» »லியோனார்டோ டி கேப்ரியோவிற்குப் பிடித்த ஊர்!

லியோனார்டோ டி கேப்ரியோவிற்குப் பிடித்த ஊர்!

Written By: Staff

ஒரு சுற்றுலா தளத்தின் சிறப்பை வெறும் ரம்மியமான சூழல் மட்டும் தீர்மானிப்பதில்லை, கூடுதலாக, அந்த இடத்தைச் சுற்றி பின்னப்பட்ட ஐதீகங்களும், வரலாற்றுப் பின்னணியும்தான். அப்படி ஒரு அழகிய மலைவாசஸ்தலத்தைப் பற்றித்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

Ramakkalmedu

Photo Courtesy : Editzz by me

கடந்த சில வருடங்களாக‌, சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் மலைவாசஸ்தலங்களில் ராமக்கல்மேடு முதன்மையானது. கேரள-தமிழக எல்லையில் அமைந்திருக்கும் இந்த மலைப்பிரதேசத்தின் பெயரிலேயே இதற்கான வரலாறு இருக்கிறது. ராமர், சீதாவைத் தேடிச் சென்ற சமயத்தில், இந்த மலைப்பிரதேசம் வழியாக அவர் செல்ல நேர்ந்தது. அவரின் பாதம், இந்த இடத்தில் இருந்த ஒரு உயரிய கல்லின்மீது பட்டதால் இந்த இடத்திற்கு ராமக்கல்மேடு என்ற பெயர் வந்தது.

தேக்கடி, மூணாறு என்ற இரு பெரும் சுற்றுலா இடங்கள் ராமக்கல்மேடு பக்கத்தில் இருப்பதால், இந்த இடம், உள்ளூர் முதல் வெளிநாட்டுப் பயணிகள் வரை எல்லோரையும் தன்பால் ஈர்க்கிறது.

Kuravan_Kurathi

Photo Courtesy : Augustus Binu

ராமக்கல்மேடின் மிகப்பெரிய சிறப்பு : வருடம் முழுதும் வீசும் அற்புதமான காற்று. இதனால் ராமக்கல்மேடை, கேரளாவின் காற்றுத் தொட்டில் என்று அழைக்கிறார்கள். இன்னொரு பிரதான ஈர்ப்பு ராமக்கல்மேடில் இருக்கும் குறவன்-குறத்தி சிற்பம். ஆங்கிலேயர் காலத்தில், இடுக்கி அணையைக் கட்ட இவர்கள் உதவியதாக, கதைகள் சொல்லப்படுகிறது. இதன் நினைவாக, 2005'இல் இவர்களுக்கு மலை உச்சியில் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.

இதைக் காணவே சுற்றுலா பயணிகள் பலர் மலையேற்றம் செய்து இங்கு வருகின்றனர். இந்த மலை உச்சியிலிருந்து நீங்கள் பார்க்கும் காட்சி, அது தரும் அனுபவம், வார்த்தைகளில் விவரிக்க முடியாதது. ஒரு நல்ல தொலை நோக்காடி(Binocular) மூலம், ஒரு புறம், தேனி, ராட்சஸ‌ காற்றாலைகள், ஏன் வைகை அணை வரைகூட நீங்கள் பார்க்க முடியும். இன்னொரு புறம் கம்பம் சார்ந்த பகுதிகளைக் காணலாம்.

lushtop

Photo Courtesy : Balachand

மலையின் உச்சி; சுற்றி பசுமை; தூரத்தில் காற்றாலைகள்; சுற்றுப்புற நகரங்கள், இதமான தூறல்; அதிக ஜன நெருக்கடி கிடையாது - கடைகள்கூட கிடையாது; விளைவு குப்பைகள் இல்லாத சுத்தமான இடம். இவற்றைவிட ஒரு சுற்றுலா இடத்தில் உங்களுக்கு என்ன வேண்டும் ?

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் லியோனார்டோ டி கேப்ரியோ , பூமியில் ஒரு சொர்க்கம் உண்டெனில் அது ராமக்கல்மேடு என்று சொல்லியிருக்கிறார்.

ராமக்கல்மேடு செல்ல‌, செப்-முதல் மே வரை சிறந்த பருவ காலம்.

ராமக்கல்மேடு செல்ல :

தேக்கடியிலிருந்து 45 கி.மீ, மூணாறிலிருந்து 80 கி.மீ தொலவு.

மூணாறிலிருந்து நேரடி பேருந்துகள் கிடையாது. கட்டப்பனா என்ற இடம் வரை பேருந்துகள் இருக்கிறது. அங்கிருந்து 21 கி.மீ ராமக்கல்மேடு. ஒரு டாக்ஸிப் பிடித்து இந்த மலைப்பிரதேசத்திற்கு வரலாம்.