற்றுலாத் தளங்களிலும் கோவில்களே முதன்மை தலமாக இருக்கின்றன. வாருங்கள் விழுப்புரம் மாவட்டத்தில் ஒரு ஆன்மீக பயணம் செல்வோம்.
திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில்
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் அமைந்துள்ள 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் பெருமாள் ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை ஒட்டி இல்லாமல், கோயிலை ஒட்டிய தெருக்களின் நுழைவாயில்களாக உள்ளன.
உலகளந்த பெருமாள் கோவில் கோபுரம் தமிழகத்தின் 5 வது பெரிய கோபுரமாகும். இந்த கோவிலை நடு நாட்டு திருப்பதி என்றும் அழைக்கிறார்கள்.
இந்த தலம் பஞ்ச கிருஷ்ண தலங்களில் ஒன்றாக உள்ளது.
மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில்
மேல் மலையனூர் அங்காளம்மன் கோவில் செஞ்சியிலிருந்து 32 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பிப்பிரவரி - மார்ச் மாதங்களில் இங்கு திருவிழா நடைபெறுகிறது.
மயான கொல்லை நிகழ்ச்சியில் பக்தர்கள் திரளாக கலந்துகொள்கின்றனர். பலவிதமான உணவு வகைகள், தானியங்களை சமைத்து, எரிந்து கொண்டிருக்கும் நெரிப்பில் போட்டு வழிபடுகிறார்கள்.
ஒவ்வொரு அமாவாசை நாளிலும் இங்கு விசித்திரமான ஒரு வழிபாடு நடைபெறுகிறது. பாம்பு குழி வழிபாடு என்று அழைக்கப்படும் இது இந்த பகுதியில் மிகவும் பிரபலமானது.
சிங்கவரம் ரங்கநாதர் கோவில்
சிங்கவரம் பகுதியில் இருக்கும் மலைக் கோவில் தென்னிந்தியாவின் அழகிய பாறைக் கோவில்களில் முக்கியமானது. இங்கு ரங்க நாதரின் சிலை சாய்ந்த நிலையில் 24 அடி நீளமான உட்புறத்துடன் ஒரே பாறையிலான அமைப்பில் உருவாக்கப்பட்டது.
பலருக்கு தெரியாத ஒரு விசயம் என்னவென்றால் திருவரங்கம் சன்னதியில் இருக்கும் சிலையை விட இந்த சிலை பெரியதாம்.

செஞ்சிக்கோட்டை
இந்தியாவிலிருக்கும் மிகப்பழமையான கோட்டைகளுள் ஒன்றாக புகழப்படும் செஞ்சி கோட்டை 9ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் சிறிய கோட்டையாக கட்டப்பட்டிருக்கிறது. பின்னர் 13ஆம் நூற்றாண்டுவாக்கில் குரும்பர்களால் விரிவுபடுத்தப்பட்டிருக்கிறது.
சத்ரபதி சிவாஜி பெருமிதம் கொண்ட கோட்டை
கி.பி 1677ஆம் ஆண்டு மராத்திய மன்னர் சத்ரபதி சிவாஜியால் இக்கோட்டை கைப்பற்றப்பட்டிருக்கிறது. சிவாஜி மன்னர் 'இந்தியாவிலேயே யாராலும் அவ்வளவு எளிதில் கைப்பற்றவே முடியாத கோட்டை' என்று செஞ்சிக்கோட்டையை புகழ்த்திருக்கிறார்.
பெயர்கள் பலவிதம்
1660 - 1677ஆம் ஆண்டுகளில் பிஜாபூர் நவாப்புகள் வசம் இருந்தபோது 'பாத்ஷாபாத்' என்றும், பின் மராத்தியர்கள் காலத்தில் 'சந்த்ரி' என்றும்,1698இல் கைப்பற்றிய முகலாயர்கள் 'நுஸ்ரத்கந்த்' என்றும், பின்னர் பிரஞ்சு மற்றும் ஆங்கிலேயர்கள் காலத்தில் கிஞ்சி என்றும் அழைக்கப்பட்டிருக்கிறது.
அழகிய அமைப்பு கொண்ட அதன் அமைவிடம்
செஞ்சிக்கோட்டை மூன்று மலைகளின் நடுவே அமைந்திருக்கிறது. வடக்கே கிருஷ்ணகிரியும், மேற்கே ராஜகிரி மலையும் தென்கிழக்கே சந்திராயன் துர்க்கை மலையும் இக்கோட்டைக்கு இயற்கை அரணாக திகழ்கின்றன.

திருவெண்ணைநல்லூர்
விழுப்புரத்திலிருந்து 20 கிமீ தொலைவில் திருக்கோவிலூர் சாலையில் அமைந்துள்ளது திருவெண்ணைநல்லூர். இங்கு பழமை வாய்ந்த சிவன் கோவில் ஒன்று உள்ளது. இது புராதான பழமை வாய்ந்த நகரமாகும்.
ஈசன் லிங்கமாகும் முன் கழற்றிவைத்த காலணி, இப்ப இங்கதான் இருக்காம்!

திருவக்கரை
*கல்மரங்களுக்கு பெயர் பெற்ற ஒரு பகுதி திருவக்கரை. இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை ஆகும்.
*திருவக்கரையில் அமைந்துள்ள சந்திரமவுலீஸ்வரர் கோவில் இந்த பகுதியில் மிகவும் பிரபலமானது. உலகிலேயே மிகவும் அரிய வகை லிங்கமாகிய மும்முக லிங்கம் இந்த கோவிலில் காணப்படுகிறுது.
*வராக நதி என்று அழைக்கப்படும் சங்கர பாணி நதியின் கரையில் இந்த கோவில் அமைந்துள்ளது.

சட்-அட்-உல்லா கான் மசூதி
போர் வெற்றியைக் குறிக்கும் வகையில் கட்டப்பட்டது இந்த பகுதி. 1713ம் ஆண்டு கோட்டையை கைப்பற்றிய சட் அட் உல்லா கான் இதை கட்டினார். இதன் தொடர்ச்சியாக ராஜகிரி கோட்டை அமைந்துள்ளது. இங்குள்ள கல்வெட்டின்படி இதன் பழமையை 1717ம் ஆண்டில் கட்டப்பட்டதாக தெரிகிறது.

திருவாமாத்தூர்
*1500 ஆண்டுகள் பழமையானது என்று நம்பப்படும் சோழர்களின் ஆலயம் ஒன்று இங்கு அமைந்துள்ளது. இது அபிராமேஸ்வர் கோவில் என்று அறியப்பட்டாலும், இதன் அம்மன் முத்தாம்பிகை பெயராலே பலரால் அழைக்கப்படுகிறது.
*இந்த கோவில் சென்னை - விழுப்புரம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
*கோவிலில் 7 அடுக்கு கோபுரம் நிலைநாட்டப்பட்டுள்ளது.
*முத்தாம்பிகை தவிர விநாயகர், முருகன், நவகிரகங்கள் மற்றும் துர்க்கை அம்மன் சன்னதிகளும் இங்கு அமைந்துள்ளன.

கிருஷ்ணகிரி
*கிரானைட் பாறைகள் நிறைந்த சிறிய மலைப் பகுதி இதுவாகும்.
*செஞ்சியில் இருந்து திருவண்ணா மலை வரை செல்லும் முதன்மை சாலையில் ராஜ கிரி பகுதிக்கு வடக்கே அமைந்துள்ளது.
*இந்த மலையில் அமைந்துள்ள கோட்டையானது செங்குத்தாக மேல் நோக்கி எழும் படிக் கட்டுகளைக் கொண்டுள்ளது.
*காண்பதற்கு மிக அழகாக இருக்கும் இந்த கோட்டைக்கு ஒருமுறையேனும் சென்று வரவேண்டும்.

மேல்நாரியப்பனூர் தேவாலயம்
*100 வருடங்கள் பழமையானதாக கருதப் படும் இந்த தேவாலயம் கிறித்துவர்களிடையே பிரபலமானதாக அறியப்படுவது. இது சின்ன சேலத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
*ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 13ம் தேதி தவறாமால் விழா எடுக்கப்படுகிறது.

மரக்காணம் கடற்கரை
*புதுச்சேரியில் இருந்து 22 கிமீ தொலைவில் வானூர் அருகே அமைந்துள்ளது இந்த உப்புத் துறை கடற்கரை.
*கரையிலிருந்து கடலைப் பார்ப்பதற்கு மிகவும் அழகானதாக இருக்கும்.