Search
  • Follow NativePlanet
Share
» »திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் மற்றும் கார்த்திகை தீபம் உருவான வரலாறு!

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயிலின் சிறப்புகள் மற்றும் கார்த்திகை தீபம் உருவான வரலாறு!

காசியில் இறந்தால் முக்தி, திருவாரூரில் பிறந்தால் முக்தி, சிதம்பரத்தை தரிசித்தால் முக்தி கிடைக்கும். ஆனால் நினைத்தாலே முக்தி தரும் தலம் தான் இந்த திருவண்ணாமலை! பஞ்சபூதத் தலங்களில் அக்னித் தலமாக விளங்கும் இந்த திருக்கோயில் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 233வது தேவாரத்தலமாகும். இக்கோயிலைப் பற்றிய சிறப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல ஓராயிரம் இருக்கின்றன. இந்த விசேஷ ஸ்தலத்தின் சிறப்புகள் பற்றியும், கார்த்திகை தீபம் உருவான வரலாறு பற்றியும் இங்கே காண்போம்!)

மலையே உருவான சிவபெருமான்

மலையே உருவான சிவபெருமான்

அக்னி பர்வதம் என்றழைக்கப்படும் திருவண்ணாமலையில் அருணாச்சல மலையாக எம்பெருமான் காட்சியளிக்கிறார். அண்ணாமலை என்றால் அண்ண முடியாத அதாவது அணுக முடியாத மலை என்று பொருள். ஈசனின் அருளின்றி எவரும் இந்த மலையை நெருங்கிட முடியாது. இன்றளவும் பல சித்தர்களும், முனிகளும் இங்கு வாழ்ந்து வருகிறார்களாம். எவரும் எளிதாக நெருங்க முடியாத அண்ணாமலையை அருணாச்சலமாய் சிவபெருமான் மலையுருவமாய் இங்கு வீற்றிர்ருக்கிறார். இது வெறும் மலை அல்ல! ஈசனின் மறு உருவம் என்பதே உண்மை!

தல வரலாறு

தல வரலாறு

படைக்கும் கடவுளான பிரம்மாவுக்கும், காக்கும் கடவுளான விஷ்ணுவுக்கும் தங்களில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் ஏற்பட்டது. இதை அறிந்த சிவபெருமான் அவர்கள் முன் ஜோதி வடிவில் தோன்றி அடியை விஷ்ணுவும், உச்சியை பிரம்மனும் காண வேண்டும், அப்படி முதலில் யார் கண்டு வருகிறீர்களோ, அவரே பெரியவர் என்று கூறினார். அன்னப்பறவையாக பிரம்மனும், பன்றியாக விஷ்ணுவும் உருமாறி தேடத் தொடங்கினர். பல யுகங்கள் ஆனாலும் அவர்களால் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிவபெருமானே முழு முதற் கடவுள் என்பதை உணர்ந்து கொண்டு இருவரும் அவரை வணங்கி நின்றனர். சிவபெருமானும் ஜோதி வடிவிலிருந்து ஒரு மலையாக மாறி காட்சி கொடுத்தார். அந்த மலை தான் கோயிலின் பின்புறம் அமைந்துள்ள அண்ணாமலை. பின்பு தன்னை வழிபாடு செய்வதற்கு ஏதுவாக லிங்கோத்பவராக காட்சி கொடுத்து அருளினார். இதுவே திருவண்ணாமலை கோயிலின் வரலாறு.

கார்த்திகை தீபம் உருவான வரலாறு

கார்த்திகை தீபம் உருவான வரலாறு

புராணங்கள் படி, விஷ்ணுவுக்கும் பிரம்ம தேவனுக்கும் சிவபெருமான் ஜோதி வடிவில் காட்சி கொடுத்த தினம் தான் கார்த்திகை திருநாள். அப்படி ஜோதிப் பிழம்பாக சிவன் தோன்றியதை உலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டுமென்று விஷ்ணுவும் பிரம்மனும் சிவனிடம் கோரினர். அதன்படி ஒவ்வொரு கார்த்திகையும் நீங்கள் வெளிப்படவேண்டும் என்று கூறினர். அதை நினைவுப்படுத்தத்தான் அக்னி பர்வதமான திருவண்ணாமலையின் மலை மீது தீபத்தை ஏற்றி வைக்கிறார்கள்.

செவ்வாய்க்கிழமை கட்டாயம் இங்கு செல்ல வேண்டும்

செவ்வாய்க்கிழமை கட்டாயம் இங்கு செல்ல வேண்டும்

சிவன் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கள் கிழமையில் நடைபெறுவதே வழக்கம். இதனை சோமவாரம், சோமப் பிரதிஷணம் என்று கூறுவார்கள். ஆனால், திருவண்ணாமலை அக்னி மலை. அக்னிக்குரிய நாள் செவ்வாய்கிழமை. அக்னிக்குரிய கிரகம் அங்காரன். ஆகவே இந்தக் கோயிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய்கிழமை அன்று தான் விசேஷ வழிபாடு நடக்கின்றது. செவ்வாய் கிழமை அன்று இந்த கோயிலுக்குச் சென்று வழிபடுவோர் பிறவிப் பிணியிலிருந்து விடுபட்டு இன்புற்று வாழ்வார்கள்.

அற்புதங்கள் நிகழ்த்தும் அர்த்தநாரீஸ்வரர்

அற்புதங்கள் நிகழ்த்தும் அர்த்தநாரீஸ்வரர்

கைலாயத்தில் ஆழ்நிலை தியானத்தில் இருந்த ஈசனின் கண்களை அன்னை பராசக்தி விளையாட்டாக விளையாட்டாக மூடியதால் இப்பிரபஞ்சமே இருண்டது.. இதனால் ஏற்பட்ட பாவத்தைப் போக்க பூவுலகம் வந்து காஞ்சிபுரம் கம்பை நதிக்கரையில் அன்னை காமாட்சியாக தவம் புரிந்தாள். ஒரு நாள் கம்பை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்னை காமாட்சி தான் அமைத்த சிவலிங்கம் கரையாமல் இருக்க மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டார். இதனால் அன்னையின் பாவத்தை சிவபெருமான் நீக்கினார்.

அப்போது அன்னை காமாட்சி "அய்யனே நீங்கள் என்னை எப்போதும் பிரியாதிருக்க தங்கள் திருமேனியில் எனக்கு இடபாகம் தந்தருள வேண்டும்" வேண்டினார். அதற்கு சிவபெருமான் அண்ணாமலை சென்று தவம் செய் என்றார். அவ்வாறே உமையும் தவம் செய்தாள். கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியும், கிருத்திகையும் சேரும் நாளில் மலையின் மீது பிரகாசமான ஒளி ஒன்று தோன்றியது. அதை நோக்கி கிரிவலம் சென்ற அன்னையை அழைத்து தனது திருமேனியில் இடபாகத்தை அளித்து ஆட்கொண்டார் சிவபெருமான் அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார்.

கார்த்திகை மகாதீபம்

கார்த்திகை மகாதீபம்

கார்த்திகை மகாதீபம் இக்கோயிலில் 10 நாள் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. விழாவின் இறுதி நாளன்று மாலை 6 மணிக்கு மேல் இறைவன் மற்றும் இறைவிக்கு பூஜைகள் செய்யப்பட்ட பின்பு, பத்து தீபங்களையும் மேளதாளத்துடன் வெளியே எடுத்துச் செல்லப்பட்டு கொடிக்கம்பம் அருகேயுள்ள தீபக்கொப்பரையில் ஒன்று சேர்த்து எரிய விடுவார்கள். அந்த நிமிடத்தில் அர்த்தநாரீஸ்வரர் வெளிவந்து காட்சி கொடுத்துவிட்டு உடனே உள்ளே சென்று விடுவார். இந்த இரண்டு நிமிட தரிசனத்தைக் காண அங்கு மக்கள் வெல்லம் கடலென திரண்டிருக்கும். அப்போது வாசல் வழியே பெரிய தீவட்டியை ஆட்டி மலையில் தயாராக இருப்பவர்களுக்கு சைகை காட்டுவார்கள். உடனே மகாதீபம் ஏற்றப்படும். மக்கள் அண்ணாமலைக்கு அரோகரா என கோஷமிட்டு தரிசனம் கண்டதும் தங்களது இல்லங்களில் தீபம் ஏற்றுவார்கள்.

மகாதீபம் எப்படி ஏற்றப்படுகிறது

மகாதீபம் எப்படி ஏற்றப்படுகிறது

ஏழடி உயரமுள்ள செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றுகிறார்கள். 3 டன் பசுநெய், 1000 மீட்டர் காடாதுணி திரி, 2 கிலோ கற்பூரம் இட்டு தீபம் ஏற்றுவார்கள். இந்த தீபத்தின் ஒளியானது சுமார் 30 கிலோ மீட்டர் தொலைவில் இருப்பவர்களும் கண்டு தரிசிக்கும் வகையில் வெளிச்சத்துடன் எரிகிறது. இங்கு இறைவன் ஜோதி வடிவானவன், அவனுடன் நாம் இரண்டற கலப்பதால் நமது முன்வினைப் பாவங்கள், கர்மவினைகள், பிறப்பு இறப்பு சுழற்சிகள் அனைத்தும் நீங்குவதே இந்த கார்த்திகை தீபம் ஏற்றப்படுவதின் தத்துவம்.

கோயில் இருக்குமிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்

கோயில் இருக்குமிடம் மற்றும் திறந்திருக்கும் நேரம்

அருள்மிகு அண்ணாமலையார் திருக்கோவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை நகரத்தில் அமைந்திருக்கிறது. இக்கோவிலுக்கு செல்ல தமிழகம் மற்றும் புதுவையிலிருந்தும் ஏராளமான பேருந்து வசதிகள் உள்ளன. ஆந்திரா, கர்நாடக, கேரள மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகளும் திருவண்ணாமலைக்கு இயக்கப்படுகின்றன. காலை 5.30 முதல் மதியம் 12.30 வரை. மாலை 3.30 முதல் இரவு 9.30 வரை கோவில் நடை திறந்திருக்கும்.

திருவண்ணாமலை கோயிலின் சிறப்புகள்

திருவண்ணாமலை கோயிலின் சிறப்புகள்

v சித்ரா பௌர்ணமி தினத்தன்றும் மாத பௌர்ணமி தினங்களிலும் திருவண்ணாமலை கிரிவலம் வந்து, அண்ணாமலையரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசித்து வணங்குபவர்களுக்கு குல சாபங்கள் நீங்கும். விருப்பங்கள் அனைத்தும் நிச்சயம் நிறைவேறும். இதற்கு சான்றாக அன்றைய தினத்தில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வருவதை காண முடியும்.

v கிரிவலம் வரும் வழியில் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நைருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் என "அஷ்டதிக் பாலகர்கள்" எனப்படும் எட்டு திசைகளின் அதிபதிகள் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கம் உள்ள கோவில்கள் இருக்கின்றன.

v கிரிவலப் பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் என்ற ஒன்று இருக்கிறது. இக்கோவிலில் இருக்கும் ஒரு மண்டபத்தில் இருக்கும் சிறிய இடுக்கின் வழியாக உள்ளே நுழைந்து, முன்பக்கமாக வெளியில் வந்து விநாயகரை வேண்டிக்கொள்வதால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பேறு கிடைக்கும் என்பது திடமான நம்பிக்கை ஆகும். பில்லி சூனிய பாதிப்புகள், மனநல பிரச்சனைகள் இன்ன பிற பிரச்சனைகள் அனைத்தும் கூட தீரும்.

v அண்ணாமலை கிருத யுகத்தில் அக்னி மலையாகவும், திரேதா யுகத்தில் மாணிக்க மலையாகவும், துவாபர யுகத்தில் தாமிர மலையாகவும், இக்கலியுகத்தில் கல் மலையாகவும் நம்மை காத்து அருள்கிறார்.

v அருணகிரிநாதர் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபட இந்த மலை மீது ஏறி மாய்த்துக் கொள்ள இருந்தாராம். அசரீரி ஒலி கேட்டு மெய் மறந்து நின்றவரின் உடலில் அனைத்து பிணிகளும் போய்விட்டன. அன்றுமுதல் அவர் சிவ பித்தனாய் மாறினார்.

v விசுவாமித்திரர், பதஞ்சலி, வியாக்ரபாதர், அகத்தியர், சனந்தனர் முதலானோர் வழிபட்ட லிங்கங்கள் இந்த கோயிலில் உள்ளன.

v சாதாரணமாக கோயில்களில் அஷ்டபந்தன மருந்து சாத்தி பிரதிஷ்டை செய்வது போல் இல்லாமல், இக்கோயிலில் அண்ணாமலையார் ஸ்வர்ணபந்தனம் அதாவது சுத்தமான தங்கத்தால் பிரதிஷ்டை செய்யப்படுகிறார்.

v ரமண மகரிஷி கடுந்தவம் இருந்து அருள் பெற்றதும் இத்தலத்தில் தான்.

இப்படிப்பட்ட பல சிறப்புகள் வாய்ந்த இரண்டாயிரம் ஆண்டு பழமையான திருத்தலம் இந்த திருவண்ணமலை!

Read more about: tiruvannamalai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X